அட்சய நிதியை அடையும் வழி

 
லட்சுமணன் என்ற ஏழை விவசாயிக்கு தனராஜ் என்ற ஒரேயொரு மகன் இருந்தான். மிகக் கடினமாக உழைத்து அரை வயிற்றுக்கு சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி வந்த லட்சுமணனின் ஒரே ஆசை, தன் மகனாவது பள்ளியில் சேர்ந்துப் படிக்க வேண்டும் என்பதே! ஆனால், தனராஜ் பள்ளிக்குச் செல்வதையே வெறுத்தான். உடல் உழைப்பது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. உடல் நோகாமல் பணம் சம்பாதிக்க எண்ணினான்.

ஒருநாள், கிராமத்தின் எல்லையில்இருந்த மலைக் குகையில் ஒரு யோகி வந்து தங்கியுள்ளார் என்று கேள்விப்பட்டான். அவர் காலையில் நதியில் நீராடி முடித்தபின் குகைக்குத் திரும்பும் வேளையில் யார் முதலில் தென்படுகிறானோ, அவனுக்கு அவன் விரும்பிய வரம் அளிப்பார் என்றும் தெரிந்து கொண்டான். 

ஒருநாள் பொழுது புலரும் முன் குகைக்கு அருகில் இருந்த நதியை நோக்கிச் சென்றான். அவன் எதிர்பார்த்தபடியே, யோகி நதியில் நீராடிக் கொண்டிருந்தார். நீராடி முடித்தப்பின், அவர் கரையேறி வருகையில், தனராஜ் ஓட்டமாக ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி, "சுவாமி! உழைக்காமலே வாழ்க்கையில் வசதியாக இருக்க எனக்கு வரம் கொடுங்கள்!" என்றான்.

"உழைக்காமல் வாழ்க்கையில் மனிதனால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால், நீராடியபின் முதலில் தென்படுபவனுக்கு நான் வரம் அளிப்பது வழக்கம் அதனால் உனக்கு ஒரு தாயத்துத் தருகிறேன். இதனுடைய உதவியினால் நீ வாழ்க்கையில் மேன்மையடைவாய். ஆனால், இதை ஒரு முறை மட்டுமே நீ பயன்படுத்த வேண்டும்" என்று சொல்லிவிட்டு அகன்றார்
மிகவும் மகிழ்ந்த தனராஜ் தன் கிராமத்திற்குச் செல்ல விரும்பாமல், நகரத்தை நோக்கிப் புறப்பட்டான். நகரத்தின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தபோது, தெருவில் தனது முன் சென்று கொண்டிருந்த இரு நண்பர்களின் உரையாடலை கேட்க நேரிட்டது.

"என்னப்பா வரதா? உனக்கு வியாபாரத்தில் ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைத்ததாமே! அத்தனை பணத்தையும் வீட்டில் வைத்துக் கொள்ளாதே! ஏற்கெனவே, நகரத்தில் திருட்டு பயம் அதிகமாக உள்ளது" என்றான் அவர்களில் ஒருவன்.


அதற்கு வரதன், "கண்ணா! என் வீட்டைச் சுற்றி பலத்தக் காவல் போட்டிருக்கிறேன். காற்றுகூட என் வீட்டில் நுழைய முடியாது.  அதிருக்கட்டும்! உனக்கு மன்னரிடமிருந்து ஏராளமான பணம் வருமானமாகக் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதனால் நீயும் எச்சரிக்கையாக இரு!" என்றான்.

அதற்கு கண்ணன் "எனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அட்சய நிதியாக மாற்றி விடுகிறேன். அதிலிருந்து எத்தனை எடுத்தாலும் வற்றாது. அதை யாராலும் திருட முடியாது என்றான்.

"அப்படியா? நீ இப்போது எங்கே வசிக்கிறாய்?" என்று வரதன் கேட்க, கண்ணன் தன் முகவரியைக் குறிப்பிட்டான். அதைக் காது கொடுத்து கவனமாகக் கேட்ட தனராஜின் உள்ளம் மகிழ்ச்சியினால் கூத்தாடியது. எப்படியாவது கண்ணனின் வீட்டில் புகுந்து, அட்சய நிதியைக் களவாடி விட்டால், பிறகு வாழ்நாள் முழுவதம் வேலை செய்யாமல் சொகுசாக காலங்கழிக்கலாம் என்று கணக்குப் போட்டான்.
 
தாயத்தின் மகிமையினால் சுலபமாக அட்சய நிதியைத் திருடிவிட முடியும் என்றும் நம்பினான்.
இரவு வந்ததும், மெதுவாகக் கண்ணன் வீட்டை அடைந்து கொல்லைப்புறச் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தான். யோகி அளித்த தாயத்தைக் கையில் கட்டிக் கொண்டு, சத்தமின்றி வீட்டினுள் நுழைந்தான். வீட்டின் வரவேற்பு அறையில் மிக அழகான சித்திரங்களும், சிற்பங்களும் காணப்பட்டன. அவற்றைத் தவிர அலமாரியில் அடுக்கடுக்காகப் பல ஓலைச்சுவடிகள் தென்பட்டன. ஆனால், தனராஜ் ஆவலுடன் தேடிய அட்சய நிதி எங்கும் தென்படவில்லை.

ஏமாற்றமடைந்த தனராஜ் காலையில் மீண்டும் அந்த யோகியைத் தேடிச் சென்றான். நடந்ததையெல்லாம் கூறினான். இதைக் கேட்டு பலமாக சிரித்த யோகி, "கண்ணன் ஒரு அறிவாளி! அவன் அட்சய நிதி என்று குறிப்பிட்டது அறிவுச் செல்வத்தையே! அவனிடம்இருந்த ஓலைச்சுவடிகளையே அவன் அட்சய நிதி என்று குறிப்பிட்டான். தன்னுடைய வருமானத்தை அட்சய நிதியாக மாற்றுவது என்றால், அந்தப் பணத்தில் ஓலைச்சுவடிகள் வாங்குவது என்று பொருள்!"  என்றார்.

"ஐயோ! தாயத்தை நான் ஒரு முறை பயன்படுத்தி விட்டேனே! இனி அதை உபயோகிக்க முடியாதே!" என்றான் தனராஜ்.

"நீ கவலைப்படாமல் அந்த கண்ணணிடம் திரும்பிச் செல்! அவனிடம் சீடனாகச் சேர்ந்து, உன் கல்வியறிவை வளர்த்துக் கொள்! என்னுடைய தாயத்தின் மகிமையினால், நீ என்றுமே வற்றாதக் கல்விச் செல்வத்தைப் பெற்று நலமாக இருப்பாய்!" என்றார் அவர்! அவருடைய அறிவுரைக்கேற்ப, தனராஜ் கண்ணனைச் சந்தித்து  அவரிடம் சீடனாகச் சேர்ந்தான். சில ஆண்டுகளிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து அவன் ஒரு மகாபண்டிதனாகத் திகழ்ந்து, நலமுடன் இருந்தான்.

 

0 comments:

Post a Comment