தகுதி எது?

 
போதிசத்வர் பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அவனது. பண்டகசாலை அதிகாரியாக இருந்தார். அரசாங்கத்திற்கு வாங்கும் எந்தப் பொருட்களையும் மதிப்பிட்டு விலை கொடுப்பது பண்டகசாலை அதிகாரியின் வேலை. அவரும் பொன், குதிரை, தங்க, வெள்ளி நகைகள், பாத்திரங்கள் முதலிய வற்றிற்குச்சரியான மதிப்புப்போட்டு விலை கொடுத்து வாங்கி வந்தார். விலைக்கு விற்றவர்களும் அவர் கூறிய விலை நியாயமானதே என்று ஏற்று மகிழ்ச்சியுடன் அந்த விலைக்கான பணத்தை வாங்கிச் சென்றனர்.

ஆனால் ஒரு நாள் திடீரென காசி மன்னன் மனதில் போதிசத்வர் கொடுக்கும் விலையைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தன் அறை சன்னலைத் திறந்தான். தோட்டத்தில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ தோட்டக்காரன் அங்கு வேலை செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவர் "ஆகா! இந்தத் தோட்டக்காரன் எவ்வளவு உண்மையாக வேலை பார்க்கிறான்.

இவனை போதிசத்வருக்கு பதிலாகப் பண்டகசாலை அதிகாரியாக நியமிக்கிறேன். இப்படி உண்மையாகப் பாடுபடுபவன் எல்லா வேலைகளிலும் உண்மையுடன் நடந்து கொள்வான்" என எண்ணி உடனேயே அவனை அப்பதவியில் அமர்த்தினார். போதிசத்வரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

புதிய அதிகாரிக்கு வியாபாரத்தில் அனுபவம் இல்லாததால் தன் இஷ்டம் போல் பொருட்களின் விலைகளை மதிப்பிடலானான். அது மிகமிகக் குறைவாக இருந்தாலும் தாம் அரசாங்கத்திற்கு கொடுக்கிறோமே என பயந்து பொருளை விற்பவர்கள் அந்த அதிகாரி கொடுத்த விலையை வாங்கிக் கொண்டு மனம் புழுங்கியவாறே சென்றனர். ஒரு நாள் அயல் நாட்டிலிருந்து ஒரு குதிரை வியாபாரி தன் ஐநூறு உயர் ரக குதிரைகளை விற்க காசிக்கு வந்தான். புதிய அதிகாரி அக்குதிரைகளை மதிப்பிட்டு விட்டு "இவற்றின் மதிப்பு அரைப்படி அரிசியே. இவனுக்கு அரைப்படி அரிசியைக் கொடுத்து போய் குதிரைகளை நம் லாயத்தில் கட்டுங்கள்" என்றான்.
குதிரை வியாபாரி திகைத்துப் போனான். அவன் அந்த விலைக்கு விற்கச் சம்மதிக்காமல் நேராக போதிசத்வரிடம் போய் நடந்ததைக் கூறி, "இது அநியாயம். ஐநூறு குதிரைகளின் விலை அரைப்படி அரிசியாம்! நீங்களே சொல்லுங்கள், இது அக்கிரமம் இல்லையா? இப்படியா என் வியாபாரத்தில் மண்ணைப் போட வேண்டும்?" என்றான்.

போதிசத்வரும் "இந்தப் புது அதிகாரியை சந்தோஷப் படுத்த முதலில் அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடு. பிறகு அவர் குதிரைகளுக்கு மதிப்புப் போட்ட விலை மிகச் சரியானதே என்றும் ஆனால் அந்த அரைப்படி அரிசியின் விலை என்ன என்பதை அரச சபையில் எல்லோர் முன்னிலும் சொல்ல வேண்டும் எனக்கேட்டுக் கொள். அவன் இதற்கு இணங்கினால் நாளை அரச சபைக்கு அழைத்துப் போ. நானும் அங்கு வந்து உனக்கு நியாயம் கிடைக்கச் செய்கிறேன்" என்றார்.

அந்தக் குதிரை வியாபாரியும் போதிசத்வர் கூறியது போலவே புதிய அதிகாரியைக் கண்டு கொஞ்சம் பணம் கொடுத்து, அரச சபைக்கு வந்து அந்த அரிசியின் விலையை அவனால் கூற முடியுமா என்று கேட்டான்.

அந்த அதிகாரியும் "ஏன் முடியாது? நாளையே நான் அரச சபையில் அதன் விலையைக் கூறுகிறேன்" என்றான். மறுநாள் அரசசபையில் ஏராளமான மக்கள் கூடி இருந்தார்கள். போதிசத்வரும் அரசரின் அனுமதி பெற்று வந்து அமர்ந்திருந்தார்.

அப்போது அந்தக் குதிரை வியாபாரி பண்டகசாலை அதிகாரியோடு அரசனின் முன் வந்து "அரசே இவர் என் குதிரைகளின் விலை அரைப்படி அரிசி என்றார். அந்த அரைப்படி அரிசியின் விலை என்ன என்பதை இவர் இப்போது கூற வேண்டும்" என்றான்.

அரசனும் "அப்படியா! ஐநூறு குதிரைகளின் விலை அரைப்படி அரிசி என்றால் அந்த அரைப்படி அரிசியின் விலை என்ன?" என்று கேட்டார். அரசனுக்கு அதற்கு முன் என்ன நடந்தது என்பது தெரிய வில்லை. பண்டகசாலை அதிகாரியும் சற்றும் தயங்காமல் "அந்த அரைப் படி அரிசியின் விலை இந்தக் காசி ராஜ்யமும் இதன் கீழே உள்ள மற்ற நாடுகளும் எவ்வளவு விலை பெறுமோ அவ்வளவு விலையாகும்" என்றான்.
இந்தப் பதிலைக் கேட்டதும் அனைவரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். கைதட்டிக் கேலி செய்தார்கள். அப்போது வேறு ஒரு வியாபாரி "அரசே! இவ்வளவு நாட்களாக நம் நாட்டை விலை மதிப்பிட முடியாதது என எண்ணி வந்தோம். இந்த அதிகாரி தன் அபார அறிவால் நம் நாட்டோடு மற்ற நாடுகளையும் சேர்த்து விலை மதிப்பு போட்டு அரைப்படி அரிசி எனக் கூறி விட்டாரே ஆகா! என்ன அறிவு எவ்வளவு திறமை" என்று நையாண்டி செய்தான்.

அப்போது போதிசத்வர் எழுந்து "இந்த அதிகாரி கூறுவது உண்மையே. இவரைக் கேலி செய்யாதீர்கள். ஐநூறு குதிரைகளின் விலை அரைப்படி அரிசி என்றார். அவர் அரைப்படி அரிசி விலை என்ன என்று கேட்ட போது அவர் இந்த நாடும் இதன் கீழுள்ள நாடுகளும் சேர்ந்த விலை என்றார். எனவே ஐநூறு குதிரைகளின் விலை இந்த நாடும் இதன் கீழுள்ள நாடுகளும் பெறும் மதிப்பிற்குச் சமம் என்று ஆகிறது. எனவே அந்த வியாபாரிக்கு இந்த விலை கொடுப்பது சரிதானே" என்றார். இதைக் கேட்ட எல்லோரும் திகைத்துப் போனார்கள். தகுதி இல்லாத ஒருவனுக்கு உயர் பதவி அளிப்பதால் எவ்வளவு கெடுதல் விளையும் என்பதை அரசனும் அப்போது தான் உணர்ந்தார். உடனே அந்த அதிகாரியை விசாரிக்கவே அவன் முன்தினம் நடந்ததை எல்லாம் கூறி தான் அந்த வியாபாரியிடம் பணம் பெற்றுக்கொண்டு அரச சபையில் குதிரைகளின் விலையைக் கூற இசைந்ததையும் சொன்னான்.

உடனே அரசன் "இப்படி நீ லஞ்சம் வாங்கியதால் உன்னை இப்போதே இப்பதவியில் இருந்து நீக்குகிறேன்" என அவனை நீக்கி விட்டு சத்வரையே மீண்டும் அப்பதவியில் அமர்த்தினான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter