நன்றி கெட்ட மன்னன்

 
காசியை ஆண்ட பிரம்மதத்தனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சிறு வயதிலிருந்தே கொடூரகுணம் உடையவன். எவரையும் எந்த காரணமும் இல்லாமல் தன் வீரர்களைக் கொண்டு பிடித்து வர சொல்லி அவர்களைத் துன்புறுத்தி மனம் மகிழ்வான். கிழவர்களையும் பண்டிதர்களையும் சற்றும் மதிக்காததோடு அவர்களை அவமதித்தும் வந்தான். இதனால் அவனுக்கு இளவரசனுக்குரிய மரியாதைகளை யாரும் தந்ததேயில்லை. எல்லாரும் அவனை வெறுத்து வந்தார்கள்.
 
அவனுக்கு இருபது வயதான போது ஒரு நாள் தன் நண்பர்களுடன் குளிக்க ஆற்றிற்குச் சென்றான். அவனுக்கு நீந்தத் தெரியாது. எனவே நன்கு நீந்தும் சில வேலையாட்களும் அவனுக்குத் துணையாகச் சென்றனர். இளவரசனும் அவனது நண்பர்களும் குளித்துக் கொண்டு இருக்கையில் திடீரென ஆகாயத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. இளவரசனும் அப்போது "இந்த மாதிரி சமயங்களில்தான் நடு ஆற்றில் குளிக்க வேண்டும். என்னை நடு ஆற்றிற்குக் கொண்டு போங்கள்" என்று தன் வேலையாட்களிடம் கூறினான். அவர்களும் அவன் கூறியபடியே அவனை நடு ஆற்றிற்குப் பிடித்து இழுத்துச் சென்றனர். அவனது நண்பர்களோ ஆழமில்லாத இடத்தில் இருந்து குளித்தனர்.
 
அப்போது அடை மழை பெய்தது. ஓரடி தூரத்தில் உள்ளது கூட கண்களுக்குத் தெரியாமல் ஒரே இருள் சூழ்ந்தது. அப்போது வேலையாட்கள் மகாதுஷ்டனான அந்த இளவரசனை ஒழிக்கத் தீர்மானித்து அவனை அங்கேயே விட்டு விட்டுக் கரைக்குத் திரும்பி விட்டார்கள்.
கரையிலிருந்த இளவரசனின் நண்பர்கள் அவர்களிடம் இளவரசன் எங்கே என்று கேட்கவே அவர்களும் "அவர் எங்கள் பிடியிலிருந்து நீந்திக் கொண்டே போய் விட்டார்.
இந்நேரம் கரை ஏறி அரண்மனையை அடைந்திருப்பார்" எனக் கூறினார்கள்.
 
அனைவரும் அரண்மனைக்குத் திரும்பினர். இளவரசனைக் காணாது மன்னன் அவனைப் பற்றிக் கேட்கவே வேலையாட்கள் முன்பு கூறியதையே மன்னனிடமும் கூறினார்கள். உடனே மன்னன் தன் ஆட்களை அனுப்பி ஆற்றில் நன்கு தேடும்படிக் கூறினான். அவர்களும் தேடிப் பார்த்து விட்டு முடிவில் இளவரசன் அகப்படவில்லை என்று கூறினார்கள்.
 
ஆற்றில் விடப்பட்ட இளவரசனை வெள்ளம் அடித்துச் சென்றது. அதில் வந்த ஒரு மரக்கிளையைப் பிடித்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்தக் கிளை மீது ஒரு பாம்பும் ஒரு எலியும் ஒரு கிளியும் இருந்தன.
 
மரக்கிளை மீது ஏறி உட்கார்ந்த இளவரசன் உரக்க "ஐயோ! காப்பாற்றுங்கள்" எனப் பல முறை கூவினான். ஆனால் யாருமே அவனைப் பாராததால் அவன் மாலையாகி இருட்டும் போது கூட அதே கிளையின் மீது உட்கார்ந்தபடியே ஆற்றில் போய் கொண்டிருந்தான்.
 
ஒரு காட்டின் நடுவே அந்த ஆறு சென்ற போது இளவரசனின் கூக்குரல் கரையோரமாக ஆசிரமம் கட்டி வாழ்ந்து வந்த முனிவரான போதிசத்வரின் காதில் விழுந்தது. அவர் நல்ல கட்டுமஸ்தான உடல் கொண்டவர். தைரியசாலி. உடனே அவர் ஆற்றில் குதித்து நீந்தி இளவரசனும் மற்ற மூன்று பிராணிகளும் இருந்த மரக்கிளையை இழுத்துக் கொண்டு கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
 
 அவர் முதலில் மூன்று பிராணிகளையும் தம் ஆசிரமத்தில் கொண்டு போய்ச் சேர்த்து உணவு தயாரித்து அவற்றிற்குக் கொடுத்தார். பிறகே இளவரசனுக்கும் கொடுத்தார். அந்த மூன்று பிராணிகளும் இளவரசனும் இரண்டு நாள்கள் அந்த ஆசிரமத்தில் இருந்தனர். இதற்குள் புயல் காற்று ஓய்ந்தது. கிளி அங்கிருந்து செல்வதாகக் கூறி போதிசத்வரிடம் "ஐயா! தாங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். இந்தப் புயலில் என் வீடு நாசமடைந்து விட்டது. என்னால் அதிகம் பறக்க முடியாது.
எனக்குப் பல நண்பர்கள் இமயமலைப் பகுதியில் இருக்கிறார்கள். என் உதவி எப்போதாவது உங்களுக்கு வேண்டுமென்றால் அதோ தெரியும் மலை அடிவாரத்தில் நின்று கூப்பிடுங்கள். என் நண்பர்கள் வாயிலாகப் பழங்களையும் தானியங்களையும் தங்களுக்குக் கிடைக்கச் செய்கிறேன்" என்றது. போதிசத்வரும் "நீ கூறியதை நினைவில் வைத்துக் கொள்கிறேன்" என்று கூறியதும் கிளியும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றது.
 
அடுத்து பாம்பும் "நான் முன் பிறப்பில் ஒரு வியாபாரி. இந்த ஆற்றின் கரையில் ஓரிடத்தில் நிறையத் தங்க நாணயங்களைப் புதைத்து வைத்திருக்கிறேன். இந்தப் பிறப்பில் அதனைக் காத்து வருகிறேன். மக்களுக்கு உதவும் பணியில் இந்தத் தங்க நாணயங்களைத் தாங்கள் உபயோகிப்பதனால் அவற்றைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று கூறி விடை பெற்று சென்றது. இது போல எலியும் தன்னைப் பற்றிக் கூறி அவரிடம் விடை பெற்றது.
 
அப்போது இளவரசன் "நான் இந்நாட்டு இளவரசன். என் தந்தை இறந்த பின் இந்நாட்டின் மன்னனாகி விடுவேன். அப்போது நீங்கள் என் அரண்மனைக்கு வந்தால் தக்கபடி உபசரித்து கௌரவிக்கிறேன்" என்று கூறி விடை பெற்றுச் சென்றான்.
 
சில வருடங்கள் கழிந்தன. போதிசத்வர் காசி நகருக்குச் சென்றார். அப்போது பிரம்மதத்தன் இறந்து போய் அவனது மகனான இளவரசன் அரசனாகி இருந்தான். போதிசத்வர் நகர வீதி வழியே சென்று கொண்டு இருக்கையில் யானை மீது அமர்ந்து வந்த அந்தக் கொடூர குண இளவரசன் தன் வீரர்களிடம் "அந்தப் பரதேசியைப் பிடித்து ஒரு தூணில் கட்டி சவுக்கால் அடியுங்கள். பிறகு கொலைக்களத்திற்கு கொண்டு போய் அவன் தலையை வெட்டி எறியுங்கள். நான் இளவரசனாக இருந்தபோது என்னோடு ஒரு எலி, ஒரு கிளி, ஒரு பாம்பு ஆகியவற்றைக் காப்பாற்றினான். ஆனால் முதலில் என்னைக் கவனிக்காமல் அந்த மூன்று பிராணிகளையும் கவனித்து உணவுஅளித்து விட்ட பிறகு தான் எனக்கு உணவு கொடுத்தான். என்ன திமிர் இவனுக்கு?" என்று கோபத்தோடு கூறினான். வீரர்களும் போதிசத்வரைப் பிடித்துச் சவுக்கால் அடித்தனர்.
அப்போது மக்கள் கூடி "ஐயா! தாங்கள் என்றாவது இந்த மன்னனுக்கு உபகாரம் ஏதாவது செய்து இருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அவரும் "ஆமாம். செய்திருக்கிறேன்" எனக் கூறி காட்டில் இளவரசனையும் மூன்று பிராணிகளையும் காப்பாற்றித் தம் ஆசிரமத்தில் தங்க வைத்து இரண்டு நாள்களுக்குப் பின் அனுப்பியதை விவரமாகக் கூறினார்.
 
அதைக் கேட்ட மக்களுக்கு அந்த மன்னன் மீது கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. ஏற்கெனவே அவனது கொடும் செயல்களால் ஆத்திரம் கொண்ட அவர்கள் கொடுங்கோலனின் வீரர்கள் ஒரு சாதுவை துன்புறுத்துவது கண்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அந்த வீரர்களைத் தாக்கி விரட்டினார்கள். போதிசத்வரை அவர்களிடமிருந்து விடுவித்தார்கள்.
 
தன் உயிருக்கே ஆபத்து வந்து விடுமோ என மன்னன் பயந்து அங்கிருந்து ஓடி விட முயன்றான். ஆனால் மக்கள் அவனை யானை மீதிருந்து இழுத்துக் கீழே தள்ளி கொன்று விட்டார்கள். மக்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் போதிசத்வர் காசி மன்னராகி ஆட்சி புரியலானார். அவர் பாம்பையும் கிளியையும் எலியையும் மறக்கவில்லை. அவர் மலையடிவாரத்திற்குப் போய் பாம்பைச் சந்திக்க அது தான் காத்து வந்த தங்க நாணயங்களை அவரிடம் அளித்தது. அவரும் அதனை ஏற்று அப்பாம்பையும் தன்னோடு அழைத்து வந்தார். அவர் கிளியையும் எலியையும் கூட இவ்வாறே அழைத்து வந்தார்.
 
அவர் பாம்பு கொடுத்த பணத்தை மக்கள் நலனுக்காகச் செலவு செய்தார். பாம்பு வசிக்க அவர் தன் மாளிகையில் இருப்பிடம் அமைத்துக் கொடுத்தார். எலி வசிக்க நவரத்தினங்கள் பதித்த ஒரு வங்கு தயாரித்தார். கிளி இருக்க ஒரு தங்கக் கூண்டைச் செய்து கொடுத்தார்.
 
கொடுங்கோலனை இவ்வாறு அழித்ததால் காசி நாட்டு மக்கள் நல்ல வாழ்வைப் பெற்றார்கள். போதிசத்வரும் அவர்களுக்கு உபதேசம் செய்து நல்லாட்சி புரிந்து வந்தார்.
 

0 comments:

Post a Comment