நரகவாசம்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது அந்நகரில் புகழ்பெற்ற வியாபாரி ஒருவன் இருந்தான். அவனது மகன் மித்திரவிந்தன். அவன் புரிவதெல்லாம் பாவச் செயல்களே. இதனால் மனமுடைந்து அவனது தந்தை இறந்து போனான். அவனது தாயோ "இனிமேலாவது நல்லது செய்து புண்ணியம் சம்பாதி. கெட்ட காரியங்களைச் செய்யாதே" என்று அவனுக்கு அறிவுரை கூறினாள்.

ஒருநாள் அவனது தாயார் "இன்று பெளத்த விகாரத்தில் பிரசங்கம் செய்ய யாரோ வருகிறார்களாம். இரவு முழுவதும் பிரசங்கம் நடக்குமாம். போய் நீயும் கேட்டு விட்டு வா. உனக்கு நாளை செலவிற்குப் பணம் கொடுக்கிறேன்" என்றாள். மறுநாள் தன் செலவிற்குப் பணம் கிடைக்கிறதே என எண்ணி மித்திரவிந்தன் அவ்வாறே செய்வதாகக் கூறிப் போனான். ஆனால் அவன் பெளத்த விகாரத்திற்குச் சென்று பிரசங்கமா கேட்டான்? பிரசங்கம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மித்திரவிந்தன் ஒரு மூலையில் போய் படுத்துத் தூங்கினான். காலையானதும் எழுந்து முகம் கழுவிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அவன் தான் சொன்னபடி கேட்ட தற்காக அவனது தாய் மகிழ்ந்து போய் நல்ல சமையல் செய்து சாப்பாடு போட்டாள். பிறகு அவன் தன் கைச்செலவிற்காகத் தாயாரிடம் இருந்து நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றான்.

அந்த நூறு ரூபாயைக் கொண்டு வியாபாரம் செய்து சிறுகச் சிறுக இலாபம் அடைந்து முடிவில் இருபது லட்சம் ரூபாய் எப்படியோ சேர்த்து விட்டான். எல்லாம் அநியாய வழியில் சம்பாதித்ததுதான். அந்தப் பணத்தோடு அயல்நாடுகளில் வியாபாரம் செய்ய அவன் கப்பலில் கிளம்பிச் சென்றான்.
கிளம்பு முன் தாயாரிடம் தான் மேலும் லாபம் அடைய அயல்நாடுகளுக்கு வியாபாரம் செய்யப் போவதாகக் கூறவே அவளும் "மகனே, நீ எனக்கு ஒரே மகன். இப்போது தான் உன்னிடம் நிறையப் பணம் இருக்கிறதே. இன்னமுமா சம்பாதிக்க வேண்டும்? இருப்பதை தான தர்மம் என்று புண்ணிய காரியங்களில் செலவு செய்து சுகமாக இருக்கலாமே" என்று கூறித் தடுத்தாள். ஆனால் அவன் தன் தாயின் பேச்சைக் கேட்காமல் அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு இரண்டு அடிகள் கொடுத்து அவளை எழுந்து வராமல் செய்து விட்டு கிளம்பிப் போனான். அவன் ஏறிச் சென்ற கப்பல் எட்டாவது நாளன்று நடுக்கடலில் நின்று விட்டது. அது முன்னே செல்லவில்லை.

அது கண்டு கப்பலில் இருந்த மாலுமிகள் "இந்தக் கப்பலில் யாரோ ஒரு பாவி இருக்கிறான். அவன் யார் எனத் திருவுளச் சீட்டு போட்டுக் கண்டு பிடிக்கலாம். அவனை ஒரு படகில் ஏற்றிக் கடலில் விட்டு விட்டால் நம் கப்பல் நகரும்" என்றனர்.

மறுநிமிடமே திருவுளச்சீட்டு போடப்பட்டது. மித்திரவிந்தனின் பெயர்தான் முதல் தடவையில் வந்தது. மேலும் இரண்டு தடவைகள் போட்டுப் பார்த்த போதிலும் அவன் பெயர் தான் வந்தது. உடனே ஒரு படகை கடலில் இறக்கி அதில் மித்திரவிந்தனை வைத்து அவர்கள் விட்டு விட்டார்கள். அவனது படகு எங்கோ செல்ல அக்கப்பலும் அங்கிருந்து நகர்ந்தது.

மித்திரவிந்தனின் படகு வெகு நாள்களுக்குப் பிறகு ஒரு தீவை அடைந்தது. அவன் அத்தீவில் இறங்கியதும் ஒரு படிகக்கல் மாளிகையைப் பார்த்தான். அந்த மாளிகையில் நான்கு பெண் பிசாசுகள் வசித்து வந்தன. அவை ஒரு வாரகாலம் அனைத்து சுகபோகங்களை அனுபவித்தும் அடுத்த வாரம் தாம் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டு கடும் விரதங்களைக் கடைப் பிடித்தும் வந்தன.

மித்திரவிந்தன் அப்பிசாசுகளுடன் ஒரு வாரகாலத்தைச் சுகமாகக் கழித்தான். அடுத்த வாரம் விரதம் என்றதும் அவன் அவற்றிடம் சொல்லிக் கொள்ளாமல் கூடத் தன் படகில் ஏறிக் கிளம்பி விட்டான்.
அப்படகு பல நாள்களுக்குப் பிறகு அவனை இன்னொருதீவில் கொண்டு போய் விட்டது.

அத்தீவில் எட்டு பிசாசுகள் இருந்தன. அவற்றோடும் ஒருவாரகாலம் சுகமாக இருந்து விட்டு அவன் தன் படகில் கிளம்பிச் சென்றான். அடுத்த தீவில் பதினாறு பிசாசுகளுடனும் அதற்கு அடுத்த தீவில் முப்பத்திரெண்டு பிசாசுகளுடனும் ஒவ்வொரு வாரம் சுகமாகக் கழித்து விட்டு வேறொரு தீவை அடைந்தான்.

அந்தத் தீவில் ஒரு பெரிய நகரம் தென்பட்டது. அதைச் சுற்றிலும் பெரிய மதில் சுவரும் நான்கு தலை வாசல்களும் இருந்தன. அது உண்மையில் நரகலோகம். ஆனால் மித்திரவிந்தன் கண்களுக்கு அது அழகிய நகரமாகத் தோன்றியது அதற்குள் அவன் சென்றான்.

நகரில் ஒரு வீதியில் ஒரு மனிதன் நிற்க அவன் தலை மீது ஒரு பெரிய சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. அது கனமாயும் அதன் ஆரக்கால்கள் வாள் போல் கூராகவும் இருந்தன. சக்கரம் அவனது தலைக்குள் நன்கு அழுந்திச் சுழன்றதால் ஆரக்கால்கள் தலை மீது பட்டு இரத்தம் வடியச் செய்து கொண்டிருந்தன. அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததால் அவனால் சிறிது கூட ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு அசைய முடியவில்லை. வலியால் அவன் மிகவும் பலமாக அலறிக் கொண்டிருந்தான்.

இதை எல்லாம் கண்டும் மித்திரவிந்தன் அவனை அந்நகரத்தின் மன்னன் என நினைத்தான். அவன் தலை மீது சுழன்ற சக்கரம் கிரீடம் போல அவன் கண்களுக்குப் பட்டது. அவனைப் பிணைத்திருந்த சங்கிலிகள் தங்க ஆபரணங்களாக அவனுக்குத் தோன்றின.
 
தனக்கு அது கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் தானும் அந்த நாட்டின் மன்னனாகி விடலாம் என்றும் நினைத்தான்.

இவ்வாறு நினைத்துக் கொண்டு மித்திரவிந்தன் அந்த மனிதனை அணுகி "ஐயா! உங்கள் தலை மீதுள்ள கிரீடத்தை நான் சற்று நேரம் அணிந்திருக்க அனுமதிப்பீர்களா?" என்று கேட்டான்.

அவனோ "இது கிரீடமல்ல, சக்கரம்" எனவே, மித்திரவிந்தன் "எனக்குக் கொடுக்க இஷ்டப்படாமல் இப்படி ஏதோ ஒரு சாக்கு சொல்கிறீர்களே" என்றான். இதைக் கேட்ட அம்மனிதன் தன் பாவத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டதென எண்ணி "ஆகா, கொடுக்கிறேன்" எனக் கூறி அந்த சக்கரத்தை எடுத்து மித்திர விந்தனின் தலை மீது வைத்து விட்டுப்போய் விட்டான். தாயை அடித்தவர்களுக்கு நரகத்தில் அப்படி ஒரு தண்டனை என மித்திரவிந்தன் அறிந்திருக்கவில்லை தான். சக்கரம் அவனது தலை மீது வைக்கப்பட்ட பின்புதான் மித்திரவிந்தனுக்கு அதன் வலியும் உண்மையும் புரிந்தது.

இந்திரனாக இருந்த போதிசத்வர் ஒருமுறை நரகலோகத்தைக் காண வந்தார். அவர் மித்திரவிந்தன் இருந்த இடத்திற்கு வந்தபோது அவன் அவரிடம் "என் மீது இரக்கம் காட்டுங்கள். இந்தச் சக்கரத்தினிடம் இருந்து எப்போது நான் விடுதலை பெறுவேன்?" என்று கேட்டான்.

அப்போது போதிசத்வர் "உன்னிடம் எவ்வளவோ பணம் இருந்தும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டாய். பிசாசுகளுடன் வசித்தாய். மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய உயர் நெறிகளை ஏற்கவில்லை. இதனை நீயே கேட்டு வாங்கிக் கொண்டாய். எனவே உன் ஆயுட்காலம் முடியும் வரை உனக்கு இந்த நரகவாசம்தான்" எனக் கூறினார்.

மித்திரவிந்தனும் கண்ணீர் வடித்துத் தன் விதியை நொந்தவாறே நரகத்தில் வசிக்கலானான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter