பாவத்தின் பலன்


பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது ஒருமுறை போதிசத்வர் குரங்காகப் பிறந்தார். அதன் பெயர் சஞ்ஜீவன் என்பதாம். அதற்கு ஒரு தம்பியும் இருந்தது. இரு வானரங்களும் எண்பதாயிரம் குரங்குகளின் தலைவர்களாக இருந்தன. அவர்கள் தம் வயதான தாயை அன்புடன் பேணிப் பாதுகாத்து வந்தார்கள். அவளுக்கோ பார்வை இல்லை.

சஞ்ஜீவனும் அவனது தம்பியும் பழங்களைப் பறித்து தம் பணியாட்களிடம் கொடுத்து தம் தாய்க்குக் கொடுக்கச் சொல்வார்கள். ஆனால் பழங்களை எடுத்து வந்து பணிபுரியும் வானரங்களோ, வழியில் அவற்றைத் தின்றுவிட்டு சஞ்ஜீவனின் தாயைப் பட்டினி போட்டன.

சில நாட்களுக்குப் பின் தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்த சஞ்ஜீவன் தன் தாய் மிகவும் மெலிந்திருப்பது கண்டு "என்ன அம்மா இது? உடம்புக்கு என்ன? சரியாகச் சாப்பிடுவது இல்லையா? நாங்கள் உனக்குப் பழங்களை நிறைய அனுப்பிக் கொண்டுதானே இருந்தோம். பின்னர் ஏன் இவ்வளவு மெலிந்து காணப்படுகிறாய்?" என்று கேட்டது.

தாய் குரங்கும் "எனக்கு யாருமே பழம் கொண்டு வந்து கொடுக்கவில்லையே. அதனால் தான் பட்டினி கிடக்கும்படி ஆயிற்று" என்றது.
அப்போது சஞ்ஜீவன் தன் தம்பியைப் பார்த்து "தம்பீ! நம் பணியாட்களை நம்பிப் பயனில்லை. இனி மேல் நான் இங்கே இருந்து நம் தாயை கவனித்து கொள்கிறேன். நீ வானரங்களுக்குத் தலைமை தாங்கிச் செல்" என்றது.
ஆனால் தம்பியோ "இல்லை. நானும் போகவில்லை. நானும் இங்கேயே இருந்து விடுகிறேன்.

இருவரும் சேர்ந்து தாய்க்குப் பணி புரியலாம். வேறு ஏதாவது ஒரு குரங்கு தலைமைப் பதவியை ஏற்கட்டும்" எனக் கூறியது. இதைக் கேட்ட சஞ்ஜீவனும் தன் தம்பி சொல்வது சரியென முடிவு செய்தது. அதன்பிறகு சஞ்ஜீவன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் தன் தாய் ஒரு ஆலமரத்தடியே வாழ இடம் செய்து கொடுத்தது. இரு குரங்குகளும் தாயை கவனித்துக் கொண்டன.

இதே சமயம் தட்சசீலத்தில் ஒரு குருவிடம் கல்வி கற்று வந்த ஒரு பிராமணன் தன் படிப்பு முடிந்ததும் குருவிடம் விடை பெறச் சென்றான். அவரும் "நீ என்னிடம் கல்வி கற்றது சரியே. ஆனால் நீ சிறிது ஆத்திரப்படுபவன். அதனால் கொடூரமான செயல்களைச் செய்து விடுகிறாய். இவ்வாறு செய்தபின் நீ மனம் வருந்திப் பயன் இல்லை. எனவே கொடூரமான செயல்களைச் செய்யாதே. இதுதான் நான் உனக்குக் கூறும் அறிவுரை. இதை நீ கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக முன்னேற்றம் அடைவாய்!" எனக்கூறி அனுப்பினார்.

அந்த பிராமணனும் குருவிடம் விடை பெற்றுக் கொண்டு காசி நகரை அடைந்தான். ஆனால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. குடும்பம் நடத்தப் பணம் வேண்டுமே. அதனால் காடு மலைகளில் திரிந்து அங்கு காணப்படும் மிருகங்களை வேட்டையாடி மிருகங்களைக் கொன்று அவற்றை விற்றுக் காலம் கழிக்கலானான்.


ஒருநாள் அவன் வேட்டையாடப் போய் எதுவும் கிடைக்காமல் சஞ்ஜீவனும் அவனது தாயும் வசிக்கும் ஆலமரத்தின் பக்கம் வந்தான். அங்கு சஞ்ஜீவனும் அவனது தம்பியும் அப்போது தம் தாய்க்குப் பழங்களைக் கொடுத்துச் சாப்பிடச் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது வேட்டையாட வந்த பிராமணன் தன் வில்லை எடுத்து தாய்க்குரங்கிற்கு அம்பைக் குறிவைத்தான். இதைக் கண்டதும் சஞ்ஜீவன் சட்டெனத் தன் தாய்முன் பாய்ந்து வந்தது. அது வேடனிடம் "என் தாயைக் கொல்லாமல் என்னை எடுத்துச் செல்" எனக் கூறியவாறே அவன் எய்த அம்பிற்கு இரையாகி விழுந்தது. வேடன் அத்துடன் நில்லாமல் மறுபடியும் ஒரு அம்பை எடுத்துத் தாய்க்குரங்கிற்குக் குறி வைக்கவே தம்பியான குரங்கு குறுக்கே பாய்ந்தது. அம்பு அதனையும் கொன்றது.

அப்போதும் மனம் இளகாமல் வேடன் தாய்க்குரங்கிற்கும் குறி வைத்து அதனை அடித்துக் கொன்றான். இப்படிக் கொடூர செயல்களைப் புரிந்து மூன்று இறந்த குரங்குகளையும் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சி தாங்க முடியாமல் அவன் தன் வீட்டிற்குத் திரும்பலானான்.

ஆனால் தன் வீட்டிற்குச் சற்றுதூரம் வந்தபோது அவன் தன் வீடு தீப்பற்றி எரிவது கண்டு திகைத்துப் போனான். தன் மனைவியும் இரு குழந்தைகளும் எரிந்து போனது கண்டு அவன் ‘ஆ‘வென அலறினான். அப்போது அவன் நின்ற இடத்தில் தரை பிளந்து கொண்டது. அவன் கிடுகிடுவெனப் பாதாளத்தில் விழுந்து நரகலோகத்திற்குச் செல்லலானான்.

அப்போது அவன் மனம் ‘ஐயோ! என் குரு கொடூரச் செயல்களைச் செய்யாதே என அறிவுரை கூறினாரே! அவர் கூறிய அறிவுரையைக் கேட்காமல் போனதால் என் குடும்பமே அழிந்து போனதே!’ என எண்ணி மனம் வருந்தினான்.

காலம் கடந்து எண்ணி என்ன பயன்!

0 comments:

Post a Comment