செல்வத்தைப் பெருக்கும் வழி!பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் வைசிய குலத்தில் பிறந்து ‘வர்த்தக சிரோன்மணி’ என்று அழைக்கப்பட்டார். அவர் நல்ல அறிவாளி. எல்லா சாஸ்திரங்களையும் நன்கு கற்று உணர்ந்தவர்.
ஒரு நாள் அவர் அரச சபைக்குப் போய்க் கொண்டிருக்கையில் வழியில் ஒரு செத்த எலியைக் கண்டு "இதைக் கூட யாராவது திறமைமிக்க இளைஞன் எடுத்துப் போய்ப் பயன்படுத்தினால் அவன் கோடீஸ்வரனாகக் கூட ஆகலாம்.

 எதற்கும் முயற்சிதான் தேவை" எனச் சற்று உரக்கக் கூறியவாறே சென்றார்.
அதை ஆனந்தன் என்ற வாலிபன் கேட்டு விட்டான். அவன் போதிசத்வரை தெய்வத்தின் மறு அவதாரம் எனக் கருதுபவன். எனவே அவரது வாக்குப் பலிக்கும் என எண்ணி அந்த செத்த எலியை எடுத்துக் கொண்டு கடைத் தெருவிற்குப் போனான். அதை ஒரு பூனைக்கு இரையாகக் கொடுக்க ஒரு கடைக்காரன் ஒரு செப்புப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான்.

ஆனந்தன் அந்தப் பணத்திற்கு வெல்லக் கட்டிகளை வாங்கினான். ஒரு பெரிய பானையில் நீர் நிரப்பி அதனையும் வெல்லக் கட்டிகளையும் எடுத்துக் கொண்டு அவன் ஓரிடத்தில் உட்கார்ந்தான். அவ்வழியே பூக்காரர்கள் பூப்பறித்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் அன்று ஆனந்தனைக் கண்டு அவனிடம் வெல்லமும் நீரும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். போகும் போது ஒவ்வொருவரும் கை நிறைய பூக்களை அள்ளி எடுத்து அவனுக்குக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

ஆனந்தன் அந்தப் பூக்களை விற்று மேலும் வெல்லம் வாங்கி முந்தைய நாளைப் போலவே நீர்ப் பானையுடன் வழியில் உட்கார்ந்தான்.

 அன்றும் பூக்காரர்கள் வந்து வெல்லமும் நீரும் வாங்கிச் சாப்பிட்டு நிறையப் பூக்களைக் கொடுத்துப் போனார்கள். ஆனந்தனும் அவற்றை விற்றுப் பணமாக்கி வெல்லம் வாங்கி நீர் சுமந்து வந்து தினமும் அவர்களுக்குக் கொடுக்கலானான். அவர்களும் பதிலுக்கு மலர்களைக் கொடுக்க அவற்றை விற்று ஆனந்தன் பணம் சேர்க்கலானான்.
அவனிடம் பத்து வெள்ளிப் பணங்கள் சேர்ந்து விட்டன. அவன் தினமும் நீரும் வெல்லமும் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஒரு நாள் இடியும் மழையும் பெய்து அரசனின் தோட்ட மரக்கிளைகளை ஒடிந்து தோட்டம் முழுவதும் பரவியது. அதை எப்படி அப்புறப்படுத்துவது எனத் தோட்டக்காரன் திகைத்தான்.

அப்போது ஆனந்தன் அவனிடம் "இந்த உலர்ந்த குச்சிகளையும் இலைகளையும் எனக்குக் கொடுத்தால் நான் அப்புறப்படுத்தி விடுகிறேன்" என்றான். தோட்டக்காரனும் சம்மதிக்க ஆனந்தன் சில சிறுவர்களுக்கு வெல்லக்கட்டிகள் கொடுத்து அந்தக் குப்பையை ஓரிடத்தில் குவித்தான்.
அப்போது அரண்மனைக் குயவன் அவ்வழியே வந்து அந்த உலர்ந்த குச்சிகளையும் இலைகளையும் பார்த்து ஆனந்தனிடம் விலைபேசினான்.

அதற்கு இருபத்தைந்து வெள்ளிப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான்.
ஆனந்தன் அதைக் கொண்டு நிறைய புல்கட்டுகளை வாங்கினான். அன்று அராபியநாட்டு வியாபாரி ஒருவன் தன் ஐநூறு குதிரைகளுடன் அவ்வூருக்கு வந்திருந்தான். அவன் தன் குதிரைகளுக்குப் புல் வாங்க வந்து ஆனந்தனிடம் ஏராளமான புல் கட்டுகள் இருப்பது கண்டு நல்ல விலை கொடுத்து அவற்றை வாங்கிக் கொண்டான். இதனால் ஆனந்தனுக்கு ஆயிரம் வெள்ளிப் பணம் கிடைத்தது.

ஆனந்தன் துறைமுகத்திற்குப் போய் அப்போதுதான் ஒரு கப்பல் புதிய சரக்குகளோடு வந்திருப்பதைக் கண்டான். உடனே அதன் வியாபாரியைக் கண்டு தான் அந்தச் சரக்கு முழுவதையும் வாங்கிக் கொள்வதாகக் கூறி விலை பேசி ஆயிரம் வெள்ளிப் பணத்தை முன் பணமாகக் கொடுத்தான்.
இதற்குள் கப்பல் வந்தது கேட்டு பல வியாபாரிகள் அதனை ஆனந்தன் வாங்கியதை அறிந்தனர். அவர்கள் ஆனந்தனிடமிருந்து அவன் சொன்ன விலைக்கு அச்சரக்குகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.

இதில் அவனுக்கு லட்சம் லட்சமாக லாபம் கிடைத்தது. ஆனந்தன் அதிலிருந்து ஒரு லட்சம் வெள்ளிப் பணம் எடுத்துக் கொண்டு போய் போதிசத்வரான வர்த்தக சிரோன்மணியின் முன் வைத்து "தாங்கள் கூறியபடி நடந்ததால் எனக்கு நிறையப் பணம் கிடைத்தது. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.
போதிசத்வரும் "நான் சொன்னேனா? எப்போது?" என்று கேட்க அவனும் அவர் செத்த எலியைப் பார்த்துக் கூறியதைச் சொல்லி தான் அதனை எடுத்துப் போய் விற்று படிப்படியாகப் பணம் பெற்ற விதத்தையும் கூறினான்.

அது கேட்ட போதிசத்வர் மகிழ்ந்து அவனுக்குத் தன் மகளை திருமணம் செய்து வைத்தார். அப்படிப்பட்ட அறிவு மிகுந்த வாலிபனை தம்முடனேயே வைத்துக் கொண்டு தன் சொத்து முழுவதையுமே அவனிடம் ஒப்படைத்து விட்டார்.

 

0 comments:

Post a Comment