வலையில் சிக்காத வயதான சிங்கம்

ஆங்கிலேயர்களுக்கெதிராக தன்மானமிக்க இந்தியர்கள் கிளர்ந்தெழுந்த காலம் அது! 1857ஆம் ஆண்டு, அந்நியர்களை எதிர்த்து ஆங்காங்கே பெருமளவில் கலவரங்கள் மூண்டன. இரும்புக்கரம் கொண்டு அனைத்துக் கலகங்களையும் முறியடிக்க முயன்ற ஆங்கிலேயர்களால் ஒரேயொரு வயதான சிங்கத்தை மட்டும் பிடிக்க இயலவில்லை. அந்த சிங்கத்தைப் பற்றி ஒரு நாட்டுப்புறப் பாடல் இவ்வாறு சித்தரிக்கிறது.

'தாடி நரைத்து உடல் தளர்ந்த ஆண் சிங்கம் ஆனாலும் ஆயிரம் இளஞ்சிங்கங்கள் அதற்கோர் இணையாகாது!'அத்தகைய வீரமிகுந்த சிங்கமாக வணிக்கப்படுபவர் பீஹார் மாநிலத்து ஜகதீஷ் பூரை ஆண்ட ராஜா குன்வர்சிங்.

உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விக்கிரமாதித்தனின் வம்சத்தில் உதித்தவர் என்று அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. சிறு வயதிலேயே தன் நண்பர்களுடன் காடுகளில் விளையாடிக் காலம் கழித்தவர், வாலிபனான பிறகும் பகைவர்களை எதிர்பாராது தாக்கிவிட்டு ஓடும் கொரில்லா போர் முறையைத்தான் காடுகளில் பயிற்சி செய்து வந்தார்.

 இந்தியாவில் வர்த்தகம் புரிய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி சிறிது சிறிதாக ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. அந்தக் காலத்தில் இந்திய மன்னர்களிடையே நிலவி வந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம், ஒவ்வொரு ராஜ்யமாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அவர்கள் குன்வர்சிங் ஆண்ட ஜகதீஷ்பூரையும் விட்டு வைக்கவில்லை. ஆங்கிலேயர்களின் வெள்ளம் போன்ற படையைத் தன்னால் எதிர் கொள்ள முடியாது என்று உணர்ந்த குன்வர்சிங் தன்னுடைய வீரர்களுடன் காடுகளின் தஞ்சம் புகுந்தார்.

அங்கிருந்தவாறே, ஆங்கிலேயர்களுக்கு இடையறாத தொல்லை கொடுத்து வந்தார். ஒருநாள், ஆங்கிலேயர்கள் லக்னோவைக் கைப்பற்றும் தாக்கத்துடன் ஔத் பகுதி வழியே படையுடன் சென்று கொண்டிருந்த தகவல் குன்வர்சிங்கின் செவிகளை எட்டியது. அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர்களை எதிர்த்துப் போராட எண்ணிய அவர், திடீரென்று செல்லும் வழியில் எதிர்பாராமல் தாக்கினார். அவரது தாக்குதலால் ஆங்கிலேயர்கள் மிகவும் தடுமாறிப் போயினர். அவர்களுடைய படையில் அவ்வப்போது பலத்த சேதம் உண்டாக, அவர்களால் லக்னோ நோக்கிச் செல்லவே முடியவில்லை. அதனால் தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்டு ஆங்கிலேயப் படை அசீம்கர் எனும் இடத்திலேயே நின்று விட்டன.

தங்களுடைய திட்டத்திற்குப் பெரும் இடையூறு விளைவித்த குன்வர்சிங்கை முதலில் சிறைப்பிடிக்க விரும்பிய ஆங்கிலேயர்கள், அதற்கான வழிகளில் கவனம் செலுத்தினர். அப்போது ஆங்கிலேயர்களின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு கானிங் பெருங்கவலையில் ஆழ்ந்தார். ‘இந்தியன் மியூடினி’ எனும் சரித்திர நூலை இயற்றிய  மல்லிகன் என்பவர் இதைப்பற்றி, "குன்வர்சிங்கின் நேஞ்சுறுதி, வலிமை, தந்திரமான போர் முறைகள் ஆகியவை கவர்னர் ஜெனரலை சிந்திக்க வைத்தன. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு குவார்சிங் முட்டுக் கட்டையாகஇருப்பார் என்பதை அவர் நன்கு உணர்ந்தார்" என்று குறிப்பிடுகிறார். அவரை  ஒடுக்கினாலேயொழிய நிம்மதியில்லை என்று உணர்ந்த லார்டு கானிங் லார்டு மார்க் கெர் என்பவரின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி குன்வர்சிங்கை சிறைப்பிடிக்கக் கட்டளையிட்டார்.

அசீம்கரிலுள்ள ஆங்கிலேயப் படைகளுக்குத் துணையாகவும், அதே சமயத்தில் தன்னைப் பிடிப்பதே பிரதான நோக்கமாகவும் கொண்டு ஒரு பெரும் படையைத் தடுத்து நிறுத்த நினைத்தார். பெரும் பீரங்கிப் படைகளுடன் வந்தும், கெர் தலைமையிலான ஆங்கிலேய வீரர்களினால் குன்வர்சிங்கை எதிர்த்துப் போரிட இயலவில்லை. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, ஆங்கிலேயர்களின் பீரங்கிகளின் முன்னால் குன்வர்சிங்கின் பலம் குன்றியது. கெர் தலைமையிலான ஆங்கிலேயர்கள் அசீம்கருக்குள் நுழைந்து, அங்கு ஏற்கெனவே இருந்த ஆங்கிலேயப் படையுடன் சேர்ந்து கொண்டனர்.

 
உடனே, குன்வர்சிங் ஆங்கிலேயர்கள் இருந்த சுசீம்கரை முற்றுகையிட்டு அவர்களால் வெளியேற முடியாதபடிச் செய்து விட்டார். அதே சமயம், அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, ஜகதீஷ்பூர் சென்றடையவும் ஒரு திட்டம் தீட்டினார். அசீம்கரிலிருந்து வெளியேற தானு என்ற நதியின் பாலத்தைக் கடந்து வர வேண்டும். அதன் வழியே வெளியே முயன்ற பகைவர்களை, குன்வர்சிங்கின் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

திடீரென ஒருநாள் பாலத்தைக் கடக்க முயன்ற ஆங்கிலேயர்களைத் தடுக்க குன்வர்சிங்கின் வீரர்கள் யாருமில்லை. இனி, அதன் வழியே சென்று குன்வர்சிங்கைப் பிடித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய பகைவர்கள் ஏமாந்து போயினர். குன்வர்சிங் தன் வீரர்களுடன் காஜிப்பூர் வழியாக ஜகதீஷ்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து தப்பி ஓடும் குன்வர்சிங்கைப் பிடிக்க டக்ளஸ் என்பவர் தலைமையில் ஒரு பெரும் படை விரைந்தது.

சில நாள்களிலேயே, குன்வர்சிங்கின் வீரர்களை ஆங்கிலேயர்கள் நெருங்கிவிட, மீண்டும் அவர்களிடையே பயங்கரப் போர் மூண்டது. போரில் குன்வர்சிங்கின் படைக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் குன்வர்சிங் மனம் தளரவில்லை. தனது படையைப் பல சிறு அணிகளாகப் பிரித்து, வெவ்வேறு திசைகளில் தப்பிச் சென்று, மீண்டும் குறிப்பிட்ட இடங்களில் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் எந்த வழியில் தப்பிச் செல்கின்றனர், எங்கே மீண்டும் சந்திக்கின்றனர் என்பதெல்லாம் புரியாமல் ஆங்கிலேயர்கள் குழம்பினர். கடைசியில் குன்வர்சிங் கங்கை நதியை நோக்கிச் செல்வதை அறிந்து, ஆங்கிலேயர்களின் படை அவர்களைப் பின் தொடர்ந்து சென்றது.

தந்திரம் மிக்க குன்வர்சிங் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டார். கங்கை நதிக்கரையில் எண்ணிக்கையில் மிக அதிகமான ஆங்கிலேயர்களின் படையை நேருக்கு நேர் எதிர்த்துப் போரிட முடியாது என்று உணர்ந்தார். குன்வர்சிங் படகுகளின் மூலம் கங்கையைக் கடக்காமல், யானைகளில் ஏறி பாலிலா என்ற ஒரு இடத்தில் கங்கையைக் கடக்கத் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் ஆங்கிலேயர்களுக்குத் தெரிந்தது.


 உடனே, அந்த இடத்தில் ஆங்கிலேயப் படை குவிந்தது.  ஆனால், வெகு நேரம் காத்திருந்தும் குன்வர்சிங் அங்கே வரவேயில்லை. பிறகுதான், குன்வர்சிங் தவறான வதந்தியைப் பரப்பியுள்ளார் என்றும், சிவபுரி என்ற இடத்தில் ஏற்கெனவே படகுகளின் மூலம் கங்கையைக் கடந்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வந்தது. உடனே, ஆங்கிலேயர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் குன்வர்சிங்கின் வீரர்களில் பெரும்பாலானோர் கங்கையைக் கடந்து விட்டனர் என்று தெரிந்தது. ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் பீரங்கிகளை இயக்கிப் படகுகளில் சென்று கொண்டுஇருந்தவர்கள் மீது குண்டுமாரிப் பொழிந்தனர்.

துர்பாக்கியவசமாக, குன்வர்சிங்கின் மணிக்கட்டில் ஒரு குண்டு பட, அவர் மணிகட்டு எலும்பு உடைந்து சுக்கு நூறாகியது. அவர் தப்பித்துச் சென்று ஜகதீஷ்பூரை அடைவதற்குள், காயம் ரணமாகி ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அவர், சற்றும் தயங்காமல் தனது வாளினால் காயம்பட்ட தன் கையைத் தானே வெட்டி விட்டார். ஒருவாறாக, குவார்சிங் பகைவர்களிடமிருந்து தப்பி, தனது சொந்த ராஜ்யமான ஜகதீஷ்பூரை அடைந்தார்.

கோபத்தில் கொதித்தெழுந்த பகைவர்கள் ஜகதீஷ்பூரை அடைந்து குன்வர்சிங்கின் வீரர்களோடு பயங்கரமாகப் போர் நிகழ்த்தினர். ஆனால், அவர்களினால் குன்வர்சிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. போரில் தோல்வியுற்ற ஆங்கிலேயர்கள், ஜகதீஷ்பூரைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டனர். மீண்டும் அங்கு குன்வர்சிங் மன்னர் ஆனார். ஆனால் அதற்குப் பிறகு அதிக ஆண்டுகள் அவர் உயிருடன் இல்லை. குன்வர்சிங் இறந்த பிறகு அவருடைய
சகோதரர் அமர்சிங் பதவியேற்றார். ஆனால் இறுதியில் ஜகதீஷ்பூரை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற, அமர்சிங் தப்பியோடினார். அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது.

0 comments:

Post a Comment

Flag Counter