கண்ணீரின் மதிப்பு

வசந்த காலம் வந்தது. எங்கு நோக்கினும் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. பறவைகள் மகிழ்ச்சியுடன் கீதம் இசைந்தன. எங்கும் மகிழ்ச்சி நிலவியது. அந்த மனோகரமான காலத்தில் ஒருநாள் காலை ராணி மதுரிமா உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள். விழித்துக் கொண்டவள் நந்தவனத்தைப் பார்த்தாள். பார்க்கும் இடமெங்கும் மனத்தில் பரவசமூட்டும் வண்ண மலர்களைக் கண்டாள். அவள் மனத்திலும் உவகை ஊற்றெடுத்துப் பெருகியது. "வசந்த காலத்தைக் கொண்டாட காட்டிற்குச் செல்வோமா?" என்று மன்னரை நோக்கி அவள் கேட்டாள். தனது அரசாங்க வேலைகள் முடிந்த பின் தான் காட்டிற்கு வந்து அவளை சந்திப்பதாக மன்னர் கூறினார். அதனால், மன்னர் இன்றி மதுரிமா மட்டும் தன் தோழிகளுடன் காட்டிற்குச் சென்றாள்.

அங்கு பளிங்கு போல் தெளிந்த நீரோடையில் நீண்ட நேரம் திளைந்து மகிழ்ந்தாள். அங்குள்ள மரங்களிலிருந்து தோழிகள் பழங்களைப் பறித்துத்தர அவற்றை சுவைத்தாள். பிறகு தோழிகளுடன் சேர்ந்து விளையாடினாள்.
வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு களித்தாள். மாலை மங்கியது. அப்போது தான் அவளை காட்டில் சந்திப்பதாக வாக்களித்த மன்னரின் நினைவு வந்தது. மன்னர் வரவேயில்லை. பகற்பொழுதில் மிக அழகாகத் தெரிந்த காடு பயங்கரமாகத் தெரிந்தது. மதுரிமாவும், தோழிகளும் ஏமாற்றத்துடன் அரண்மனை திரும்பினர்.

அந்த நேரத்திலும் அவள் மன்னரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தாள். தங்களுடைய மகிழ்ச்சிகரமான அனுபவங்களை அவருக்குச் சொல்ல விரும்பினாள். ஒருவாறாக மன்னர் மிக தாமதமாக அரண்மனை வந்து சேர்ந்தார்.

"உங்களுக்கு ஏன் இத்தனை தாமதம்?" என்று மதுரிமா கேட்டாள். "மக்களின் துயரங்களைத் துடைப்பதில் மும்முரமாக இருந்ததால் வர தாமதம் ஆகிவிட்டது" என்றார் மன்னர். "துயரங்களை நீங்கள் ஏன் போக்க வேண்டும்?" என்று கேட்டாள் மதுரிமா. "நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள், ராணி?" என்று திருப்பிக் கேட்டார் மன்னர். "அழகான வசந்தகால தினத்தைப் பாழாக்கி விட்டீர்கள்" என்றாள் மதுரிமா கோபத்துடன். மறுநாளாவது, தங்களுடன் காட்டிற்குவர அவள் வேண்ட, மன்னரும் சம்மதித்தார். ஆனால் மறுநாளும் அதே கதைதான்! இதனால் மதுரிமாவின் கோபம் எல்லை மீறியது.

மன்னரை நோக்கி, "உங்களுடைய குடிமக்களுக்கு மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாதா? எப்போதும் துன்பமும், துயரமும், கண்ணீரும் தானா? எனக்குக் கண்ணீர் வடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. எல்லாரும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றாள். "அது எப்படி முடியும்?" என்று கேட்ட மன்னர் தொடர்ந்து, "வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் மாறி மாறி வரும். இன்பத்தில் திளைக்கும் போது சிரிப்பும், துன்பத்தில் கண்ணீரும் இயற்கையானவை.

 ஆகவே, சிரிப்பும், கண்ணீரும் மாறி, மாறி வரும். இவற்றில் ஒன்றை மட்டும் நிறுத்துவது என்பது முடியாத காரியம்!" என்றார். ஆனால் மன்னரின் விளக்கத்தை ஏற்க மறுத்த மதுரிமா, "முடியாதது என்று ஒன்றுமில்லை. முயற்சி செய்தால் எதுவும் முடியும்! உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இனிமேல், இந்த ராஜ்யத்தில் யாராவது கண்ணீர் வடித்தால் அவர்களை நாடு கடத்த உத்தரவிடுங்கள்!" என்றாள்.
மதுரிமாவை வியப்புடனும், வருத்தத்துடனும் உற்று நோக்கிய மன்னர், "குடிமக்களுக்கெல்லாம் தாய் போன்றவள் நீ! அப்படியிருக்க, இத்தகைய இரக்கமற்ற உத்தரவைப் பிறப்பிக்கும் படி நீ என்னிடம் கேட்பது சிறிதும் சரியல்ல!" என்றார்.
"நான் சொல்கிறபடி உத்தரவிடுங்கள்! அப்புறம் நடப்பதைப் பாருங்கள்!" என்றாள் மதுரிமா. "அப்படியே செய்கிறேன்!" என்ற மன்னர் "ஆனால், உன்னுடைய முடிவு தவறானது என்பதை நீயே உணரும் காலம் வரும்" என்று சொல்லிவிட்டு மன்னர் சென்று விட்டார். அவருடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மதுரிமா அலட்சியமாகச் சிரித்தாள்.

மதுரிமா கேட்டபடியே மன்னர் தண்டோராப் போட்டு தனது புதிய கட்டளையை அறிவித்தார். அதைக் கேட்ட மக்கள் பெரிதும் வியப்புற்றனர். துன்பம் வரும்போது வெளிப்படும் கண்ணீரை அடக்கிக் கொண்டு எவ்வாறு சிரிக்க முடியும்? என்னதான் முயன்றும், பலரால் துன்பத்தின் போது கண்ணீரை அடக்க இயலவில்லை. அவர்கள் அனைவரும் நாடு கடத்தப் பட்டனர்.

ஆண்டுகள் உருண்டோடின. வழக்கப்படி ஓராண்டில் வசந்த காலம் வந்தது. ஆனால் மதுரிமாவினால் வசந்த காலத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. ஏனெனில் அவளுடைய குழந்தை நோய்வாய்ப்பட்டுக் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. அரண்மனை மருத்துவர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்தும் இளவரசைக் காப்பாற்ற முடியவில்லை.

 குழந்தை ஒருநாள் உயிர் நீத்தது. மதுரிமா அலறித் துடித்தாள். விம்மி விம்மி அழுதாள். மறுநாள் மதுரிமா சபைக்கு அழைத்து வரப்பட்டாள். "நான் உன்னை நாடு கடத்துகிறேன்!" என்று மன்னர் சொன்னதும், மதுரிமா உட்பட அனைவரும் அதிர்ந்து போயினர்.

"நான் ராணி! என்னைக் கூடவா நாடு கடத்தப் போகிறீர்கள்?" என்று மதுரிமா கேட்க, "சட்டத்திற்குக் கண்களில்லை! நீ ராணியானாலும் தண்டனையில் இருந்துத் தப்ப மடியாது!" என்றார் மன்னர்.
காவலர்கள் ராணியை அழைத்துச் சென்று காட்டில் விட்டு விட்டனர். தன்னந்தனியாகக் காட்டில் கொடிய மிருகங்களுக்கிடையே எப்படி வசிப்பது என்று பயந்து கொண்டுஇருந்த மதுரிமா, அங்கு ஏற்கெனவே நாடு கடத்தப் பட்ட மக்கள் பலர் இருந்ததைக் கண்டு ஆறுதல் அடைந்தாள். அவர்கள் மதுரிமாவை வரவேற்று, அவளுக்காக வீடு அமைத்துத் தந்து சகல உதவிகளும் செய்தனர். அவர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய மதுரிமாவிற்கு அப்போதுதான் வாழ்க்கையின் துன்பங்களைப் பற்றிப் பரிச்சயம் ஏற்பட்டது. மகனின் பிரிவை நெஞ்சிலேயே புதைத்து வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களுடன் அழுது கொண்டே பகிர்ந்து கொண்ட போதுதான், கண்ணீர் சோகத்திற்கு அருமருந்து என்பது புரிந்தது.


ஒருநாள் காலை, மன்னரே அவளைத்தேடி தேரில் வந்திறங்கிய போது அவள் அடைந்த வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. அப்போது, மதுரிமா ஒரு நோயாளிக் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு அதற்குத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.
"மதுரிமா? இப்போதாவது கண்ணீரின் மதிப்பு தெரிந்ததா?" என்று மன்னர் கேட்டார். "ஆமாம் தெரிந்துக் கொண்டேன் பிரபு" என்றாள் மதுரிமா. "அப்படியானால், உன்னையும், நாடு கடத்தப்பட்ட மற்றவர்களையும் திரும்ப நாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்" என்றார் மன்னர்.

0 comments:

Post a Comment

Flag Counter