தன்னலமற்றவன்

 
ஒரு முறை போதிசத்வர் காசி மன்னனாகப் பிறந்தார். அவரது ஆட்சியின் போது ஒரு எல்லைப் புறத்தில் சிலர் கலகம் செய்தார்கள். அவர்களை அடக்க மன்னரான போதிசத்வர் சிறு படையுடன் சென்றார். பலத்த போர் மூண்டது. அதில் மன்னர் காயமுற்றார். அவர் அமர்ந்திருந்த குதிரை மிரண்டு அவரோடு போர்க்களத்திலிருந்து ஓடிப் போயிற்று.
 
சற்று நேரத்திற்கெல்லாம் அக்குதிரை மன்னரை ஒரு சிறு கிராமத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ந்தது. வாள், கேடயம், கவசம் முதலியவற்றோடு குதிரை மீது அமர்ந்து வந்த மன்னரைப் பார்த்து அங்கு கூடி பேசிக் கொண்டிருந்த மக்கள் பயந்து எழுந்து ஓடினார்கள். ஆனால் அந்த கிராமத் தலைவன் மட்டும் ஓடாமல் நின்றான்.
 
அவன் மன்னரை அணுகி "நீ கலகக்காரனா அல்லது அரசர் பக்கத்தைச் சார்ந்தவனா?" என்று கேட்டான். மன்னரும் "நான் அரசர் பக்கமே" என்றார். அது கேட்டு கிராமத் தலைவன் திருப்தி அடைந்து "அப்படியானால் என் வீட்டிற்குப் போகலாம் வா" எனக் கூறி போதிசத்வரைத் தன் விருந்தாளியாகத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
 
அவனும் அவன் மனைவியும் அவரை உபசரித்தார்கள். உண்ண உணவும் படுக்க வசதியும் செய்து கொடுத்து அவரது குதிரையையும் ஓரிடத்தில் கட்டி அதற்குப் புல்லும் கொள்ளும் கொடுத்தார்கள். மன்னர் நான்கு நாள்கள் அந்ததலைவனின் வீட்டிலேயே இருந்தார். கிராமத் தலைவன் அவரை அக்கரையுடன் கவனித்துக் கொண்டான்.
வேளா வேளைக்கு உணவு கொடுத்ததோடு அவர் படுகாய முற்றுக் கிடப்பது கண்டு உள்ளூர் வைத்தியரை அழைத்து வந்தார். போதிசத்வரும் வைத்தியர் கொடுத்த மருந்தை தன் காயங்களுக்குத் தடவிக் கொண்டார். இதற்குள் அவரது வீரர்கள் கலகக்காரர்களை அடக்கி விட்டார்கள்.
 
மன்னர் அத்தலைவனின் வீட்டில்இருந்து கிளம்பும் போது "ஐயா! நான் காசி நகரில் வாழ்பவன். என் வீடு கோட்டைக்குள் உள்ளது. எனக்கு ஒரு மனைவியும் இரு புதல்வர்களும் உள்ளனர். அங்கே வந்து கோட்டை வாசலில் "மாபெரும் குதிரை வீரர் எங்கே இருக்கிறார்" என்று கேட்டால் உம்மை என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.
 
நீர் என் ஊருக்கு வந்தால் என் விருந்தாளியாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம்" என்று கூறிச் சென்றார். மன்னர் தன் படைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவற்றோடு காசி நகருக்குத் திரும்பினார். அங்கு கோட்டைக் காவலாளியிடம் "யாராவது வந்து ‘மாபெரும் குதிரை வீரர் வீடு எங்கே உள்ளது?' எனக் கேட்டால் என்னிடம் அழைத்து வாருங்கள்" என கட்டளையிட்டார்.
 
அந்தக் கிராமத் தலைவன் தன்னைக் காண வருவான் என்று மன்னர் எதிர்பார்த்தார். ஆனால் அவன் பல மாதங்களாகியும் வரவில்லை. அவனை வரவழைப்பதற்காக மன்னர் மாதா மாதம் புதுப்புது வரியாக அந்தக் கிராமத்தின் மீது மட்டும் விதிக்கலானார்.
 
மன்னர் பல வரிகளைப் பல மாதங்களாக ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வந்தார். முதலில் அதன் சுமையை அதிகமாக உணராத அக்கிராமத்தவர் நாளாக ஆக வரியைத் தாங்க முடியாமல் சிரமப்பட்டார்கள். தம் மீது வரிச்சுமை அதிகமாகி வருவது கண்டு கிராமத்தவர் அந்த கிராமத் தலைவனிடம் "நீங்கள் போய் உங்கள் நண்பரான மாபெரும் குதிரை வீரர் உதவியால் மன்னரை பேட்டி கண்டு இந்த வரிகளைஎல்லாம் அகற்ற ஏற்பாடு செய்யுங்கள்.
 
என்ன காரணமோ தெரியவில்லை. நம் கிராமத்தின் மீது மட்டும்தான் இவ்வளவு வரிகள் விதிக்கப் பட்டுள்ளன. நீங்கள் உங்கள் நண்பரின் உதவியோடு மன்னரைக் கண்டு முறையிட்டாலே நம் துன்பங்கள் தீரும்" என்று கூறினார்கள். அத்தலைவனும் "நான் போகத்தயார்.
ஆனால் என் நண்பனைக் காண வெறும் கையுடனா போவது? அவர் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதாவது தின்பண்டம் கொண்டு செல்ல வேண்டாமா? அவருக்குப் பரிசளிக்க ஆடைகள் ஏதாவது வாங்கி எடுத்துச் செல்ல வேண்டாமா? இதற்குப் பணம் என்னிடம் இல்லையே" என்றான். ஊரார் பணம் திரட்டிக் கொடுக்கவே அத்தலைவனும் பல தின்பண்டங்களையும் பரிசுப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு காசிநகருக்குச் சென்றான்.
 
கோட்டை வாசலிலுள்ள காவலாளிகளிடம் அவன் "மாபெரும் குதிரை வீரனின் வீடு எங்கே?" என்று விசாரிக்கவே அவர்களும் அக்கிராமத் தலைவனை மரியாதையுடன் அழைத்துப் போய் மன்னரின் அந்தப்புரத்தில் மன்னர் முன் கொண்டு போய் விட்டார்கள். அது கண்டு முதலில் கிராமத் தலைவன் திடுக்கிட்டான். ஆனால் மறுநிமிடமே தன் வீட்டிற்கு வந்து தங்கியவர் மன்னரே எனக் கண்டு மகிழ்ந்து போனான். தான் வந்த வேலை மிகவும் எளிதாயிற்று எனவும் நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.
 
கிராமத் தலைவனும் தான் கொண்டு வந்த தின்பண்டங்களையும் ஆடைகளையும் காசி மன்னரிடம் கொடுத்தான். அவை யாவும் கிராமத்துப் பாணியில் இருந்தன. மன்னர் தின்பண்டங்களை தன் மனைவி-மக்கள்மற்றும் மந்திரிகளுக்கும் கொடுத்துத் தானும் உண்டார். தன் விருந்தினனாக அத்தலைவனை ஏற்று கௌரவித்தார்.
 
அத்தலைவன் தன்னைக் காண வந்தது அவனது கிராமத்தின் மீது விதிக்கப்பட்ட வரிகளை விலக்கி விடவேண்டும் என்று கோரவே என்பதை அறிந்த மன்னர் உடனே அந்த வரிகளை எல்லாம் ரத்து செய்யுமாறு மந்திரிகளுக்குக் கட்டளையிட்டார்.
 
பின்னர் தர்பாரைக் கூட்டி மன்னர் அக்கிராமத் தலைவனைக் கௌரவித்துத் தன் நாட்டில் பாதியை அவனுக்கு அளித்தார். அது கண்டு மந்திரிகளும் மற்ற உயர் அதிகாரிகளும் மனம் புழுங்கினார்கள்.
 
ஒரு கிராமத்தானுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா எனப் பொறாமை கொண்டு அவர்கள் அரசகுமாரனிடம் போய் "மன்னர் உனக்கு அநீதி இழைத்து விட்டார். உனக்குச் சேர வேண்டிய நாட்டில் பாதியை யாரோ ஒரு கிராமத்தானுக்குக் கொடுத்து விட்டார். இதற்கு நீ எதிர்ப்பைத் தெரிவி" எனத் தூண்டி விட்டார்கள்.
 
அரசகுமாரனும் தன் தந்தையிடம் சென்று கிராமத்தானுக்கு அவர் பாதி நாட்டைக் கொடுப்பதைத் தான் எதிர்ப்பதாகக் கூறினான். மன்னரும் அது பற்றி தர்பாரில் விளக்கம் கூறுவதாகச் சொன்னார். அவர் தர்பாரில் அரசகுமாரனை அதே ஆட்சேபணையைக் கிளப்பச் செய்து "இந்த கிராமத் தலைவன் ஒருமுறை என் உயிரைக் காப்பாற்றியவன்.
 
நான் மன்னன் என்பதுகூட இவனுக்கு அப்போது தெரியாது. நான் ராஜ விசுவாசம் கொண்டவன் என அறிந்து எனக்குப் புகலிடம் கொடுத்து நாலைந்து நாள்கள் தன் வீட்டிலேயே தங்கச் செய்தான். நான் ஊர் திரும்புகையில் இவனை இங்கு வந்து என்னைப் பார்க்குமாறு கூறினேன்.
 
ஆனால் வரவில்லை. அதனால் அக்கிராமத்தின் மீது நான் பல வரிகளைப் போடவே, கிராம மக்களின் நன்மைக்காக அவ்வரிகளை விலக்கக் கோரி என்னைக் காண வந்தான். தன்னலமற்ற இந்த மனிதனுக்கு எதைக் கொடுத்தாலும் தகும்" என்றார்.
 
அது கேட்டு மந்திரிகளும் மற்ற உயர் அதிகாரிகளும் தலை குனிந்தனர். அரசகுமாரனுக்கும் தன் தவறு தெரிந்தது. தன் தந்தை செய்தது சரியே என எண்ணி மகிழ்ந்தான். அன்று முதல் மன்னரைப் போலவே அவனும் அக்கிராமத் தலைவனை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வந்தான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter