மந்திரத்தால் ஏற்பட்ட பேரிழப்பு!

 
பிரம்மதத்தன் காசியை ஆண்டகாலத்தில், ஒரு கிராமத்தில் பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் வேதபம் என்றொரு மந்திரத்தைக் கற்றிருந்தார். எல்லாக் கிரகங்களும் ஒன்றுகூடும் நாளில் அந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆகாயத்திலிருந்து தங்கம், வெள்ளி, முத்து, பவளம், ரத்தினம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் மழைபோலக் கொட்டும்.
 
அந்த அதிசய மந்திரத்தைக் கற்ற பிராமணர் தன் சக்தியால் கர்வம் கொண்டிருந்தார். கிரகங்கள் எல்லாம் ஒன்று கூடும் நாளன்று மந்திரத்தை உச்சரித்து நவரத்தின மழை பெய்யச் செய்து, அவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு விட்டால் உலகில் தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என எண்ணி, தலைகால் புரியாமல் துள்ளிக் கொண்டிருந்தார்.
 
இந்த மந்திர சக்திவாய்ந்த பிராமணரிடம் போதிசத்வர் சீடராக இருந்து வந்தார். குருவிற்கும் அந்த சீடனை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒருநாள் அவர் தம் சீடனோடு ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றார்.
 
அந்தக் காட்டில் ஐந்நூறு திருடர்கள் இருந்தனர். அவர்கள் குருவான பிராமணரையும் சீடரான போதிசத்வரையும் வழி மறித்தனர். அந்தத் திருடர்கள் வழிப்போக்கர்களிடம் பணம் இருந்தால் பறித்துக் கொண்டு விட்டு விடுவார்கள். அப்படி இல்லாவிட்டால் ஒருவனை ஊருக்கு அனுப்பி பணம் கொண்டு வரச்சொல்வார்கள். அவர்கள் பணம் கொண்டு வந்தபின் தான் மற்றவர்களை விடுவிப்பார்கள். அந்த குருவிடமும் சீடனிடமும் பணம் இல்லாததால் அவர்கள் குருவை நிறுத்தி வைத்துக் கொண்டு சீடனான போதிசத்வரைப் பணம் கொண்டு வரச் சொன்னார்கள்.
போதிசத்வர் போகும்முன் தம் குருவிடம் "குருவே! இன்றிரவு பன்னிரெண்டு மணிக்கு எல்லா கிரகங்களும் கூடும் வேளை வருகிறது. நீங்கள் உங்கள் வேதப மந்திரத்தை உச்சரிக்காதீர்கள். அதனால் உங்களுக்கும் கெடுதல். இந்தத் திருடர்களுக்கும் கெடுதல்" எனக்கூறி எச்சரித்துவிட்டுப் போனார். இரவானது.
 
திருடர்கள் அந்தப் பிராமணனைக் கட்டிப் போட்டார்கள். அன்று பௌர்ணமி. நிலா பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. பிராமணர் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். எல்லா கிரகங்களும் ஒன்று சேரும் வேளை வரலாயிற்று.
 
அப்போது அவர் மனத்தில் வேதப மந்திரத்தைச் சொல்லி விலை மதிப்பற்ற பொருள்களை வரவழைத்து திருடர்களுக்கு அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுத் தாம் விடுதலை பெறலாம் என நினைத்தார். ஆகையால் அவர் அங்கே கூடி இருந்தத் திருடர்களிடம், "என்னைப் பணத்திற்காகத் தானே கட்டி வைத்திருக்கிறீர்கள்? நான் ஒரு நோடியில் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருள்களை மழை போலப் பொழியச் செய்கிறேன். நீங்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்ய நான் குளித்து விட்டு ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எனவே என் கட்டை அவிழ்த்துவிட்டால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகப் பணமே கிடைக்கும்" என்றார்.
 
அதைக் கேட்ட திருடர்கள் சிரித்தார்கள். பிறகு அவர்கள் "இப்படி எல்லாம் சொல்லி எங்களிடமிருந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா? அதெல்லாம் முடியாது" என்றனர். பிராமணரோ "நான் தப்பிப்போக முயலமாட்டேன்.
நான் இப்போது உங்களிடம் சொன்னது உண்மை. நான் கற்ற மந்திரத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். அதனால் உங்களுக்குத்தான் அதிக நன்மை. நீங்கள் என் சீடனைக் கொண்டு வரச் சொன்ன பணத்தைவிடப் பன்மடங்கு உங்களுக்குக் கிடைக்கும்" என்றார்.
 
அவர்களும் அந்த அதிசயத்தைப் பார்க்கலாம் என நினைத்து பிராமணரின் கட்டுகளை அவிழ்த்தார்கள். அவரும் குளித்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து வேதப மந்திரத்தை உச்சரித்தார். ஆகாயத்திலிருந்து பொன்னும் வெள்ளியும் ரத்தினங்களுமாக மழைபோலப் பெய்து குவிந்தன. திருடர்கள் எல்லாவற்றையும் எடுத்து மூட்டைகளாக கட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அவர்களுக்குச் சற்றுப் பின்னாலேயே பிராமணரும் நடந்தார்.
 
சிறிது தூரம் போனதும் மற்றொரு திருடர் கூட்டம் அத்திருடர்களை மடக்கி நிறுத்தியது. அப்போது அத்திருடர்கள் புதிய திருடர் கூட்டத்திடம் "பணம் வேண்டுமானால் இதோ எங்கள் பின்னால் வரும் பிராமணனைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் தெரிந்து வைத்துள்ள மந்திரத்தை உச்சரித்தால் தங்கம், வைரம், ரத்தினம் என்று ஆகாயத்திலிருந்து கொட்டுகிறது. இதெல்லாம் அவன் எங்களுக்கு அவ்வாறு வரவழைத்துக் கொடுத்ததுதான்" எனக் கூறித் தாம் எடுத்துச் செல்லும் விலையுயர்ந்த பொருள்களை அவர்களிடம் காட்டிவிட்டுப் போனார்கள்.
 
உடனே அந்தத் திருடர் கூட்டம் பிராமணனைப் பிடித்துக் கொண்டு "எங்களுக்கும் அத்திருடர்களுக்குக் கொடுத்ததுபோல வரவழைத்துக் கொடு" என்றார்கள்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிராமணர் "அந்தப் பணத்தை நான் மந்திர சக்தியால் வரவழைத்துக் கொடுத்தது உண்மையே. ஆனால் எல்லாக்கிரகங்களும் ஒன்று கூடும் வேளையில் அந்த மந்திரத்தை உச்சரித்தால்தான் அவ்வாறு கிடைக்கும். அந்த மாதிரி எல்லா கிரகங்களும் வருடத்திற்கு ஒருமுறை தான் கூடும்" என்றார். அத்திருடர்கள் அவ்வாறு அந்த பிராமணர் கூறியதை நம்பவில்லை.
தங்களுக்குப் பணம் வரவழைத்துக் கொடுக்காமல் அவர் ஏமாற்ற முயல்கிறார் என எண்ணிவிட்டார்கள். அதனால் அவர்கள் "அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு இப்போதே அவர்களுக்குக் கிடைத்தது போல நவரத்தினங்கள் கிடைத்தாக வேண்டும் என்றார்கள்.
 
ஆனால் பிராமணரோ "இன்று முடியாதே. இன்று கிரகங்கள் கூடியபோது மந்திரத்தை உச்சரித்து விலையுயர்ந்த பொருள்களை மழை போலப் பெய்யச் செய்யச் செய்து அவர்களுக்கு நவரத்தினங்கள் கிடைக்கச் செய்துவிட்டேன். இனி அடுத்த வருடம் கிரகங்கள் ஒன்று கூடும் நாளன்று தான் இவ்வாறு செய்ய முடியும்" என்றார்.
 
திருடர்கள் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர்கள் அந்தப் பிராமணரை இரு துண்டுகளாக வெட்டி ஒரு மரத்தில் தொங்கப் போட்டனர். பிறகு தம்மிடமிருந்து தப்பிச் சென்ற திருடர்களைப் பிடித்துத் தாக்கினார்கள். அவர்களை எல்லாம் கொன்று அவர்கள் தூக்கிவந்த பணத்தையும் வைர ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டனர்.
 
பணம் நிறைய வந்தாலே பல சிக்கல்களும் அபாயங்களும் கூடவே வரத்தானே செய்யும். திருடர்கள் ஏராளமான பணம் பெற்றதும் அவர்களிடையேயும் ஆசையும் சுயநலமும் அதிகரித்துவிட்டது. அதனால் அந்தக் கூட்டத்திலும் இரு பிரிவுகள் ஏற்பட்டு தமக்குள் சண்டை போட்டுக் கொண்டனர். சண்டை மிகவும் முற்றிப்போய் அவர்கள் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தவே முடிவில் இருவரே மிஞ்சினார்கள். அவர்கள் அந்தப் பணத்தையும் இரத்தினங்களையும் காட்டில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். ஒருவன் அதற்குக் காவலாக நிற்க மற்றவன் ஊருக்குள் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிச் சென்றான்.
 
நகருக்குச் சென்றவன் கிடைத்த பொருளைத் தான் ஒருவனே அடைய வேண்டும் என நினைத்து, மற்றவனுக்குத் தான் வாங்கி வந்த உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு வந்தான்.
இதுபோல பணத்தைக் காவல் காத்தவன் தானே எல்லாவற்றையும் அடைய எண்ணி, மற்றவன் வந்ததும் அவன் மீது திடீரெனப் பாய்ந்து தன் கத்தியால் குத்திக் கொன்றான். அதன்பிறகு அவன் கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டான். சாப்பிட்டவுடன் விஷம் தலைக்கு ஏறி அவன் மறு நிமிடமே இறந்து விழுந்தான்.
 
இப்படியாக இரு திருடர் கூட்டத்தில் உள்ள அனைவரும், பிராமணரும் இறந்து போயினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு போதிசத்வர் திருடர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு தம் குருவை விடுவித்து அழைத்துப் போக வந்தார்.
 
அங்கு ஒரு மரத்தில் தம் குருவின் உடல் வெட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கண்டு "குருவே! நான் சொன்னதை கேட்காமல் மந்திரத்தை உச்சரித்து இப்படி உயிர் இழந்தீர்களே" எனக்கூறிக் கண்ணீர் வடித்தார். பின்னர் தனது குருவின் உடலை முறைப்படி எரித்து ஈமச்சடங்குகளைச் செய்தார். அதன்பிறகு காட்டு மலர்களைச் சேகரித்து அவரது உடலை எரித்த இடத்தில் தூவினார்.
 
அப்போது அவர் �நான் கூறியபடி மட்டும் என் குரு நடந்து மந்திரத்தை உச்சரிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு உயிர்சேதம் ஏற்பட்டுஇருக்காது. நான் சொன்னதை ஏற்காததால் அவரும் தம் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. முன்பின் யோசியாமலும் பிறர் சொல்லும் அறிவுரைகளை ஏற்காமலும் நடப்பவர்கள் தமக்கும் கெடுதலை விளைவித்துக் கொண்டு பிறருக்கும் தீங்கை விளைவிப்பார்கள். என் குருவின் மந்திரத்தால் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை� என எண்ணி அதனையே மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அறிவுரைகளை உபதேசித்து வரலானார்.
 

0 comments:

Post a Comment