திருட வந்தவர்களுக்கு கூலி!

றுதாவூர் என்ற கிராமத்தில் ராமன் என்ற அதி புத்திசாலி வாழ்ந்து வந்தார். வணிகம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதிலும், வழக்குகளில் சரியான தீர்ப்புகள் கூறுவதிலும் வல்லவர், கோடைக்காலத்தில் ஒருநாள், ராமனும் அவரது மனைவியும் தங்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு திருடர்கள் மெதுவாக தோடத்துக்குள் நுழைந்து செடிகளுக்குப் பின் மறைவதை ராமன் பார்த்து விட்டார்.

சுதாரித்துக்கொண்ட அவர் தன் மனைவியிடம் மெதுவாக, "நம் வீட்டில் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்துள்ளனர்." என்று கூறவே, "ஐயோ திருடர்களா.. இப்போது என்ன செய்வது?" என்று அவர் மனைவி பதறினார்.
உடனே, "கத்தாதே..திருடர்களை எளிதாக பிடித்து விடலாம். நான் சொல்வதை மட்டும் செய்." என்று கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்று தன் மனைவிக்கு கூறிய பின், திருடர்கள் பதுங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் சென்றார் ராமன்.

பின் சத்தமாக தன் மனைவியிடம், "தெரியுமா சேதி...அடுத்த தெருவில் கந்தசாமி வீட்டில் திருடு போய்விட்டதாம். நாம் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே நகைகள், பொற்காசுகள் அனைத்தையும் கொண்டு வா." என உத்தரவிட்டார். இதைக் கேட்ட திருடர்கள் குழம்பினர். ராமன் என்ன செய்யப் போகிறார் என உன்னிப்பாக கவனித்தனர். ராமனும் அவரது மனைவியும் சேர்ந்து பெரிய பெட்டியைக் கொண்டு வந்தனர்.

அதை தங்கள் கிணற்றில் வீசினர். பின்னர், "அப்பாடா, இனி கவலையில்லை, திருடர்கள் வந்தால் வீட்டில் பொருட்களைத் தேடிப் பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவார்கள். நாம் நிம்மதியாக தூங்கலாம் வா!" என தன் மனைவியிடம் சத்தமாக கூறி அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ராமன்.
இந்தக் காட்சியைக் கண்ட திருடர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அவர்களில் ஒருவன், "சத்தம் போடாமல் இங்கேயே இருப்போம். இரவு அவர்கள் தூங்கியவுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி விட்டு பொருட்களை எடுத்துச் சென்று விடுவோம்," என்று மகிழ்ச்சியாக கூறினான்.

இரவு நேரமானதும், இரண்டு பேரும் கிணற்றுக்கு அருகில் சென்று ஓசைப்படாமல் குடத்தில் கயிறு கட்டி தண்ணீரை வெளியேற்றி தோட்டத்தில் ஊற்றினர், நீண்ட நேரம் தண்ணீரை வெளியேற்றிய போதும், கிணற்றில் தண்ணீரின் அளவு குறையாததால் வெறுப்படைந்தனர். ஆனாலும் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.
பொழுதும் விடிந்து விட்டது. இரவெல்லாம் தண்ணீர் இறைத்ததால் எழுந்து நிற்கக் கூட சக்தியின்றி இருவரும் அப்படியே விழுந்து கிடந்தனர்.

அவர்களிடம் சென்ற ராமன், "நண்பர்களே, வெறும் கற்கள் நிரம்பிய பெட்டிக்காக இரவெல்லாம் கண் விழித்து என் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றியுள்ளீர்கள். உங்களுக்கு நான் எவ்வளவு கூலி தர வேண்டும்?" என சிரித்துக் கொண்டே கேட்டார்.

உடனே அவர் கால்களில் விழுந்த இருவரும், "ஐயா, தெரியாமல் உங்கள் வீட்டில் திருட வந்து விட்டோம். இரவு முழுவதும் தண்ணீர் இறைத்ததால் உழைப்பின் அருமையை இப்போது உணர்ந்தோம். இனி திருட மாட்டோம். எங்களை மன்னித்து விட்டு விடுங்கள்." என கெஞ்சினர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி, தண்ணீர் இறைத்ததற்காக கூலி கொடுத்து அனுப்பி வைத்தார் ராமன்

0 comments:

Post a Comment

Flag Counter