உயிரைக் காத்த பலிஆடு!


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஆண்டியப்பன், தன் தந்தையின் நண்பர் வீட்டில் வளர்ந்தான். அவன் பெரியவனானதும், அவனிடம் 2 ஆட்டுக்குட்டிகளும், கொஞ்சம் பணமும் எப்படியாவது பிழைத்துக் கொள்ளுமாறு அந்தப் பெரியவர் கூறி விட்டு இறந்தார்.

அந்தப் பணத்தை வைத்து சிறிய குடிசையைப் போட்ட ஆண்டியப்பன், ஆட்டுக்குட்டிகளை வளர்த்து அவற்றை கசாப்புக் கடையில் விற்றான். அந்தப் பணத்தில் மீண்டும் நான்கு ஆட்டுக்குட்டிகளை வாங்கினான். இப்படியே ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து கசாப்புக் கடைகளில் விற்று பணம் சம்பாதித்தான். தன்னிடம் ஓரளவு பணம் சேர்ந்ததும், லட்சுமி என்ற ஏழைப் பெண்ணை திருமணம் செய்துகொண்டான். ஆண்டியப்பன் செய்து வந்த இந்தத் தொழில் லட்சுமிக்கு பிடிக்கவில்லை.

"ஆடுகளை நாமே வளர்த்து அவற்றை கசாப்புக் கடைகளுக்கு அனுப்புவது பெரும் பாவம். இந்தத் தொழிலை விட்டு, கறவை மாடுகள் வாங்கி வியாபாரம் செய்யலாமே" என்று ஆண்டியப்பனுக்கு அறிவுரை கூறினாள்.
ஆனால் இதை ஏற்காமல் லட்சுமியை கோபமாக திட்டிவிட்டு தன் தொழிலைத் தொடர்ந்தான்.


அதற்கு பிறகு ஆண்டியப்பனுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திய லட்சுமி,  "நீங்கள் செய்யும் தொழிலில் இனி நான் குறுக்கிட மாட்டேன். ஆனால் ஆட்டுக்குட்டியை எனக்கு கொடுங்கள். அதற்கு ராமு எனப் பெயர் வைத்து நான் வளர்க்கிறேன்" என ஆண்டியப்பனிடம் கேட்டுக் கொண்டாள். அவனும் அழகான ஒரு ஆட்டுக்குட்டியை அவளிடம் அளித்தான்

சில நாட்களுக்குப் பின், பண்ணையார் ஒருவர் பலி கொடுக்க ஆடு கேட்க, தன்னிடம் இப்போது ஆடுகள் ஏதும் கைவசம் இல்லாததால்,.லட்சுமி வளர்க்கும் ராமு ஆட்டை எடுத்துச் செல்ல நினைத்தான். ஆனால் ராமுவைத் தரமாட்டேன் என உறுதியாக நின்றாள்.

மனைவியின் பேச்சைத் தட்டிய ஆண்டியப்பன், இரவு நேரத்தில் கடும் மழையில் ஆட்டை இழுத்துக்கொண்டு பண்ணையார் வீட்டுக்கு விரைந்தான். ஆனால் சிறிது தூரம் சென்றதும் இருட்டில் கால் தடுமாறி சுவரில்லாத கிணற்றில் விழுந்தான். ஆடு விழவில்லை. கிணற்றினுள் ஒரு செடியின் வேரைப் பிடித்துக் கொண்டு ஆண்டியப்பன் அலறினான். ஆனால் அவன் அலறல் வெளியே கேட்கவில்லை. 

தன் எஜமானன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட ஆடு, உதவிக்கு ஆட்களைக் கூப்பிடும் விதமாக அங்குமிங்கும் ஓடி அலறியது. சிறிது நேரம் கழித்து மழை நின்ற பின் அவ்வழியே சென்றவர்கள் ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு சென்றனர். பின் கிணற்றில் எட்டிப் பார்த்து, ஆண்டியப்பனைக் காப்பாற்றினர்.

தன்னைக் காப்பாற்றியது ராமு ஆடுதான் என்பதை உணர்ந்து கொண்ட ஆண்டியப்பன், கண்ணீர் பெருக்குடன் அதை கட்டியணைத்துக் கொண்டான். பின்னர் வீடு சென்ற அவன், ராமு தான் தன் உயிரைக் காப்பாற்றியதாகவும், இனி ஆடுகளை விற்கும் தொழில் செய்யப் போவதில்லை என மனைவிக்கு உறுதியளித்தான். அதன் பின் கறவை மாடுகள் வாங்கி இருவரும் தொழில் செய்து செல்வந்தர்கள் ஆனார்கள்.

0 comments:

Post a Comment