முயற்சி திருவினையாக்கும்

 
பழுவூரை ஆண்டு வந்த மன்னர் கிருஷ்ணபூபதி தன் குடிமக்களின் நலனில் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்தார். அவருடைய பட்டத்து ராணியான ஜோத்சனா சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தாள். ஒருமுறை, ராணி அவரிடம் மக்களின் நலனை மந்திரிகளின் வாயிலாக அறிவதை விட, தானே நேரில் சென்று கண்டறிவது சிறப்பானது என்றும், அதற்காக இரவு நேரங்களில் மாறுவேடமணிந்து மக்களோடு கலந்து பழகி, அவர்களுடைய குறைகளை அவர்கள் வாயிலாகவேக் கேட்டறிய வேண்டுமென அறிவுரை பகன்றாள். அது சரியென்று தோன்றவே, மன்னர் அன்று முதல் மாறு வேடமணிந்து நகர்வலம் வரத்தொடங்கினார்.

ஒருநாள் இரவில் மன்னர் முதியவர் போல் வேடமணிந்து நகர்வலம் வருகையில், சத்திரத்தின் வாயிலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த ஒரு தம்பதியைப் பார்த்தார். உடனே, தன் குதிரையை விட்டு இறங்கிய மன்னர் அவர்களுடைய உரையாடல் செவிகளில் விழும் தொலைவில் அமர்ந்து கொண்டார். "நாம் தலைநகருக்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. கையிலிருந்த பணமும் செலவாகி விட்டது. இன்னமும் உங்களால் மன்னரை சந்திக்கவே முடியவில்லை. அப்படியே சந்தித்தாலும் என்ன லாபம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்த ஒன்றேயொன்று கதை சொல்வது மட்டும்தான்! அந்த திறமைக்கு மன்னர் அள்ளிக் கொடுப்பார் என்று எப்படி நம்புகிறீர்கள்?" என்று கேட்டாள் அந்த நபரின் மனைவி!

அதைக்கேட்ட அவர் புன்னகையுடன், "வேறு யார் அதை பாராட்டாவிட்டாலும், மன்னர் கிருஷ்ணபூபதி கட்டாயம் ரசிப்பார்! அவரை மட்டும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும்! அதன்பிறகு என் கதை சொல்லும் திறமையினால் அவரைக் கட்டாயம் மகிழ வைத்து விடுவேன்! இப்படித்தான் ஒரு நாவிதன் ஒரு நாட்டு மன்னரை சந்திக்க முயன்று வெற்றி பெற்றான். அதற்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளைக் கதையாகக் கூறுகிறேன், கேள்!" என்று அவர் சொல்லிவிட்டு, கதையைத் தொடங்கினார்.
 பல ஆண்டுகளுக்கு முன், கங்கைபுரியில் சுந்தரம் என்ற ஒரு நாவிதன் வசித்து வந்தான். முடி திருத்துவதை வெறும் கடமையாக மட்டும் கருதாமல், அதை ஒரு கலையாக பாவித்தான்.  அந்தக் கிராமத்தில் அனைவரும் சுந்தரத்திடம்தான் முடி திருத்திக் கொள்வர்!

ஊரிலுள்ள அனைவரும் அவனைப் பாராட்டுவதைக் கண்டு, நாளடைவில் அவனுக்குள் ஓர் ஆசை துளிர் விட்டது. தனது ராஜ்யத்தின் மன்னருக்கே முடி திருத்தும் வாய்ப்பு கிடைத்தால், மன்னர் அகமகிழ்ந்து போய் தன்னை ஆஸ்தான நாவிதனாகவே ஆக்கிவிடுவார் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அதனால் ஒருநாள் தன் மனைவியுடனும், பிள்ளையுடனும் தலைநகரை அடைந்தான்.

ஆனால் அவன் நினைத்ததுபோல் அவன் எண்ணம் அத்தனை எளிதாகக் கை கூடவில்லை. அரண்மனை வாயிலை அடைந்ததும், வாயில்காப்போரிடம் "நான் முடிதிருத்தும் கலையில் மிக வல்லவன். மன்னரிடம் என் திறமையைக் காட்ட விரும்புகிறேன். தயவு செய்து மன்னரை சந்திக்க என்னை அனுமதியுங்கள்" என்று கெஞ்சினான்.

அவனுடைய வேண்டுகோளைக் கேட்ட காவலர்கள் அவனை ஏளனம் செய்து திருப்பியனுப்பி விட்டனர்.  ஆனால் சுந்தரம் தன் முயற்சியைக் கைவிடவில்லை. தினமும் அரண்மனை வாயிலில் மணிக்கணக்காக நின்று பலமுறை காவலர்களைக் கெஞ்ச ஆரம்பித்தான். ஆனாலும் அவர்கள் மசியவில்லை. ஒருநாள் அவர்களில் ஒருவன், "ஏன் தம்பி வீணாக இங்கு வந்து தினமும் உன் நேரத்தை வீணாக்குகிறாய்? மன்னருக்கு ஏற்கெனவே ஒரு ஆஸ்தான நாவிதன் இருக்கிறான்.
அவன் பெயர் மாதவன். அவனைத் தவிர மன்னர் யாரிடமும் முடிதிருத்திக் கொள்ள மாட்டார். அதனால் நீ இங்கு வந்து நின்று கொண்டு எங்களைக் கெஞ்சிப் பயனில்லை" என்றான். தன் முயற்சியில் சற்றும் தளராத சுந்தரம் உடனே மாதவனின் முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன், அவனைப் பற்றிய விவரங்களையும் சேகரித்தான். மாதவன் அறுபது வயதுக் கிழவன் என்றும், அவனுக்குப் பிள்ளை, குட்டிகள் கிடையாது என்றும் தெரிந்து கொண்டான். உடனே, தன் மனைவியுடன் கூடிப் பேசி ஒரு திட்டம் தயாரித்தான்.

அதன்படி, தன் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு மறுநாளே மாதவனைத் தேடிச் சென்றான். அந்த சமயம் மாதவன் தனது வீட்டு வாயிலில் கொய்யா மரத்தினடியில் அமர்ந்திருக்க, அவன் மனைவி சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். எந்தவிதத் தயக்கமுமின்றி உள்ளே நுழைந்த சுந்தரம், "அப்பா! சௌக்கியமா?" என்று குசலம் விசாரித்துக் கொண்டே, மாதவனின் அருகில் அமர, சுந்தரத்தின் மனைவி மாதவனின் மனைவியை அணுகி, "அத்தே! மருமகள் நானிருக்க நீங்கள் ஏன் காய் நறுக்க வேண்டும்?" என்று அந்த வேலையைத் தான் செய்யத் தொடங்கினாள்.

சுந்தரத்தின் சிறு பிள்ளை "அப்பா! எனக்கு இந்த மரத்திலிருந்து கொய்யாப் பழம் பறித்துத் தா!" என்று அடம்பிடிக்கத் தொடங்கினான்."இன்னொருத்தர் வீட்டில் வந்து இப்படியெல்லாம் கேட்கக்கூடாது" என்று கூற, அந்தச் சுட்டிப் பையன் "இது இன்னொருத்தர் வீடு இல்லை! என் தாத்தாவின் வீடு!" என்று ஒரு போடு போட்டான். தன்னைத் ‘தாத்தா’ என்று அந்த சிறுபிள்ளை சொந்தம் கொண்டாடியதும் மாதவன் அந்தச் சிறுவனைக் கட்டியணைத்துக் கொண்டான்.

பிள்ளை பாக்கியம் அற்ற மாதவன் தம்பதி சுந்தரத்தைத் தங்கள் மகனாகவும், அவன் மனைவியைத் தங்கள் சொந்த மருமகளாகவும் நடத்த ஆரம்பித்தனர். தவிர சுந்தரமும் முடிதிருத்தும் தொழில் செய்கிறான் என்று தெரிந்ததும், மாதவனுக்கு அவனிடம் நெருக்கம் அதிகரித்தது. சில நாள்களிலேயே, மன்னருக்கு முடி திருத்தச் செல்லும்போது மாதவன் தன்னுடன் சுந்தரத்தையும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். ஒருநாள் தற்செயலாக, மாதவனால் செல்ல முடியாமற்போக, சுந்தரத்திற்குத் தன் திறமையைக் காட்ட வாய்ப்பு கிடைத்து விட்டது. மாதவனுக்குப் பிறகு அவனே ஆஸ்தான நாவிதனாக மாறினான். ஆனால் மாதவன் தம்பதியை தங்களுடனே வைத்துக் கொண்டு பராமரிக்கவும் செய்தான்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய அவர், ஒருவனுக்குத் திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் அவன் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி பெறுவான். அந்த அரிய குணங்கள் என்னிடமும் உள்ளன. அதனால் நானும் என் திறமையைக் காட்டி மன்னரை மகிழ்விப்பேன் என்றும் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
பிறகு, அவர் தனது உரையாடலை சற்றுத் தொலைவில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மன்னரை சுட்டிக்காட்டி, "அதோ உட்கார்ந்து இருக்கிறாரே, அவரும் நான் கூறியதைக் கேட்டிருப்பார்! யார் கண்டது? அவரே ஒருக்கால் மன்னரிடம் சிபாரிசு செய்யலாம்!" என்றார்.

அதைக் கேட்ட மன்னர் தனது மாறு வேடத்தைக் கலைத்துவிட்டு அந்த நபரிடம் "விரைவிலேயே, மன்னரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்!" என்று கூறிப் புன்னகையுடன் வெளியேறினார்.

 

0 comments:

Post a Comment