அறிவு வந்தது!

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் கோசல மன்னனாகப் பிறந்தார். அவருக்கு சத்தியசேனன் என்ற மகன் பிறந்தான். அவனுக்குத் தக்க வயது வந்ததும் தந்தை அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி சியாமளா என்ற அழகிய பெண்ணையும் மண முடித்து வைத்தார்.
 
ஆனால் சிறிது நாள்களுக்குப் பின் சத்தியசீலனைக் குஷ்டரோகம் என்ற பயங்கரப் பெரு வியாதி பிடித்தது. என்ன வைத்தியம் செய்தும் அது மறையவில்லை. எனவே எல்லார் கண்ணிலும் படாமல் தனியாகக் காட்டில் போய் ஒரு குடிசை போட்டுக் கொண்டு இருப்பது என சத்தியசேனன் தீர்மானித்துக் கொண்டான். அவன் தம் முடிவைத் தன் தந்தையிடமும் மனைவியிடமும் கூறினான். சியாமளாவோ தானும் அவனோடு காட்டிற்கு வருவதாக மிகவும் பிடிவாதமாகக் கூறினாள்.
 
யார் என்ன சொல்லியும் கேளாமல் சியாமளா தன் கணவனோடு காட்டிற்குச் சென்றாள். அங்கு வசதியான இடத்தில் குடிசை போடப்பட்டது. தினமும் அவள் தன் கணவனுக்குப் பணி விடைகள் செய்யலானாள்.
 
ஒரு நாள் காய்கறிகளைச் சேகரித்து விட்டு சற்று தூரத்தில் அழகாக விழுந்து கொண்டிருந்த அருவி நீரைப் பிடித்து வைத்து விட்டு அதில் குளித்து விட்டு வந்தாள். அப்போது அவள் மேனியில் புதிய மெருகு ஏறி மிகவும் கவர்ச்சிகரமாக விளங்கினாள்.
அவள் காய் கனிகளையும் நீரையும் எடுத்துக் கொண்டு திரும்புகையில் வழியில் ஒரு வேடன் அவளைப் பார்த்து அவளது அழகைக் கண்டு மதி இழந்து அவளது வழியை மறித்து `பெண்ணே! நீ மிக அழகாக இருக்கிறாய். என்னை மணந்து கொள்" என்றான்.அவளோ "முடியாது. வழியை விட்டு விலகு" எனவே அவன் அவளை பலவந்தமாகக் கட்டி இழுக்க முயன்றான். அப்போது அவள் குடுவையிலுள்ள நீரில் சிறிது எடுத்து அவன் மீது தெளிக்கவே அவன் அதே இடத்தில் விழுந்து துடிதுடித்து இறந்து போனான்.
 
வெகு நேரம் வெளியே போய் விட்டு வந்த தன் மனைவியிடம் சத்தியசேனன் "ஏன் இவ்வளவு நேரம்?" என்று கேட்கவே அவளும் நடந்ததை எல்லாம் கூறினாள்.
 
இதைக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு அவளை நம்பாமல் "நீ உன் இஷ்டப்படி எங்கெங்கோ திரிகிறாய். உன்னைக் கட்டுப் படுத்த யாருமே இல்லை" என்றான்.
 
அது கேட்டு மனம் வருந்தி அவள் "நான் கொண்டு வந்துள்ள நீர் சக்தி வாய்ந்தது. என்பதும் நான் பதிவிரதை என்பதும் உண்மையானால் நான் உங்கள் மீது விடும் இந்த நீர் உங்களது பெரு வியாதியைப் போகட்டும்" என கூறி குடத்து நீரை அவன் மீது கொட்டி உடல் முழுவதும் நனையச் செய்தாள். மறு நிமிடமே அவனது பெரு வியாதி மறைந்து போயிற்று. அவன் தன் மனைவி கற்புக்கரசி என்று நினைத்து மகிழ்வதை விட தன் நோய் போனதற்காகவே மகிழ்ந்தான். உடனே அங்கிருந்து அவன் தலைநகருக்கு வந்தான்.
அவனது தந்தை அவனையும் சியாமளாவையும் வரவேற்று அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
 
தன் மகனின் நோய் எவ்வாறு குணமடைந்தது என்பதை அறிந்து கொண்ட கோசல மன்னர் தன் மகனை நாட்டின் மன்னனாக்கி சியாமளாவைப் பட்டத்து ராணியாக்கினார். பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு கானகம் சென்றார். சத்தியசேனனோ சியாமளாவை மதிக்கவில்லை. அவன் தன் மற்ற மனைவிகளுடனேயே காலம் கழிக்கலானான். அரசனே ராணியை மதிக்காததால் மற்ற ராணிகளும் அவளை மதிக்கவில்லை. இதனால் மனம் நொந்து சியாமளா இளைத்துத் துரும்பானாள்.
 
ஒருமுறை துறவியான போதிசத்வர் தன் மகனையும் சியாமளாவையும் காண வந்தார். சியாமளாவின் நிலை கண்டு அவர் "ஏன் இப்படி இளைத்துத் துரும்பாகி விட்டாய்?" என்று கேட்டார். அவளும் "மனைவிக்குக் கணவன் மதிப்பு தராவிட்டால் அவளுக்கு சுகம் ஏது?" என்றாள். போதிசத்வர் நடந்ததையெல்லாம் அவளிடம் விவரமாக விசாரித்து அறிந்து கொண்டார். அவர் தன் மகன் சத்தியசேனனிடம் "மகனே! செய் நன்றி மறப்பது போன்ற மாபெரும் பாதகம் வேறெதுவும் இல்லை. உன் பயங்கர வியாதியின் காரணமாக நீ மனிதர்களின் மத்தியில் வாழ வெட்கப்பட்டு காட்டிற்குப் போனாய். அப்போது உன் மனைவி உன்னோடு இருந்து உனக்குப் பணி விடை புரிந்து முடிவில் உன் வியாதியையும் போக்கினாள். நீயோ மன்னனானதும் அவளை மதிக்கவில்லை. இது போன்ற நாடும் சுகபோகங்களும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் கற்புக்கரசியான மனைவி ஒருவனுக்குக் கிடைக்க அவன் பாக்கியம் செய்திருக்க வேண்டும். எனவே சியாமளாவை நீ புறக்கணிக்காதே" என்று கூறினார்.
 
சத்தியசேனனின் அகக்கண்கள் திறந்தன. அவன் தன் மனைவியிடம் மன்னிப்பு கோரி அவளுக்கு முதலிடம் அளித்து கௌரவித்தான். அது முதல் மற்ற மனைவிகளும் அவளிடம் மரியாதை காட்டலானார்கள்.
 

0 comments:

Post a Comment