யார் வேகம் அதிகம்?

 
பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது ஒரு காலத்தில் சித்திர கூடமலைப் பகுதியில் தொண்ணூறுஆயிரம் அன்னப்பறவைகள் வாழ்ந்து வந்தன. அப்போது போதிசத்வர் ஒரு அன்னப்பறவையாகப் பிறந்து அன்னப்பறவைகளின் கூட்டத்திற்குத் தலைவனாக இருந்தார்.
 
ஒரு நாள் அந்தத் தலைமை அன்னம் தன் கூட்டத்தோடு காசி நகரை அடைந்தது. அந்த அழகிய அன்னப்பறவைகளைக் கண்டு அந்த நாடே வியப்பில் மூழ்கியது. காசி மன்னனும் அந்த அன்னங்களைக் கண்டு அதிசயம் கொண்டான். அவனைத் தலைமை அன்னம் பெரியதும் கவர்ந்தது.
 
அதன் அழகிய தோற்றத்தையும் கம்பீர நடையையும் கண்டு அவன் மலர்களையும் வாசனைத் திரவியங்களையும் தன் வேலையாட்களை எடுத்துவரச் சொல்லி அந்தத் தலைமை அன்னத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தான்.
 
அந்த அன்னமும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று அந்த நாட்டில் தன் கூட்டத்தோடு சில நாள்கள் இருப்பதாகக் கூறியது. சிறிது நாள்களானதும் அன்னப் பறவைகள் காசியை விட்டுத் தம் இருப்பிடமாகிய சித்திரகூட பர்வதத்திற்குச் சென்றுவிட்டன. தலைமை அன்னமும் போய்விட்டதால் காசி மன்னன் மீண்டும் அது எப்போது வரும் என எதிர்பார்த்து இருக்கலானான்.
 
ஒருநாள் இரு அன்னக் குஞ்சுகள் தலைமை அன்னத்திடம் போய் "அரசே! நாங்கள் இருவரும் சூரியனோடு போட்டிபோட ஆசைப்படுகிறோம். அனுமதி கொடுக்கிறீர்களா?" என்று கேட்டன.
போதிசத்வரான தலைமை அன்னமும் "குழந்தைகளா! நீங்களா சூரியனுடன் போட்டி போடப் போகிறீர்கள்? அவர் எவ்வளவு வேகமாகச் செல்கிறார் என்பது உங்களுக்கு தெரியாது. அறியாமையால் இப்படிப் போட்டி போடப் போவதாகக் கூறுகிறீர்கள். இதில் உங்களுக்குத்தான் ஆபத்து. உயிருக்கேகூட அபாயம் ஏற்படலாம். எனவே உங்களது இந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள்" என்றது.
 
தலைமை அன்னப்பறவை கூறியது அந்தக் குஞ்சு பறவைகளுக்கு பிடிக்கவில்லை. அப்போதைக்கு அவை பேசாமல் சென்றன. ஆனால் இரண்டொரு நாள்களுக்குப் பிறகு அவை மீண்டும் தம் விருப்பத்தைத் தலைமை அன்னத்திடம் கூறின. அப்போதும் தலைமை அன்னம் முன்பு கூறியது போல் குஞ்சுகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டது. இனித் தலைமை அன்னத்திடம் கேட்பதில்பயனில்லை என அந்த இரு அன்னக்குஞ்சுகளும் தீர்மானித்துத் தம் தலைவனிடம் சொல்லாமலேயே ஒரு நாள் பறந்து சென்று மலைச் சிகரத்தின் மீது பறந்துபோய் உட்கார்ந்து கொண்டன. அங்கிருந்து சூரியனோடு போட்டி போட்டு ஓட அவை தீர்மானித்துக் கொண்டன.
 
வழக்கம் போலத் தலைமை அன்னம் அன்னப்பறவைகளெல்லாம் உள்ளனவா என்று சரிபார்த்தபோது இரு குஞ்சுகள் இல்லாததை கவனித்தது. அவை சூரியனோடு போட்டி போடத்தான் போய் இருக்கின்றன என ஊகித்து அது மிகவும் கவலை கொண்டது.
 
உடனே தலைமை அன்னம் அவற்றைத்தேடி பறந்து சென்றது. சிறிது தூரம் பறந்ததும் அவை மலைச் சிகரத்தின்மீது உள்ளது என்று கண்டு அவற்றிற்கு தெரியாமல் அவற்றின் பக்கமாக ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தது.
 
சூரியோதயம் ஆகியது. சூரியன் வெளிவந்ததும் அதோடு போட்டி போட்டுக் கொண்டு அந்த இரு குஞ்சுகளும் பறந்தன. அவற்றின் பின்னாலேயே தலைமை அன்னமும் பறந்து சென்றது.
 
அன்னக்குஞ்சுகளில் சிறியது உச்சிவேளைவரை பறந்தது. ஆனால் அதன் இறகுகள் கருகி அது களைத்துப் போய் கீழே விழுந்தது. சட்டெனத் தலைமை அன்னம் அதை அணுகவே அது "அரசே! என்னால் போட்டி போட முடியவில்லை. நான் தோற்றுவிட்டேன்" என்றது. தலைமை அன்னமும் "நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" எனக்கூறி அந்தக் குஞ்சை தன்னுடன் சேர்த்துக் கொண்டு மீண்டும் உயரப்பறந்து சென்றது.
சூரியனோடு போட்டி போட்ட மற்ற குஞ்சு உச்சிவேளைக்குச் சற்று நேரத்திற்குப் பிறகு களைத்துப் போயிற்று அதன் இறகுகளும் கருகிப்போகவே அதுவும் கீழே விழுந்தது. அதனையும் தலைமை அன்னம் எடுத்துப்போய் சித்திரகூட பர்வதத்தில் சேர்த்தது.
 
தனது கூட்டத்தில் இரு பறவைகள் சூரியனோடு போட்டி போட்டுத் தோற்றதை அந்தத் தலைமை அன்னம் தன் கூட்டத்திற்கே பெருத்த அவமானமாகக் கருதி அதைப் போக்கத் தீர்மானித்துக் கொண்டது. அதனால் அதுவே சூரியனோடு போட்டி போட உயரப்பறந்தது.
 
சற்று நேரத்தில் அது சூரியனுக்குச் சமமான இடத்தை அடைந்தது. பின்னர் சில வினாடிகளில் அது மேலும் வேகமாகப் பறந்து சூரியனையும் முந்திக் கொண்டு பறந்தது. இன்னமும் ஏன் சூரியனோடு பந்தயம் போட வேண்டும் இப்போதுதான் வெற்றி பெற்றாகிவிட்டதே என்ற திருப்தியுடன் அது ஒரு வட்டம் அடித்து விட்டுக் கீழே இறங்கி காசி நகரை அடைந்தது.
 
எப்போது தலைமை அன்னம் வரும் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்த காசி மன்னன் தலைமை அன்னத்தைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து போனான். அந்த அன்னப் பறவையைத் தன் அரியாசனத்தில் அமர்த்தி தங்கத் தட்டில் பாயசம், பானகம் போன்ற இனிய பானங்கள் நிறைந்த கிண்ணிகளை அதன் முன்வைத்து அதனை ஏற்குமாறு வேண்டினான். தலைமை அன்னப்பறவை அவற்றை மிகவும் ரசித்தபடி குடித்தபின் மன்னன் அதன்யோக க்ஷேமம் பற்றி விசாரித்தான்.
 
அந்த அன்னப் பறவையும் தான் அங்கு எப்படி வந்து சேர்ந்தது என்பதை மிகவும் விவரமாகக் கூறியது. அதைக் கேட்ட மன்னனும் "ஆகா! சூரியனுடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற உன் சக்திதான் எப்படிப்பட்டது!" என ஆச்சரியப்பட்டவாறே கூறினான்.
அந்த அன்னமும் தன் சக்தியை அந்த மன்னனுக்குக் காட்ட நினைத்து "மன்னா! உன் நாட்டில் நான்கு சிறந்த வில்லாளிகளைக் கொண்டுவா. அவர்கள் ஒரு மேடையின் நான்கு மூலைகளில் நின்று ஆளுக்கு ஒரு திசையில் மிகவும் வேகமாக அம்புகளை எய்யட்டும். நான் அந்த அம்புகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறேன். நான் செல்வதை உங்களால் காண முடியாது ஆனால் என் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கொண்டு நான் எந்தப் பக்கமாகச் சென்றேன் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்" என்றது.
 
மன்னனும் தலைமை அன்னம் கூறியது போல ஏற்பாடு செய்ய வில்லாளிகள் அம்புகளை எய்தனர். அந்த அன்னப்பறவை பறந்து போய் சில விநாடிகளில் அந்த நான்கு அம்புகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வந்து போட்டது. அதைக் கண்ட மன்னன் திகைக்கவே அன்னமும் "இது நான் சர்வசாதாரணமாகப் பறக்கும் வேகமே" என்றது.
 
மன்னனும் "அன்னப்பறவைகளின் மன்னனே! உன் வேகத்தை நாங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்தோம். உன்னை விட வேகமாகச் செல்லக்கூடியது வேறு ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான்.
 
போதிசத்வரான அன்னமும் "ஏன் இல்லாமல்? அது தான் கால சர்ப்பம் என்பது. அது வெகுவேகமாகப் போய் எவ்வளவு ஜீவராசிகளை அழிக்கிறது தெரியுமா? அதை வெல்லக்கூடியவன் யாருமே இல்லை. எனவே இதனை அறிந்தவன் எதற்கும் பயப்படத்தேவையில்லை.
 
நீதியாய், நேர்மையாய் நல்லவிதமாய் நீ ஆட்சிபுரிந்து வரும் வரையில் நீ யாரிடமும் பயப்படத் தேவையே இல்லை எனவே நீ நல்லவிதமாய் ஆட்சிபுரிந்துவா" என அறிவுரை கூறியது. காசி மன்னனும் போதிசத்வரின் அறிவுரைகளை ஏற்று ஆட்சிபுரிந்து பேரும் புகழும் பெற்றான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter