அறிவுக் கண்ணைத் திறந்த வடை!


கிராமத்தில் கூலி வேலை செய்யும் ராமு, பிழைப்பின்றி தன் மனைவி சரஸ்வதியுடன் மிகுந்த வறுமையில் வாடினான். ஒரு நாள் அவன் வீட்டில் "எனக்கு வடை சாப்பிடணும் போல இருக்கு...பசிக்குது" என்றான் ராமு.
உடனே கோபமடைந்த சரஸ்வதி "வீட்டுல கொஞ்சம் கஞ்சி தான் இருக்கு...இதுவும் தீர்ந்தா அவ்வளவு தான். இதுல வடைக்கு நான் எங்க போவேன்? இதுக்கு தான் சென்னைக்கு போய் பிழைப்பு தேடுங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்" என கடிந்து கொண்டாள். ஆனால் தன் ஊரை விட்டு வேறெங்கும் போய் வேலை செய்ய ராமுவுக்கு தயக்கமாக இருந்ததால் அவள் பேச்சை கேட்கவில்லை.

அப்போது பக்கத்து வீட்டு குழந்தை தடுமாறியபடி ராமு வீட்டுக்குள் நுழைந்து, கீழே இருந்த கஞ்சிப் பானையை உருட்டி கவிழ்த்து விட்டது. அன்றைக்கு உணவுக்காக வைத்திருந்த கஞ்சி கொட்டிவிட்டதால் அழுத மனைவியிடம் "அடடே.. சரி கவலைப்படாதே..நான் வெளியே போய் ஏதாவது கொண்டு வரேன்" எனக் கிளம்பினான்.

அக்கிராமத்தில் பல இடங்களில் சுற்றித் திரிந்த ராமு, கடைசியாக கிராமத் தலைவர் வீட்டுக்குச் சென்றான். அங்கு வடை பாயாசத்துடன் தடபுடலாக விருந்து ஏற்பாடு நடந்தது. மிகுந்த பரபரப்பில் இருந்த தலைவரிடம் "ஐயா..ஏதாவது வேலை இருந்தா கொடுங்க...கொஞ்சமா கூலி கொடுத்தா போதும்" என்றான்.  அன்றைக்கு தலைவரின் தந்தைக்கு திதி என்பதால், கிணத்துல இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுக்குமாறு ராமுவிடம் கேட்டார் தலைவர்.
 

மகிழ்ச்சியுடன் வேகமாக நீர் இறைத்த ராமுவின் மூக்கை வடை சுடும் வாசனை துளைத்தது. தனக்கும் வடை தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் கிணற்றில் நீர் இறைத்தான். நீர் இறைத்து முடித்ததும் அவனுக்கு தலைவரின் மனைவி கொஞ்சம் பணம் கொடுத்தாள். அப்போது ராமு கெஞ்சலுடன் "ரொம்ப நன்றிங்க. வடை வாசனை நல்லாருக்கு. கொஞ்சம் கொடுங்கம்மா" என்றான். ஆனால் கோபமுற்ற தலைவரின் மனைவி "எங்களுக்கே சரியா பத்தல...வடையெல்லாம் கிடையாது போ போ" என பணத்தை அனுப்பி விரட்டி விட்டாள்.

ஏமாற்றத்துடன் நடந்து சென்ற ராமுவை, அரிசி மண்டி உரிமையாளர் சோமநாதன் அழைத்தார். அரிசி மூட்டைகளை கிடங்கில் இருந்து கடைக்கு கொண்டு வந்து போட்டால் வடை தருவதாக கூறினார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த ராமு, வேலையை சுறுசுறுப்புடன் செய்தான்.

சிறிது நேரத்தில் அங்கு விரைந்த ஒரு சிறுவன், சோமநாதனின் மனைவி
 வடை சுடும் போது எண்ணெய் கையில் ஊற்றிக் கொண்டதாகக் கூறினான. இதைக் கேட்டு பதறிய அவர், ராமுவிடம் கொஞ்சம் அரிசியை மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்.
 
தனது துரதிர்ஷ்ட்டத்தை எண்ணி நொந்து கொண்ட ராமு வீட்டை அடைந்தான். அவனிடம் "எங்க போனீங்க? இந்தாங்க, உங்களுக்குப் பிடிச்ச வடை" என முகமலர்ச்சியுடன் லட்சுமி கொடுத்தாள். அதைப்பார்த்து ஆச்சரியமுற்ற ராமு, கஞ்சிக்கே காசு இல்லையே வடை எப்படி வந்தது? எனக் கேட்டான். அப்போது பக்கத்து வீட்டுக் குழந்தை தட்டுத் தடுமாறி ராமு வீட்டுக்கு வந்தது. அந்தக் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அவர்கள் வீட்டில் வடை கொடுத்ததாக கூறினாள்.

அப்போது தான் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டான் ராமு. "நடக்கப் பழகுற குழந்தை கூட, தன் வீட்டை விட்டு வெளியே வந்து உலகத்தைப் பார்க்கத் துடிக்குது. ஆனா குடும்பத்தைக் காப்பாத்த வேண்டிய நான், பிறந்த ஊரை விட்டு வெளியே போக அடம் பிடிக்கிறேன். நான் திருந்திட்டேன். உடனே சென்னை போகப் போறேன்" என தீர்க்கமாக தன் மனைவியிடம் கூறினான்.

ராமுவின் பேச்சைக் கேட்டு லட்சுமி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இருவரும் வடையைப் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

0 comments:

Post a Comment

Flag Counter