ராட்ஸச மலையில் சஞ்சீவினி

வைத்தியர் சிந்தாமணி கன்னாவரம் நகரில் பிரபலமாக இருந்தார். ஓராண்டு கோடைகாலத்தில், ஒரு விசித்திரமான கண்நோய் அந்த ஊரில் பரவியது. அந்த நோய் கண்டவர்கள் கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்ணீர் வடியும். அதை உடனே குணமாக்காவிட்டால் கண்பார்வையே போய்விடும். சிந்தாமணி வைத்தியருக்கு அந்த நோயைத் தீர்க்க என்ன மருந்து தேவை என்பது தெரிந்திருந்தும், அதைத் தயாரிக்கத் தேவையான மூலிகைகளை அவரால் சேகரிக்க முடியவில்லை.

சஞ்சீவினி என்ற அந்த மூலிகை சந்திராவலி மலையில் ஏராளமாகக் கிடைக்கும் என்று தெரிந்தும், அந்த மலைக்கு அவரால் செல்லமுடியவில்லை. காரணம், அந்த மலையில் வசித்து வந்த ஒரு ராட்சசனும், அவனுடைய மனைவியும்தான். இருவரும், மனிதர்களைக் கொன்று தின்றுவிடுவது வழக்கம். அதனால், அங்கு யாருமே செல்ல அஞ்சினர்.

வைத்தியர் சீடனான விஜயன் மிகவும் துணிச்சலுள்ளவன். புத்திசாலியும் கூட. நோயாளிகளின் அல்லலைத் தீர்க்க முடியாமல் தன் குரு வருந்துவதைக் கண்ட விஜயன் எப்படியாவது தானே சென்று சஞ்சீவினி மூலிகைகளைக் கொண்டு வரத் தீர்மானித்தான். ஆனால் குருவிடம் அதைப் பற்றிச் சொன்னால், தான் சந்திராவலி மலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார் என்று தோன்றியதால், அவரிடம் தன் கிராமத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, சந்திராவலி மலையை நோக்கிப் புறப்பட்டான்.

மலையை அடைந்து, அதன் மீது ஏறி, சஞ்சீவினி மூலிகைகளை தேவையான அளவு சேகரித்து எடுத்துக்கொண்டு, மலையிலிருந்து இறங்க நினைத்த சமயம், திடீரென ஓர் இடிமுழக்கக் குரல் கேட்டது.
 "யாரடா நீ?" என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்தவன் திடுக்கிட்டான். பயங்கர உருவங்கொண்ட ஒரு ராட்சசன் அவன் முன் நின்று கொண்டிருந்தான். கூடவே, அவன் மனைவியான ராட்சசியும் நின்று கொண்டு இருந்தாள். ராட்சசன் எதிர்ப்பட்டால் என்ன செய்வது என்று முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்ததால், அவன் தைரியமாக ராட்சசனை முறைத்துப் பார்த்தான்.
தன்னைக் கண்டு அலறியோடும் மனிதர்களையேப் பார்த்துப் பழக்கப்பட ராட்சசனுக்கு விஜயனின் துணிச்சல் வியப்பை அளித்தது.
என்னடா, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், நீ பேசாமல் நிற்கிறாய். உனக்கு என்னைக் கண்டு பயம் இல்லையா?" என்று ராட்சசன் கேட்டான்.
உடனே விஜயன் சாமர்த்தியமாக "உன்னைக் கண்டோ, உன் மனைவியைக் கண்டோ நான் ஏன் பயப்பட வேண்டும்? உன்னை விட பெரிய ராட்சசனை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அவன் எனக்கு நண்பனாகி விட்டான். எனக்குப் பரிசுகூட தந்திருக்கிறான்" என்று கதையளந்தான்.

"யாரிடம் கதை விடுகிறாய்? அவன் உனக்கு எதற்காகப் பரிசு தந்தான்?" என்று ராட்சசன் கேட்டான். "அவனுக்கு நான் கூறிய ஆலோசனை மிகவும் உபயோகமாக இருந்ததால் மகிழ்ந்துபோய் எனக்குப் பரிசளித்தான்" என்றான் விஜயன்."அப்படியென்ன ஆலோசனை?" என்று ராட்சசன் கேட்க, "அவனுடைய அடங்காப்பிடாரி மனைவியை எப்படி அடக்கி வைப்பது என்று அவனுக்கு யோசனை கூறினேன்" என்றான் விஜயன்.

அதைக் கேட்ட ராட்சசனின் கண்கள் வியப்பினால் விரிந்தன. அவன் கோபமெல்லாம் பறந்தோடி விட்டது. உடனே, அவன் சிந்தனையில் ஆழ்ந்தான். தனது மனைவியை எப்படி அடக்கிவைப்பது என்று நீண்ட நாள்களாகவே யோசித்துக் கொண்டிருந்த ராட்சசனுக்கு, விஜயனின் சொற்கள் அமிர்தமாக செவிகளில் விழுந்தன. ராட்சசன் விஜயனிடம்,   தணிந்த குரலில், "எனக்கும் அந்த யோசனையை சொல்லிக் கொடேன்.

நான் உனக்கு அதைவிட பெரிய பரிசாகத் தருகிறேன்" என்றான். அதைக் கேட்டதும், ராட்சசனின் மனைவி அடிபட்டப் பெண்புலியைப் போல் சீறினாள். "அடேய், வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு. இல்லைஎன்றால் உன்னை நார், நாராகக் கிழித்து விடுவேன், ஜாக்கிரதை" என்று உறுமினாள்.
காரியத்தைக் கெடுத்துவிடப் பார்க்கிறாளே என்று மனைவிமீது எரிச்சல் கொண்ட ராட்சசன், "அவன் மீது கையை வைத்தால் உன்னைக் கொன்று விடுவேன். அவனிடமிருந்து ஆலோசனை பெற்று உன்னை எனக்கு அடிமையாக்குவேன்" என்று  தன் மனைவியிடம் சீறினான்.

"உனக்கு அடிமையாக இருப்பேன் என்று கனவு காணாதே. மதி கெட்ட மூடனே, உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று ராட்சசி அவன் மீது கோபத்துடன் பாய, அவன் அவளை அடிக்க, அவள் தன் நகங்களினால் அவனைக் கீறிவிட இருவருக்குள்ளும் பயங்கர சண்டை மூண்டது. அதுதான் சமயம் என்று விஜயன் மூலிகைக் கட்டுகளுடன் நழுவி ஓடி விட்டான்.

வைத்தியசாலையை அடைந்த விஜயன், தான் கொண்டு வந்த சஞ்சீவினி மூலிகைகளை சிந்தாமணி வைத்தியரிடம் அளித்து அவரை வியப்பில் திக்குமுக்காடச் செய்தான். பிறகு, தான் அவற்றை சாமர்த்தியமாக எடுத்து வந்த முறையை விவரமாக விளக்கினான். அதைக் கேட்டு சிந்தாமணி மகிழ்ச்சி அடைந்தார்.

"விஜயா! ஒருவனுக்கு அறிவு மட்டும் இருந்து பயனில்லையென்றும், துணிச்சல் இருக்கும்போது தான் அறிவும் சேர்ந்து வேலை செய்யும் என்றும் உன்னிடமிருந்து நான் இன்று கற்றுக் கொண்டேன். உனக்கு தைரியமும், சாமர்த்தியமும் ஒரே சமயத்தில் சேர்ந்து வேலை செய்ததால்தான், சஞ்சீவினி மூலிகை கிடைத்தது. இதனால் நீ எனக்கு மட்டுமல்லாமல், கணக்கற்ற நோயாளிகளுக்குப் பெரும் உதவி புரிந்திருக்கிறாய்! நீ நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்க!" என்று விஜயனை வாழ்த்தினார்.

1 comments:

Dr. Sri Muralidhara Swamigal said...

அருமையான கதை

Post a Comment

Flag Counter