நகரைத்தாக்க வந்த நரி


 
வெகு காலத்திற்கு முன் போதிசத்வர் காசியில் ஒரு உயர் குடும்பத்தில் பிறந்து எல்லா சாஸ்திரங்களையும் கற்று மிகச் சிறந்த பண்டிதராக விளங்கினார். அதனால் காசி மன்னன் அவரைத் தன் ஆஸ்தானப் புரோகிதராக நியமித்துக் கொண்டான். போதிசத்வர் பல பழைய கிரந்தங்களைத் தணிக்கை செய்து வந்த போது அவற்றில் ஒன்றில் ஒரு அற்புத மந்திரத்தைக் கண்டு கொண்டார். அது சக்திவாய்ந்ததது. அதை உச்சரித்தால் எப்படிப் பட்ட பலசாலியான எதிரியும் பணிந்து போயாக வேண்டும். 
 
 
 இந்த மந்திரத்தைத் தெரிந்து கொண்டும் போதிசத்வருக்கு யாரையும் படிய வைத்துத் தன் அடிமை போல நடத்த விருப்பம் இல்லை. அதை மறந்து மறைந்து போக விடக் கூடாது என அவர் எண்ணினார். ஒருநாள் ஒரு காட்டிற்குள் மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியில் ஒரு உயர்ந்த பாறை மீது அவர் உட்கார்ந்து தாம் கற்ற அந்த அற்புத மந்திரத்தைப் பல முறை உரத்த குரலில் கூறினார். மாலையானதும் அவர் அப்பாறை மீதிருந்து கீழே இறங்கி நகருக்குத் திரும்பிச் செல்லலானார். 
 
அப்போது அந்தப் பாறையின் பின்னால் இருந்து ஒரு நரி ஓடி வந்து அவரைக் கண்டு வணங்கி "மகா பண்டிதரே! நீங்கள் கூறிய மந்திரத்தை நான் மனப்பாடம் செய்து விட்டேன். உங்களுக்கு மிக்க நன்றி" எனக் கூறி விட்டு அங்கிருந்து ஓடியது. சக்திவாய்ந்த மந்திரத்தைத் தந்திரசாலியான நரி கற்றது சரியல்ல என நினைத்து அவர் அந்த நரியைப் பிடிக்க முயன்றார். ஆனால் அப்போது மிகவும் இருட்டி விட்டதாலும் நரி புதர்களுக்கு இடையே ஓடி மறைந்ததாலும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
 
அந்த நரி முன் பிறப்பில் ஒரு பிராமணனாகப் பிறந்து பிறரை ஏமாற்றியே வந்திருந்தது. அந்தப் பிறப்பின் காரணமாக அதற்கு இப்போது தான் கற்ற மந்திரத்தின் சக்தி தெரிந்து போயிற்று.
 
வேகமாக ஓடிய நரி தன் எதிரே தன்னை விட பலம் பொருந்திய வேறொரு நரி வருவதைக் கண்டது. உடனே அது தான் கற்ற மந்திரத்தை மனத்திற்குள் உச்சரிக்கவே பலசாலியான அந்த நரி திடீரென அதன் முன் விழுந்து வணங்கி பணிவுடன் அது செல்ல வழியை விட்டது. மந்திரம் கற்ற நரி இதனால் ஒரேயடியாக மகிழ்ந்து போயிற்று.
 
அது முதல் அந்த நரி தான் கற்ற மந்திரத்தால் நரிகள், காட்டுப் பன்றிகள், புலிகள், யானைகள், சிங்கங்கள் முதலியவற்றைத் தனக்குப் பணிந்து போக வைத்தது. இதனால் எல்லா மிருகங்களும் அதனைத் தம் அரசனாக ஏற்றுக் கொண்டன.
 
அரசனான நரி ஒரு பெண் நரியைத் திருமணம் செய்து கொண்டு அதனை அரசியாக அறிவித்தது. தனது அரசவை மந்திரிகளாக யானைகளையும் படைத் தலைவர்களாக சிங்கங்களையும் புலிகளையும் அந்த நரி நியமித்துக் கொண்டது. எல்லா மிருகங்களும் தனக்கும் தன் மனைவிக்கும் பயந்து அடங்கி ஒடுங்கிப் பணிவிடை செய்தது கண்டு அந்த நரிக்கு கர்வம் வந்து விட்டது. அது இரு யானைகளின் மீது ஒரு சிங்கத்தை நிற்க வைத்து அதன் மீது தான் அமர்ந்து காட்டில் திரியலாயிற்று.
காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் உலகிலேயே அதனைப் போன்ற சக்தி வாய்ந்த அரசன் இல்லை எனப் புகழ்ந்தன.
 
கர்வம் தலைக்கு ஏறியதால் அந்த நரி `இப்போது நான் மிருகங்களுக்கு மட்டுமே அரசன். இனி காசி நகர் மீது படை எடுத்துப் போய் அங்குஉள்ளவர்களையும் பணிய வைத்து மனிதர்களின் மன்னனாகவும் விளங்குகிறேன்' என எண்ணியது.
 
 சில நாள்களுக்குப் பின் அது பலம் மிகுந்த பல சிங்கங்களையும் புலிகளையும் மற்றும் பல மிருகங்களையும் சேர்த்து ஒரு படையாகத் திரட்டி காசி நகரின் மீது படை எடுத்துச் சென்றது. தம் நகரைத் தாக்கப் பல மிருகங்கள் வருவது கண்டு சில நகரவாசிகள் ஓடி மற்றவர்களை எச்சரித்தார்கள்.
 
இதனால் நகரில் ஒரே அமளி ஏற்பட்டது. நரியும் தன் படையோடு காசி நகரின் தலைவாசலை வந்து அடைந்தது. அது நடுநடுங்கும் காவலாளிகளிடம் "அடே! இப்போது உங்கள் மன்னனிடம் போய் எனக்குப் பணிந்து போகச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் என் படை நகரில் புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கி விடும்" என்று கூறியது.
 
காவலாளிகளும் ஓடிப் போய் காசி மன்னனிடம் நரி கூறியதைச் சொன்னார்கள். அது கேட்டு மன்னன் நடுநடுங்கினான். அப்போது போதிசத்வர் "அரசே, நான் இதற்குத் தீர்வு காண்கிறேன்" என்று கூறினார்.
 
பிறகு அவர் வீரர்களை அழைத்து "நகரில் உள்ளவர்கள் எல்லாரையும் தங்களது காதுகளில் மறக்காமல் பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்.
 
வீரர்களும் மக்களிடம் சென்று போதிசத்வர் கூறியதைக் கூற, எல்லாரும் அவ்வாறு செய்தனர். வீரர்கள் போதிசத்வரிடம் அந்தத்தகவலையும் தெரிவித்தார்கள்.
 
அப்போது அவர் தலைவாசலுக்குப் போய் நரி மன்னனிடம் "நீ என்ன வேண்டுமானாலும் உனது விருப்பப்படி செய்து கொள்" என்றார்.
 
இரு யானைகளின் மீது நின்ற சிங்கத்தின் மீது அமர்ந்திருந்த நரி சிங்கங்களை எல்லாம் பயங்கரமாகக் கர்ஜிக்கும்படிக் கட்டளை இட்டது. சிங்கங்களும் மிகவும் பயங்கரமாகக் கர்ஜித்தன,
 
ஆனால் காசி நகரவாசிகள் தம் காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டதால் அந்த கர்ஜனையைக் கேட்கவே இல்லை. அனால் சிங்கங்களின் கர்ஜனை கேட்டு நரி மன்னனைச் சுமந்து நின்ற யானைகள் துள்ளிக் குதித்து ஓடின. அதனால் அவற்றின் மீதிருந்த சிங்கம் கீழே விழ அதன் மீதிருந்த மன்னனான நரியும் உருண்டு விழுந்தது. பயந்து ஓடும் யானைகள் அந்த நரியைத் தம் கால்களால் நசுக்கின. மற்ற மிருகங்களும் பயந்து ஓடவே அவை கூட நரி மன்னனின் உடலை மிதித்தவாறே சென்றன. இந்த அமளியில் நரியும் பல மிருகங்களும் இறந்து போயின. எஞ்சியவை காட்டிற்கு ஓடி விட்டன.
 
இதன் பின் நகர மக்கள் தம் காதுகளில் அடைக்கப்பட்ட பஞ்சை எடுத்தனர். நகருக்கு வெளியே வந்து அவர்கள் எல்லாரும் இறந்து கிடந்த மிருகங்களின் தோல்களை உரித்து எடுத்துக் கொண்டனர்.
 
 இவ்வாறு நரி மன்னனை ஒழித்து காட்டு பயங்கரமிருகங்களிடம் இருந்து தம்மைக் காப்பாற்றிய போதிசத்வரை காசி மன்னனும் மக்களும் போற்றிப் புகழ்ந்து தம் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
 

0 comments:

Post a Comment