கரும்பு தின்ற பிள்ளையார்

 
சாளை இப்படி அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில் முனியன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனருகே மலர்களால் நிறைந்த விநாயக விக்கிரகம் இருந்தது. எங்கும் கரும்புச் சாறு சிந்தி நிலம் சதுப்பாக ஆகிவிட்டது.

காவலாளிகளைக் கேட்டபோது "நேற்று நள்ளிரவின்போது ஒரு யானை பிளிறிடும் குரல் கேட்டு அரைத் தூக்கத்தில் இருந்த நாங்கள் கண் விழித்துப் பார்த்தோம். முனி யன் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு வெள்ளை யானை கரும்பை எல்லாம் எடுத்து ஒடித்து மென்று தின்று சக்கையை உமிழ்ந்துகொண்டே இருந்தது. அதுகண்டு பயந்து ஓடி விட்டோம்," என்று கூறினார்கள்.

பண்ணையாருக்கு மனம் ஒரேயடியாக அப்போது மாறிவிட்டது. முனியனிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்ந்தார்.
தாம் அவனைத் துன்புறுத்தியது எவ்வளவு தவறு என்பதும் அவருக்குத் தெரிந்தது. கண்ணீர் மல்க தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதுபோல அப்படியே அடியற்ற மரம் போல முனியனின் கால்களில் விழுந்து அவர் வணங்கினார்.

அப்போதுதான் முனியன் கண் விழித்துப் பார்த்தான். தன் எஜமானன் தன் காலில் விழுந்து வணங்குவது கண்டு திடுக்கிட்டான்.

பண்ணையார் அருகே இருந்த விநாயக விக்கிரகத்தையும் வணங்கி "சுவாமி! இப்போது எங்களுக்கு அருள் புரிந்தீர்கள். நாங்கள் புனிதர்களானோம்," என்று சொல்லி நடந்ததை எல்லாம் முனியனிடம் கூறினார். இதற்குள் மக்கள் கூட்டம் அங்கு சேர்ந்து விட்டது.
 முனியனும் தன் மனைவி மக் களுடன் தன்னருகே இருந்த விநாயக விக்கிரகத்தை வணங்கி "சிறுவயது முதல் உங்களை நான் மனதிலேயே வழிபட்டு வருகிறேன். ஆடம்பரமாக மலர் கொண்டு அலங்கரித்துப் பூசிக்கவில்லை. ஆனால் எனக்காக இவ்வளவு கரும்பையும் தின்று சிரமப்பட்டீர்களா? வெள்ளை யானை உருவில் தாங்கள் எல்லோருக்கும் தரிசனம் தந்தீர்கள். ஆனால் நான் மட்டும் உங்களைக் காணாத மடை யனாகிவிட்டேன். எனக்குக் காட்சி தர மாட்டீர்களா?" எனக் கதறி வேண்டினான்.

அப்போது விநாயகர் தம் துதிக்கையில் ஒரு கரும்புத் துண்டைப் பற்றியவாறே முனியனின் முன் தோன்றினார். முனியனின் மகன் வைத்திருந்த கரும்புத் துண்டுதான் அது. விநாயகர் தம் துதிக்கையால் முனியனைத் தன்னருகே இழுத்து நிறுத்தி அவன் தலை மீது துதிக்கையை வைத்து ஆசீர்வதித்தார்.

அவர் முனியனிடம் "முனியா! ஜாதி, இனம் என்றெல்லாம் நான் வகுத்து வைக்கவில்லை. இவற்றை மனிதர்களே உண்டாக்கினார்கள். உயர்வு, தாழ்வு என்றெல்லாம் என் சன்னதியில் கிடையாது. எனக்கு எல்லோரும் சமமே. அதனால் தான் இப்போது உனக்குக் காட்சி அளிக்கிறேன்," என்று கூறினார்.

முனியனோடு அங்கு கூடியிருந்த எல்லோருமே விநாயகரை தரிசித்தார்கள். அங்கே கரும்பு ஏந்திய விநாயகரைக் கொண்ட ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

பாவனமிசிரர் இவ்வாறு பல சிற்பங்களைப் பற்றிய கதைகளைக் கூறினார். தலைவாசலில் செதுக்கப்பட்ட சிலையை தினமும் வெகு நேரம் வரை நின்று பார்த்து வந்த ஒரு வாலிபன் பாவனமிசிரரின் கால்களில் விழுந்து வணங்கி "ஐயனே! இக்கோவிலின் தலைவாசலில் உள்ள சிற்பத்தை யார் செதுக்கினார்? அவரைப் பற்றிக் கூறுங்கள்!" என வேண்டினான்.

பாவனமிசிரரும் பரிவுடன் அவனைப் பார்த்து "அப்பனே! உன்னைப் பார்த்தால் ஒரு சிற்பி போல தெரிகிறது. தலைவாசலில் உள்ள சிலை எனக்கும் மிகவும் பிடித்தமானதே. அந்த சிலையை செதுக்கிய சிற்பி யைப் பற்றி கூறுகிறேன், கேள்!" எனக் கூறி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
 "வாதாபி நகரத்திற்கு சாது சன்னியாசிகளின் கூட்டம் வந்து போய்க் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தோடு வந்த பதினான்கு வயது வாலிபன் ஒருவன் இந்த வாதாபி கணபதியின் ஆலயத்திலேயே தங்கிவிட்டான். அவன் பெயர் என்னவோ, ஊர் எதுவோ அவனுக்கே தெரியாது. அவனது நெற்றியில் பெரிய காயம் இருந்ததால் பலத்த அடிபட்டு மூளையே கலங்கிவிட்டதெனப் பலர் நினைத்துக் கொண்டார்கள். அவன் ஊமை போலப் பேசாமல் இருந்தான். அவன் கடவுளின் திருஉருவங்களை வரைந்துகொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவன் முகம் மலர்ச்சியுடன் காணப்படும். அவன் வரையும் உருவங்கள் எல்லாம் விநாயகருடையதே. அவனது இந்த விசித்திரப் போக்கால் யாவரும் அவனை விசித்திரன் என அழைத்து வந்தனர்.

அப்போது கஜானன பண்டிதர் படுகிழவராகிவிட்டார். தினமும் மாலையில் தன் வீட்டில் சிறுவர் சிறுமியரைக் கூட்டி விநாயகரைப் பற்றிய கதைகள் கூறி வந்தார்.

விசித்திரனும் அவரது வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு அவர் கூறும் கதைகளை கவனமாகக் கேட்கலானான். முதல் நாள் கேட்ட கதையின் ஆதாரத்தில் மறுநாள் அவன் ஏதாவது ஒரு சுவரில் சித்திரம் வரைந்து வந்தான்.
கஜானன பண்டிதருக்கு விசித்திரன் மீது அலாதியான பிரியம். வீட்டிற்குள் வந்து கதையைக் கேட்குமாறு அவர் கூறினாலும் அவன் வாசலில் அமர்ந்தே தான் கேட்டு வந்தான். அவன் வரையும் விநாயகரின் உருவங்களைக் கண்டு வியந்து மகிழ்ந்து பல புதிய கதைகளை அவனுக்குச் சொல்லி வந்தார்.

பகலெல்லாம் விசித்திரன் இவ்வாறு படங்களை வரைந்து இரவில் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் தூங்குவான்.

அவனது நண்பர்கள் குயவர்களும் தோல் தைப்பவர்களும் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களும் ஆவர். இரவில் எவ்வளவு நேரம் கழித்து அவன் வந்தாலும் அவனுக்காகத் தாம் சாப்பிடும் உணவில் கொஞ்சம் வைத்தே இருப்பார்கள். இப்படியாக விசித்திரன் வளர்ந்து வரலானான். தான் இன்னாரென என விசித்திரன் அறியாதபோதிலும் அவனுக்குத் தாய் தந்தையரும், அண்ணன் மார்களும் இருந்தனர்.
 வாதாபி நகரிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு ஊரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் விசித்திரன் பிறந்தான். தன் தந்தையைப் போல அவன் சித்திரங்கள் வரையலானான். அவன் புத்தி வேறு எதிலும் செல்லவில்லை.

அவனது அண்ணன்களும், அண்ணிகளும் அவனை வேலையில்லாதவன் என்று கூறி வீட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். அவனுக்கு விநாயகர் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் வாதாபி நகருக்குக் கிளம்பிச் சென்றான். வழியில் பசியாலும் தாகத்தாலும் வாடி ஒரு கருங்கல் பாறை மீது நினைவிழந்து அவன் விழுந்துவிட்டான்.

அடிபட்டு காயமுற்ற அவனை சன்னியாசிகளின் கூட்டம் ஒன்று கண்டது. அவர்கள் அவன் மீது இரக்கம் கொண்டனர். யாரோ அனாதை கவனிப்பாரற்றுக் கிடக்கிறான் என எண்ணி அவனது மயக்கத்தைப் போக்கித் தம்மோடு அழைத்துக் கொண்டு வந்து வாதாபி நகரில் சேர்த்தனர்.

அந்த வருட விநாயக சதுர்த்தியின் போது ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. அழகிய விநாயக உருவங்களை அக்கண்காட்சியில் வைக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் வண்ண வண்ண விநாயகர் பொம்மைகள் பல வந்தன.
அவற்றில் மிக அழகானதைக் கண்காட்சி நடத்துவோர் ஆயிரம் பவுன்கள் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் அறிவித்திருந்தார்கள். அந்தப் பொம்மையைச் செய்தவனுக்கு நவரத்தினங்கள் பதித்த தங்கத்தோடு போடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

விசித்திரனும் தன் குயவ நண்பன் ஒருவனிடம் கூறி விநாயகர் பொம்மையைத் தன் கற்பனைப்படி செய்ய வைத்தான் அதற்கு சுண்ணாம்பும், மையும், மஞ்சளும், பச்சிலைச் சாறும் பூசி பலவண்ணங்களில் தோன்றச் செய்தான்.

அவன் அந்த பொம்மையைக் கண்காட்சியில் வைக்கச் சென்ற போது அதனை நடத்துபவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.
அவன் தனக்குப் பரிசு எதுவும் வேண்டாம் என்றும் தன் பொம்மையை மற்றவர்கள் பார்த்தால் போதும் எனக் கூறி அவர்களிடம் கெஞ்சினான். அப்போது அவர்கள் "ஊர், பேர் தெரியாத நீ தாழ்த்தப்பட்டோரின் மத்தியில் வாழ்ந்து வருகிறாய். இப் படிப்பட்டவனின் பொம்மையை மற்ற உயர்குலத்தவர் செய்த பொம்மைகளோடு சேர்த்து வைப்பதா? முடியாது. அந்தத் தகுதி உன் பொம்மைக்கு இல்லை!" என்று கூறி விட்டார்கள்.

அதுகேட்டு விசித்திரன் மனம் ஒடிந்து போனான். அப்போது அவனது குயவ நண்பன் அவனிடம், "கவலைப்படாதே. இங்கே இல்லாவிட்டால் நமது பொம்மையை வேறு ஏதாவது ஓர் இடத்தில் வைத்து மக்கள் பார்க்கும்படி செய்தால் போயிற்று," எனக் கூறினான்.

பிறகு கண்காட்சி நடக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வாழைமரத்தடியில் வைத்து அவர்கள் இருவரும் அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

கண்காட்சியில் பொம்மைகளைப் பார்த்து வந்தவர்கள் அவற்றிற்கு தீட்டப்பட்ட வண்ணத்தின் தரம் விலை முதலியவற்றை விசாரிக்கலானார்கள். அவற்றைச் செய்தவர்கள் பெயர் பெற்ற கலைஞர்களா எனக் கேட்டார்கள்.

ஆனால் சிறுவர்களோ விசித்திரன் செய்து வைத்த விநாயக பொம்மையைச் சுற்றிக் கூட்டமாக நின்றனர். அப்போது ஆகாயத்தில் பளிச்சென மின்னியது. அதிலிருந்து இரு அழகிய பெண்கள் இறங்கிக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த நகைகள் கண்களைப் பறித்தன.

மக்கள் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அப்போது அந்த இருவரில் பெரியவள், "எங்கள் ஊர் கலாநகரம் என்பது. எங்களுக்குப் பிடித்தமான விநாயகர் பொம்மையை பத்தாயிரம் பவுன்கள் கொடுத்து வாங்கப் போகிறோம். அதற்காகவே ஊர் ஊராகச் சுற்றிப் பார்த்து வருகிறோம்," எனக் கூறி கால் சலங்கைகள் ‘கலகல’வென ஒலிக்க நடந்தாள்.

உடனே கண்காட்சியிலிருந்த கலைஞர்கள் அந்த பெண்கள் தம் பொம்மைகளைக் காண வருவார்களென எதிர்பார்த்து தம் பொம்மைகளின் பக்கம் போய் நின்றார்கள்.

அப்போது இளையவள் "என் தமக்கை பிரசன்னவதனி நன்கு பாடக் கூடியவள். ரசித்து சாப்பிடுவாள். நன்கு சாப்பிட்ட பிறகே பாடுவாள்," எனக் கூறிப் புன்னகை புரிந்தாள்.

மூத்தவளும் "என் தங்கை மோகனா நன்கு நாட்டியம் ஆடுவாள். அவளைப் போல வேறு யாராலும் நாட்டியம் ஆட முடியாது," என்றாள்.

அப்போது மோகனா, "எங்களைப் பாட வைக்கவும் ஆட வைக்கவும் இந்திரனாலும் குபேரனாலும் கூட முடியாது. ஆனால் எங்களுக்குப் பிடித்தமான விநாயக உருவம் மட்டும் கிடைத்துவிட்டால் அதன் முன்பாக நாங்கள் ஆடிப் பாடுவோம்," என்றாள். அதைக் கேட்ட மக்கள் யாவரும் அதிசயத்தோடு அந்த இரு பெண்களையும் பார்த்தார்கள். பிறகு அவர்கள் விநாயகர் பொம்மைகளைக் காண வழிவிட்டு நின்றார்கள்.            (தொடரும்)

0 comments:

Post a Comment

Flag Counter