இரவு மணி பன்னிரெண்டு

வெளியே சூறைக்காற்று வீச, நரி ஊளையிடுவது போல் பயங்கரமான ஓலமிட, மழைச்சாரல் ஜன்னல் கண்ணாடி மீது பட்டுத் தெறித்தது. வெளியில் அந்த கும்மிருட்டிலும், மரங்களின் கிளைகள் சூறைக்காற்றில் பயங்கரமாக ஆடியது, பல மோகினிப் பிசாசுகள் ஒன்று சேர்ந்து தலைவிரிக்கோலமாக ஆடுவதுபோல் இருந்தது. மூடியிருந்த ஜன்னல் கண்ணாடி வழியே மோகன் வெளியே உற்று நோக்க, எங்கும் இருள்மயமாக இருந்தது. திரும்பத் தன் நாற்காலியில் அமர்ந்து கொண்ட மோகன் மிகவும் சிரமப்பட்டு பாடப்புத்தகத்தில் கவனத்தைத் திருப்ப முயன்றான்.

அவனுடைய படிக்கும் அறை மிகச் சிறியது. அவன் படுத்து உறங்குவதும் அதே அறையில்தான். கட்டிலையொட்டி ஒரு நாற்காலியும், மேசையும் இருந்தன. மேசை முழுக்க உடற்கூறுப் புத்தகங்கள் சிதறி இருக்க அவற்றின் மீது ஒரு மண்டையோடு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

 சிலுசிலுப்பான அந்த இரவில் மறுநாள் தேர்விற்காகப் படிக்கவேண்டியிருந்த தன் தலையெழுத்தை  நொந்து கொண்ட மோகன் மீண்டும் உடற்கூறுப் புத்தகத்தில் கண்களை செலுத்தினான். ஆனால் மனம் அதில் பதிய மறுத்தது. மறுநாள் தேர்வு மட்டும் இல்லாமலிருந்தால், அவன் பேசாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கியிருப்பான். மிகவும் சிரமப்பட்டு புத்தகத்திலுள்ள வரிகளில் மீண்டும் கண்களை ஓட விட்டான். படித்துக் கொண்டிருக்கும்போதே, கண்கள் செருகிக் கொள்ள அப்படியே புத்தகத்தின் மீதே சாய்ந்து விட்டான். எத்தனை நேரம் சென்றதோ தெரியவில்லை, திடீரென அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. கடிகாரத்தைப் பார்த்தால் மணி பன்னிரெண்டு!
 கடவுளே, நம்மை அறியாமல் தூங்கி விட்டோமே! நாளைக்குப் பரிட்சை எழுதிக் கிழித்த மாதிரிதான் என்று சலித்துக் கொண்டு, மீண்டும் புத்தகத்தைப் பிரித்தான். சே! இரவு பன்னிரெண்டு மணிக்குப் போய் எவனாவது படிப்பானா? பேய் உலவும் வேளையில் படித்தால் மூளையில் ஏறுமா என்று நினைத்தவனின் கண்கள் தானாகவே மண்டையோட்டின் பக்கம் நோக்கின. கண்கள் இருந்த இடத்தில் இப்போது பெரிய ஓட்டைகள் மட்டுமே மண்டையோட்டில் இருந்தன. ஒரு காலத்தில், அந்த ஓட்டைக்குள் கண்கள் இருந்து இருக்கும். அப்போது, அந்தக் கண்கள் எல்லாரையும் விழித்துப் பார்த்து இருக்கும்! அவ்வாறு நினைக்கையில், திடீரென அந்த மண்டையோடு அவனைப் பார்த்து விழிப்பது போல் தோன்றியது.

ஐயோ! இது என்னசத்தம்? ‘கர்ர்ர்’ ‘கர்ர்ர்’ என்று ஏதோ சுவரை கை நகங்களினால் பிராண்டுவதைப் போல் சத்தம் கேட்கிறதே?  அடக்கடவுளே! சத்தம் மண்டை ஓட்டில்இருந்துதான் வருகிறது!

அப்பாடா! அந்த சத்தம் நின்றுவிட்டது! சரி! படித்தது போதும்! சென்று உறங்கலாம் என்று எண்ணிய மோகன் படுக்கையில் விழுந்தான். ஐயோ! அந்த சத்தம் மீண்டும் வருகிறதே! மண்டை ஓட்டிலிருந்து தான் வருகிறது! மோகன் கண்களை இறுக்க மூடிக் கொண்டான். ஆனால் சத்தம் தொடர்ந்து வர, மோகன் கண்களை இலேசாகத் திறந்து பார்க்க-  ஐயோ! அந்த மண்டையோடு அசைகிறதே! அசைந்தால் கூட பரவாயில்லை! துள்ளித்துள்ளி குதிக்கிறதே! ஐயோ! அது ஆவிதான்! சந்தேகமேஇல்லை! என்னை நோக்கி வருகிறது. சற்று நேரத்தில் அது என் குரல்வளையைப் பிடித்து, நேறுக்கி பற்களை ஆழப்பதித்து... ஐயோ!

வெகு நேரம் கழித்து சுயநினைவு பெற்று எழுந்த மோகன் தன்னைச்சுற்றி தன் தாயும், தந்தையும் நிற்பதைக் கண்டான். அப்படியானால்... அப்படியானால் தான் சாகவில்லையா? நான் உயிரோடுதானிருக்கிறேன்!

அந்த மண்டையோடு! அடடா! மண்டை ஓடு எப்படி உடைந்திருக்கிறது? யார் உடைத்தார்கள்? மண்டையோட்டிற்கு அருகில் ஒரு எலி இறந்து விழுந்துஇருக்கிறதே! இது எவ்வாறு? மோகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

0 comments:

Post a Comment

Flag Counter