கோட்டை நாய்கள்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் ஒரு நாயாகப் பிறந்து நாய்களின் கூட்டத்திற்குத் தலைவராக விளங்கினார். ஒரு நாள் அந்நாட்டு மன்னன் தன் ரதத்தில் எங்கோ போய் விட்டு அரண்மனைக்கு வந்தான். தன் ரதத்தை நிறுத்தி விட்டு அவன் உள்ளே சென்றான். அப்போது கோட்டைக்குள் வளர்க்கப்படும் நாய்கள் ஓடி வந்து குதிரைகளுக்குப் போடப்பட்டிருந்த கடிவாளங்களைக் கடித்து தோல் துண்டுகளைத் தின்று விட்டு ஓடிப் போய் விட்டன.

சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த மன்னன் தன் குதிரையின் கடிவாளங்கள் கடிக்கப் பட்டிருப்பதையும் சற்று தூரத்தில் சில நாய்கள் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் விலையுயர்ந்த கடிவாளங்கள் நாசமாக்கப்பட்டது கண்டு அவன் கோபம் கொண்டு நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படித் தன் வீரர்களுக்குக் கட்டளை இட்டான்.

வீரர்களும் நாட்டில் தெருவில் கண்ட நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லலானார்கள். நாய்கள் எல்லாம் பயந்து ஓடிப் போய்த் தம் தலைவராக நாய் உருவில் இருந்த போதிசத்வரிடம் போய் அரசனின் கட்டளையைக் கூறிப் பல நாய்கள் இறந்து போனதையும் கூறின.

போதிசத்வரும் "நான் இப்போதே அரச சபைக்குப் போய் அரசனுக்கு நல்லது கூறி இந்த உத்தரவை ரத்து செய்து நியாயம் வழங்கச் சொல்கிறேன்" எனக் கூறி விட்டு அரச சபைக்குச் சென்றார். அங்கு அவர் அரண்மனைக்குள் நுழைந்து எப்படியோ தர்பார் மண்டபத்திற்குள் போனார். பிறகு அவர் அங்கு அரசன் சிம்மாசனத்தின் அடியே புகுந்து வந்து அரசனின் முன் நின்றார்.
அப்போது காவல் வீரர்கள் அந்த நாயை அடிக்க முயலவே அரசன் அவர்களைத் தடுத்து "இது ஏதோ சொல்ல வந்திருக்கிறது. அது என்ன என்று கேட்போம்" என்றான்.

போதிசத்வரான நாயும் "அரசே, நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படி உத்தரவு போட்டிருக்கிறீர்களே. இது எதற்காக?" என்று கேட்டது. அரசனும் "அவை என் தேர்க் குதிரைகளின் கடிவாளங்களைத் கடித்து அந்தத் தோலைத் தின்று விட்டன. விலை உயர்ந்த கடிவாளங்கள் நாசமாகி விட்டன. இதுதான் நாய்களின் குற்றம்" என்றான்.

அப்போது போதிசத்வர் "அந்தக் கடிவாளங்களை கடித்தது எந்த நாய்கள் என்று தெரியுமா?" என்று கேட்க அரசனும் "தெரியாது" என்றான். அப்போது போதிசத்வர் 'அரசே! குற்றம் செய்தவன் யார் என்று கூடத் தெரியாமல் மொத்தமாக எல்லோரையும் தண்டிப்பது நியாயமா? உங்கள் வீரர்கள் இந்த நாட்டில் உள்ள எல்லா நாய்களையும் அடித்துக் கொல்லப் போகிறார்களா?"என்றுகேட்டார்.அரசனும் "நாட்டிலுள்ள, நாய்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவு போட்டேன். கோட்டைக்குள் நான் வளர்க்கும் நாய்களுக்கு இந்த உத்தரவுஇல்லை "என்றான். போதிசத்வரும் "உங்களுக்குக் குற்றம் புரிந்த நாய்கள் எவை என்பது தெரியாது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் நாய்களை ஒன்றும் செய்யக் கூடாது என்கிறீர்கள். இது பாரபட்சம் காட்டுவதாகும். வெறுப்பு கொண்ட அறிவற்ற செயலாகும். ஒரு அரசனிடம் ஒருவருக்கு ஒரு நீதி மற்றொருவருக்கு இன்னொரு நீதி என்று இத்தகைய குணங்கள் இருக்கக் கூடாது," என்றார்.

அது கேட்டு அரசன் சற்று யோசித்து "அப்படியானால் என் விலையுயர்ந்த கடிவாளங்களைக் கடித்த நாய்கள் எவை என்று நீ கண்டுபிடி. அவைகளை தண்டிக்கிறேன். மற்ற நாய்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்" என்றான்.

போதிசத்வரும் "இந்தக் குற்றத்தை செய்தது உங்கள் கோட்டை நாய்கள். அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் "அப்படி செய்தால் என் உத்தரவை உடனே ரத்து செய்கிறேன்" என அரசன் கூறினான்.
உடனே போதிசத்வர் கோட்டை நாய்களைக் கொண்டு வரச் சொன்னார். அவற்றிற்கு அவர் கொட்டை முத்து போட்டு அரைத்த விழுதை மோரில் கலந்து குடிக்க வைத்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த நாய்கள் வாந்தி எடுத்தன. அவை எடுத்த வாந்தியில் அவை கடித்துத் தின்று இன்னமும் ஜீரணமாகாத கடிவாளத்தோல் துண்டுகள் வெளியே வந்து விழுந்தன.

அதைக் கண்ட அரசன் ஆச்சரியப் பட்டு நிற்கவே போதிசத்வரும் "அரசே அரண்மனைப் பணியாட்கள் உங்கள் கோட்டை நாய்களுக்கு சரியான உணவு கொடுப்பதில்லை. உணவுக்காகப் பணம் வாங்கிக் கொண்டு அதில் பெரும் பகுதியை அமுக்கிக் கொண்டு விடுகிறார்கள். அதனால் பசியால் இந்தக் கோட்டை நாய்கள் வாடுகின்றன. நீங்கள் இதை சரி செய்யுங்கள்" என்றார்.அரசனுக்கு நாய் வடிவில் போதி சத்வரே வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. அவன் போதி சத்வர் உபதேசித்த அறிவரைகளைக் கவனமாகக் கேட்டான்.

கோட்டைக்குள் நாய்களுக்கு உணவு கொடுக்கப் பொறுப்பேற்றவர்களை விசாரித்து அவர்கள் குற்றவாளிகளே எனக் கண்டு அவர்களை வேலையிலிருந்து நீக்கிக்கடுமையாக தண்டித்தான்.

அந்த நாய்களை வளர்க்கும் பணிக்கு புதியவர்களை நியமித்தான். அவன் அவர்களிடம் "நீங்கள் இந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரவேண்டும். தெரிந்ததா?" என்றும் கூறினான்.

அது மட்டுமல்ல, நாட்டிலுள்ள நாய்களுக்கும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தான் அந்த அரசன். இவ்வாறு போதிசத்வரின் நற்போதனைகளால் அரசனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் நல்வாழ்வு கிடைத்தது.
 

0 comments:

Post a Comment

Flag Counter