விநாயகர் 21

 
ஹோமத் தீயிலிருந்து வெளிவந்த பயங்கர உருவம் மறைந்த உடனே காலன் ராட்சஸ உருவை எடுத்து பாசக் கயிறை விட்டெறிந்தான். அது கிர்கிர்ரென்று சுழன்று மாபெரும் பிரளயமே ஏற்பட்டது போன்ற நிலையை உருவாக்கியது.

அபிநந்தன் அதனைப் பிடித்து அறுத்துவிட முயன்று தோல்வியுற் றான். கால பாசம் மேலும் தீவிரமாகி ஜீவராசிகளை நாசமாக்கவே, வசிஷ்டர் முதலிய ஏழு முனிவர்களும் பல ரிஷிகளும் ஒன்றுகூடி விநாயகரை வேண்டினார்கள்.

விநாயகரும் சுவஸ்திகா பீடத்தில் அமர்ந்து அவர்களின் முன் தோன்றினார். தன் கையிலிருந்த பாசத்தை விடவே, அது காலனைப் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து அவர்முன் போட்டது. காலனோ தோல்வி அடைந்ததால் மேலும் ஆத்திரப்பட்டு பயங்கர உருவில் தன் கதையை எடுத்து வீசினான். விநாயகர் தம் அங்குசத்தை எடுத்து எறியவே அது காலனின் கதையைத் தகர்த்து அவனது உடலில் பாய்ந்தது. அதனால் அவன் துடிதுடித்து அங்கும் இங்கும் ஓடி முடிவில் விநாயகரின் கால்களில் வீழ்ந்தான். அவர் அவனை தம் இரு கால்களால் பலமாக அமுக்கினார்.

விநாயகரும், "காலா! பிறர் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தானே செய்துவிட முடியும் என எண்ணிச் செயல்படுவது என்றுமே ஆபத்தானது. உன் கடமையை நீ சரிவரச் செய்து வா. அது போதும்," என்றார்.
காலனும் தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு மூன்று தோப்புக் கரணங்கள் போட்டு "எனக்கு புத்தி வந்தது பிள்ளையாரே! அந்த இந்திரனின் பேச்சைக் கேட்டு மதி மயங்கிப் போனேன். இனி உங்களை நம்பி இருப்பவர்களிடம் என் சக்தியைக் காட்ட மாட்டேன்," எனக் கூறி விடைபெற்றுக் கொண்டு சென்றான்.
 அதுமுதல் யாரும் எந்தவொரு நல்ல வேலையை ஆரம்பிக்கும் போது கோலம் போடும் இடத்தில் சுவஸ்திகா சின்னத்தை பொறிக்க லானார்கள். விநாயகரை மஞ்சளில் உருவாக்கி மங்களகரமாய் எல்லாம் முடிய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யலானார்கள்.

"காலனையே தன் காலடியில விழச் செய்து விநாயகர் தம் கால் களின் கீழே சின்னமாக இருக்குமாறு செய்தார். இப்படிப்பட்டவரை நம்பி வழிபட்டு அவரது நல்லாசிகளைப் பெறுபவர்கள் காலத்தையே கூட வென்று வெற்றி பெறுவார்கள்," எனப் பாவனமிசிரர் கூறிக் கதையை முடித்தார்.

ஒருநாள் ஒரு சிறுமி பாவனமிசிர ரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவரை ஓர் ஓவியத்தின் முன் கொண்டுபோய் நிறுத்தினாள். அப்படத்தில் ஓர் அழகான பெண் விநாயகரின் சிலை முன் அமர்ந்து வேண்டிக் கொண்டிருப்பதுபோல வரையப்பட்டிருந்தது. ஆனால் இளமைத் தோற்றத்தில் உள்ள அவளது தலையின் கேசம் மட்டும் வெள்ளைவெளேரென இருந்தது. அதைக் காட்டி அச்சிறுமி "இது மட்டும் இப்படி இருக்க என்ன காரணம்?" என்று கேட்டாள். அதற்கு பாவனமிசிரர் அதற்கான கதையைக் கூறலானார்.

ஒருமுறை ஒரு தம்பதிகள் விநா யகரை வேண்டிக் கொண்டதன் பேரில் அழகான பெண் குழந்தையை மகளாக அடைந்தார்கள். அவர் களுக்குப் பிறந்த அக்குழந்தை பிறக்கும்பொழுதே தன் கண்களை அகல விரித்து பிரசவ அறையில் வைக்கப்பட்டிருந்த விநாயகரின் பதுமையைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் குழந்தைக்கு சுந்தரி என்று பெயர் வைத்தார்கள். அவளும் வளர்ந்து பெரியவளாகி மிகவும் அழகானவளாய் விவாக வயதை அடைந்துவிட்டாள். அவள் அழகு டன் நல்ல அறிவும் பெற்றிருந்தாள்.
 சுந்தரியின் அழகு பற்றி எல்லா ஊர்களிலும் பேசிக் கொண்டனர். அவளை மணக்க பல கோடீஸ்வரன்களின் புதல்வர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் விரும்பி அவளது தாய், தந்தையருக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
அந்நாட்டு மன்னனே அவளது அழகைக் கேள்விப்பட்டு அவளைத் தன் பட்டத்து ராணியாக ஆக்கிக் கொள்ள விரும்பினான். அவன் தன் வீரர்கள் புடைசூழக் கிளம்பி சுந்தரியின் ஊருக்கு வந்து கொண்டிருந்தான். இந்தச் செய்தியும் அவ்வூராருக்குத் தெரிந்தது.

சுந்தரி தினமும் தன் ஊரிலுள்ள ஆற்றங்கரைப் பிள்ளையாரை வணங்கி ஆராதித்து வந்தாள். அந் நாட்டு மன்னன் வரும் செய்தி கேட்ட அவள் தன் இஷ்ட தெய்வமான விநாயகர் முன் அமர்ந்து வணங்கி "விநாயகா! குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் உம்மை வணங்கி வழிபட்டு வருகிறேன். சம்சார சாக ரத்தில் வாழ்க்கை நடத்த விரும்ப வில்லை. என்னை ஒரு கிழவியாக ஆக்கிவிடு. நல்ல அறிவு எனக்கு இருக்கட்டும். நான் பிறந்ததற்குப் பிறருக்கு உதவும் நற்பயன் கிட் டட்டும்," என வேண்டினாள்.

மறுநிமிடமே அவளது கருத்து அடர்ந்து வளர்ந்திருந்த கூந்தல் வெள்ளைவெளேரென்று ஆகி வெள்ளி இழைகள்போல மின்னின. மாம்பழக் கதுப்புகள் போல இருந்த கன்னங்கள் வற்றிச் சுருங்கி அதுக்கல் விழுந்தது போலாயின. நேற்றியில் பல சுருக்கங்கள் விழுந்தன.

அப்போது ஆற்றில் குளிக்க வந்தவர்கள் எல்லோரும் சுந்தரி அவ்வாறு மாறிப் போனது கண்டு திகைத்துப் போனார்கள். தன் மகளை அந்தக் கோலத்தில் கண்டு சுந்தரியின் பெற்றோர்கள் "ஐயோ! என்னம்மா இது? திடீரென உன் உருவில் ஏன் இப்படி மாற்றம் ஏற்பட்டது?" என்று கேட்டார்கள்.

அவளும் "கவலைப்படாதீர்கள். இனி நான் இளம்பெண் அல்ல. அழகியும் அல்ல. முதுமை அடைந் தவள். கிழவி. ஆனால் நீங்கள் கொடுத்த பிறப்பைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள விநாயகர் அளித்த வரப்பிரசாதம் இது," எனக் கூறி அவர்களை வணங்கினாள்.

அவள் அருகில் இருந்த ஒரு மரக்கிளையை ஒடித்து ஊன்றுகோல் போல வைத்து நிமிர்ந்து எழுந்து நிற்கையில் அந்த நாட்டு மன்னனும் அங்கு வந்து சேர்ந்தான்.

 அவனைப் பார்த்து அவள் "மன்னா! இளம் பெண்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையதாக இருக்கையில் அவர்களில் ஒருத்தியை மணந்து கொள்வதா? இது என்ன நியாயம்?" எனக் கேட்டாள். வெட்கத்தால் தலைகுனிந்த மன்னன் தலை மீதிருந்த கிரிடத்தையும் இடை வாளையும் கீழே வைத்து கிழவியாக மாறிய சுந்தரியின் கால்களில் விழுந்து வணங்கி "மாபெரும் அறி ஞர் திலகமே! உங்கள் தரிசனத்தால் என் அறியாமையே அகன்றது. இனி நானும் அரசன் என்ற அகந்தையை விட்டு மக்களின் ஊழியனாக பணிபுரிவேன்," என்று கூறினான்.
மூதாட்டி ஊன்றுகோலை ஊன் றியவாறே தன் வழியில் சென்றாள். அறிவுக்கு உறைவிடமாகக் கருதப் படும் ஒரு மடத்தை அடைந்து அதன் தலைவரிடம் அவள் தனக்கு ஞானோ பதேசம் செய்யும்படி வேண்டினாள். அவரோ, "அம்மணி, நீங்களோ பெண் இனம். நீங்கள் உபதேசம் பெற்று என்ன செய்யப் போகிறீர் கள்?" என்று கேட்டார்.

அப்போது மூதாட்டி "நீரும் நேருப்பும் ஆண்களுக்குத்தான் பயன்படுகின்றனவா? பெண்களுக்கும் இல்லையா? அவர்களும் அவற்றைப் பயன்படுத்துவது இல்லையா? குருடன் கையில் விளக்கு இருந்தாலும் அது மற்றவர்களுக்கு வெளிச்சம் அளித்து வழி காட்டும் அல்லவா? இவை எல்லாம் ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் சொந்தமே. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு எதற்கு?" என்று கேட்டாள். அப்போது அந்த ஞானபீட அதிபதி "ஆ! மாபெரும் மேதையே. இந்த ஆசனத்தை அலங்கரிக்க வேண்டியது தாங்களே. நான் அல்ல," என்று தழுதழுத்த குரலில் கூறி நின்றார்.

மூதாட்டியும் "பீடம், மடம் என்று தனிப்படுத்துவானேன்? மக்களை அணுகி அவர்களருகே இருந்து அறிவுரை கூறுவதே சிறந்தது," என்றாள்.

அந்த ஞான பீடத்தின் அதிபதி மூதாட்டியின் கால்களில் விழுந்து "அம்மணி, நானும் இனி தாங்கள் கடைப்பிடிக்கும் வழியையே பின்பற்றுகிறேன்," எனக் கூறினார்.

ஒருமுறை அந்த மூதாட்டி ஒரு கிணற்றங்கரை அருகே சென்றபோது அங்கு தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் பேசிக் கொண்டது அவளது காதில் விழுந்தது.
ஒருத்தி மட்டும் "யார் முன்னால் வந்திருந்தாலும் கவலை இல்லை. நான்தான் முதலில் தண்ணீர் இழுத்துக் கொள்வேன். பிறகு தான் மற்றவர்களுக்கு" என்று கூறி ஒவ்வொருவருக்கும் முறை போட்டாள்.

அப்போது சற்று தூரத்தில் நின்ற ஒரு சிறுமி "அம்மா! தாகமாக இருக்கிறது. கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் ஊற்றுங்கள்," என்று கெஞ்சினாள். ஆனால் அந்த பெண்களோ "போ, போ. விலகிப் போ, வராதே! நீங்கள் எல்லாம் இந்த கிணற்றின் பக்கமே வரக் கூடாது," என்று கூறினார்கள். சிறுமியோ வெகுதூரம் நடந்து வந்து களைத்துப் போனதால் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டாள்.

 அப்போது மூதாட்டி அச்சிறுமி யின் அருகில் போய் தன் செம்பி லிருந்த நீரை எடுத்து அவள் வாயில் விட்டுக் குடிக்கச் செய்தாள். மீத முள்ள நீரை அந்த மூதாட்டி குடித்தாள். அதைக் கண்டு கிணற்றங் கரையில் இருந்த பெண்கள் "பாட்டி! இதென்ன? அந்தப் பெண் தீண்டத் தகாதவள். அவளைப் போய்த் தொட்டுக் குடிக்கத் தண்ணீர் ஊற்றினாயே!" என்று கூறினார்கள்.
அந்த மூதாட்டியோ, "பெண் களே! உலகில் ஜாதி என்பது ஏது? இப்பெண்ணின் உடலில் ஓடும் ரத்தம் போலத்தான் என் உடலிலும் ஓடுகிறது. உங்கள் உடல்களில் வேறு ஏதாவது உயர்ந்த பாலோ ஓடுகிறதா? அப்படி ஓடினால் உங்களுக்கு நீர் எதற்கு? இது குடிக்கும் நீர். எங்களைப் போன்றவர்களைக் குடிக்க விடுங்கள். உங்கள் உடலில் பால் ஓடுவதானால் அதோடு திருப்தி அடையுங்கள்," என்றாள்.

அதுகேட்டு அந்த பெண்கள் வாயடைத்துப் போனார்கள். மூதாட்டி கூறிய அறிவுரை அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் மூதாட்டியைப் பணிவுடன் வணங்கி வழி அனுப்பி வைத்தார்கள்.

ஓர் ஊரில் அந்த மூதாட்டி ஒரு கோயிலில் மிருகங்களைப் பலியிடப் போவதைக் கண்டாள். அந்த பலி அம்மனின் கோபத்தைத் தணிக்கத் தான் என்று வேறு அவர்கள் கூறி னார்கள். அதைக் கேட்ட மூதாட்டி "கடவுள் படைத்த உயிரினங்களைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்டு உங்கள் உடல்களை வளர்ப்பதா? தன் குழந்தைகளையே கொல்வதையா அம்மன் விரும்புகிறாள்? இல்லை. இல்லவே இல்லை," என்றாள்.

அங்கு கூடி இருந்தவர்கள் "ஐயோ! இப்படிப் பேசுவது அம் மனுக்குச் செய்யும் அபசாரம். அம்மனுக்குக் கோபம் வந்தால் எல்லாவற்றையும் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிவிடுவாள். தெரியுமா?" என்றார்கள்.

அப்போது மூதாட்டி, "ஆ! அம்மனின் கோபத்தைத் தணிக்க இந்த மிருக பலியை லஞ்சம் கொடுப்பது போலக் கொடுக்கிறீர்களா? இப்படி பயப்பட்டா பக்தியைக் காட்டுவது? நீங்கள் நினைப் பதையெல்லாம் அம்மன் விரும்பு வதாக ஏன் சொல்லித் திரிகிறீர்கள்? உண்மையிலேயே அம்மன் மீது நீங்கள் பக்தி கொண்டிருந்தால் உங்கள் மனதில் பயமும் இராது. உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது," எனக் கூறி அவர்கள் புரிந்து கொள்ளும்விதமாய் பக்தி மார்க்கத்தை உபதேசித்தாள்.

 

0 comments:

Post a Comment

Flag Counter