பண்டிகைகள் மனமகிழ்ச்சிக்காக மட்டுமல்ல

கோடை விடுமுறைக்குத் தன் பெற்றோருடன் கேரளம் செல்லப் போவதை அறிந்தது முதல் சாந்தா ஒரே உற்சாகமாயிருந்தாள். விடுமுறையும் தொடங்கியது. சாந்தா தன் பெற்றோருடன் நீண்ட பயணம் செய்து கேரளத்தில் தாத்தா வீட்டை அடைந்தாள். சாந்தாவைக் கண்டதும் அவளுடைய பாட்டி அவளை அப்படியே வாரியணைத்துக் கொண்டாள். வந்ததும் வராததுமாக, "பாட்டி? விஷு என்றைக்கு?" என்று சாந்தா கேட்க, "நாளைக்கு!" என்று தாத்தா பதிலளித்தார்.


அப்போது பண்ணைத் தொழிலாளிகளான சின்னானும், கண்ணனும் வந்தனர். தாத்தா அவர்களை மறுநாள் விஷுப் பண்டிகைகக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். அவர்களுடன் தானும் செல்வேன் என்று சாந்தா பிடிவாதம் செய்ய, தாத்தாவும் அனுமதித்தார்.


சின்னான் சாந்தாவை அழைத்துக் கொண்டு தாத்தா வீட்டின் பின்புறமிருந்த பெரிய தோட்டத்திற்குச் சென்றான். கண்ணன் வேறு வேலையாக கடைக்குச் சென்றான். "கண்ணன் ஏன் நம்முடன் வரவில்லை?" என்று சாந்தா கேட்க, "அவன் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கியபின் இங்கே வருவான்" என்றான் சின்னான்.


முதலாவதாக அவர்கள் மாமரத்தை நோக்கிச் சென்றனர். அங்கே அவளுக்காக தாத்தா ஏற்கெனவே ஓர் ஊஞ்சல் பொருத்தி வைத்துஇருந்தார். சாந்தா சொகுசாக ஊஞ்சலாட, சின்னான் மாமரத்தில்இருந்து பழுத்த மாம்பழங்கள் சிலவற்றைப் பறித்துக் கூடையில் போட்டுக் கொண்டான்.

"அடுத்து என்ன?" என்று சாந்தா கேட்க, "வா என்னுடன்! நீயே தெரிந்து கொள்வாய்!" என்றான் சின்னான். தோட்டத்தின் வேலி ஓரமாக வளர்ந்திருந்த ஆவாரம்பூ மரத்தை நோக்கி, நடக்க, சாந்தாவும் பின் தொடர்ந்தாள். மரம் முழுவதும் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்த ஆவாரம் பூக்களைப் பார்த்து சாந்தா பிரமித்துப் போனாள். மரத்தின் மீதேறி மலர்களைக் கொத்துக் கொத்தாகப் பறித்து சின்னான் அவளிடம் தர, அவள் அவற்றைக் கூடைக்குள் போட்டாள்.

பிறகு இருவரும் பலாமரத்தை நோக்கிச் சென்றனர். மரம் முழுவதும் பலாப் பழங்களாகப் பழுத்துத் தொங்கின. அடி மரத்தில் பலாப்பழங்கள் தொங்கியதைக் கண்டு சாந்தா வியப்படைந்தாள். அடிமரத்தில் தொங்கிய பழங்களில் ஒன்றை சின்னான் காம்பில்இருந்து வெட்டியதும், பால் வடிந்தது. பழத்தை ஒரு புறமாக வைத்தவன் அங்கு வந்த கண்ணனுடன் செல்லுமாறு சாந்தாவை வைத்தான்.

அதன் பின், சாந்தா கண்ணனுடன் தோட்டத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்றாள். அங்கே காய்கறிச் செடிகள் மிகுந்துக் காணப்பட்டன. "இந்தத் தோட்டத்தை உன் பாட்டி மிக அக்கறையுடன் கவனித்து வருகிறாள். இங்கு இல்லாத காய்கறிச் செடிகளே இல்லை" என்றான் கண்ணன்.

"இங்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்று கேட்டாள் சாந்தா. "விஷுக்கனிக்காக இங்கிருந்து காய்கறிகள் எடுத்துச் செல்ல வேண்டும்" என்றான் சின்னான். முதலில் கண்ணன் தரையெங்கும் படர்ந்திருந்த கொடிகளை நோக்கிச் சென்றான். அவற்றில் ஆங்காங்கே வெள்ளரிக்காய்கள் காய்த்திருந்ததைப் பார்த்தபின்பே, வெள்ளரிக்காய்கள் கொடிகளில் காய்க்கும் என்று அவளுக்குத் தெரிய வந்தது. கொடிகளினிடையே கணக்கற்ற வெள்ளரிக்காய்களில் பல கண்ணுக்குத் தென்பட, அவற்றில் சிலவற்றைப் பறித்துக் கண்ணன் கூடையில் போட்டான். மேலும் சில காய்கறிகளை சேகரித்த பின், இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.

அடுத்த நாள் காலை, சாந்தாவைப் படுக்கையிலிருந்து முதன்முதலில் நீ அவள் கண்களை இறுக மூடிக் கொண்டே, "இன்று விஷு! முதன் முதலில் நீ பூஜையறையில் தான் கண் விழிக்க வேண்டும். அதற்குமுன் கண்களைத் திறந்து எதையும் பார்க்காதே!" என்று சொல்லிவிட்டு, அவளை அவள்தாய் அந்த நிலையிலேயே அழைத்துச் சென்றாள்.

"இப்போது கண்களைத் திற!" என்று சொன்னதும், சாந்தா கண் விழித்தாள். அவள் பார்வையில் ஆவாரம்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கிருண்ஷர்தான் முதலில் தென்பட்டார்.

சுவாமிக்கு இரண்டு பக்கங்களிலும் இரு குத்து விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. சுவாமிக்கு முன் ஒரு பெரிய வெண்கல உருளி வைக்கப்பட்டிருந்தது. அதனுள் அரிசி, பாசிப்பருப்பு, காய்கறிகள், மாம்பழம், பலாப்பழம் வாழைப்பழம் ஆகிய பழங்கள் நிரப்பப்பட்டிருந்தன. பக்கத்தில் உடைத்தத் தேங்காய் மூடிகள் இருந்தன. அவற்றுள் வெள்ளி நாணயங்கள் நிரப்பப்பட்டிருந்தன. உருளிக்கு மறுபக்கத்தில் தங்க ஆபரணங்கள் நிரப்பட்டிருந்த ஒரு பட்டுத்துணியும் காணப்பட்டது.

கிருஷ்ணருக்குப் பக்கத்தில் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி நிறுத்தப்பட்டிருந்தது. கண்ணாடியில் உருளி அதற்குள் நிரப்பட்டிருந்த தானியங்கள், காய்கனிகள் ஆகியவை, தங்க ஆபரணங்கள், வெள்ளிக்காசுகள் இருந்த தேங்காய் மூடிகள் ஆகியவற்றின் பிம்பம் தென்பட்டது. கண்ணாடியில் பிரதிபலித்த பிம்பத்தைப் பார்த்து சாந்தாவை வணங்கச் சொன்னாள் அவள்தாய்! எதற்காக அவ்வாறு செய்ய வேண்டும் என்று சாந்தாவிற்கு விளங்கவில்லை.

உடனே நீராடச் சென்ற சாந்தா, நீராடியபின் தாத்தாவிடம் சென்று அவரைத் தன் கேள்விக்கணைகளினால் துளைத்தாள். "சொல்கிறேன்! அதற்கு முன் இதை வாங்கிக் கொள்!" என்ற அவளுடைய தாத்தா, அவளுக்கு வெற்றிலைப் பாக்குடன் ஒரு ரூபாய் நாணயத்தைத் தந்தார்.
 
"தாத்தா! ஏன் கண்ணாடியில் பார்க்க வேண்டும்? எனக்கு எதற்கு ரூபாய் கொடுத்தீர்கள்?" என்று தன் கேள்விகளை மீண்டும் தொடங்கினாள். விஷு என்பது மலையாள வருஷப் பிறப்பு தினம் என்றும், வருடத்தின் முதல்நாள் குழந்தைகளுக்கு வெள்ளிக்காசு தானம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அவர்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் அதன் உட்பொருளை விளக்கினார்.
தொடர்ந்து, "நம் நாட்டின் பண்டிகைகள் யாவும் விவசாயத்தையும், அவ்வப்போது நிலத்தில் விளையும் பொருட்களையும் ஒட்டியே கொண்டாடப்படுகின்றன. விஷுவும் அப்படித்தான்! நமது உருவத்தையும் காய்கறி மற்றும் பழங்களும் சேர்த்துக் கண்ணாடியில் பார்க்கையில், அவற்றைப் போலவே நாமும் இயற்கையின் சிருஷ்டி என்பதை உணர்கிறோம். இறைவனுக்கு நன்றி கூறி வணங்குகிறோம்!" என்றார்.
தனது சந்தேகங்கள் தீர்ந்ததும், சாந்தா அனைவருடனும் சேர்ந்து விருந்து சாப்பிட்டாள். அன்றைய விருந்தில் காய்கறிகளையும், தானியவகைகளையும் சேர்த்து சமைத்த விசேஷமான அரிசிப் பொங்கல் முக்கிய அம்சமாக இருந்தது. அவற்றுடன், பக்குவமாகச் சமைத்த காய்களும், மாம்பழம், பலாச்சுளைகள் மற்றும் வாழைப்பழம் ஆகியவையும் பரிமாறப்பட்டன.
 விருந்து சாப்பிட்டு முடித்த பிறகு, சாந்தா உல்லாசமாக மாமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில் நீண்ட நேரம் ஆடினாள். பண்டிகைகள் வெறும் மனமகிழ்ச்சிக்காக மட்டுமில்லைஎன்றும், அவை ஒன்வொன்றுக்கும் பின்னணியில் ஒரு உட்பொருள் உள்ளது என்றும் புரிந்து கொண்டாள்.


0 comments:

Post a Comment