விநாயகர் 20

 
கஜானன பண்டிதரின் வீட்டில் நல்ல கறவை மாடு இருந்தது. நந்தன் என்பவன் அதனை மேயவிட்டு நன்கு கவனித்து வந்தான். அதன் பாலைக் கறந்து பண்டிதருக்குக் கொடுத்து வந்தான். சுவரகேசரி இந்த நந்தனைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு அவன் செய்ய வேண்டியதைக் கூறினான்.

கணேச நவராத்திரி பூசைக்காக தன் மகளையும், மாப்பிள்ளையையும், பேரன் கணேசபட்டனையும் அழைத்துவர பண்டிதரின் மனைவி கல்யாணி நகருக்குப் போயிருந்தாள். அவர்கள் வந்து சேர ஏனோ தாமதமாகிக் கொண்டிருந்தது.

கஜானன பண்டிதரின் இனிய கானத்தைக் கேட்டு இன்புற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாதாபி நகருக்கு வந்து சேரலாயினர். விழாவின் ஆரம்ப நாள் அது. சதுர்த்தியன்று ஆரம்பமாகும் அவ்விழாவில் முதலில் பாட வேண்டியவர் கஜானன பண்டிதரே. அன்று நந்தன், சுவரகேசரி ஒரு குவளையில் கொடுத்த நீர் கலந்த பாலை பண்டிதரிடம் கொடுத்தான்.

பண்டிதர் பாலில் நீர் கலந்திருப்பது கண்டு "நந்தா! ஒருநாளும் இல்லாமல் இன்று பாலில் தண்ணீர் விட்டு ஏன் கொண்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார்.

நந்தனோ, "கடவுள் சாட்சியாக நான் பாலில் தண்ணீர் விடவில்லை!" என்று கூறி மாய்மாலம் செய்தான். இதுவரை உரக்கப் பேசாத நந்தன் அப்படிக் கத்துவது கேட்டு சில பேர் அங்கு வந்து கூடிவிட்டார்கள்.


 அவர்களில் சுவரகேசரியும் ஒருவன். அவன் சற்று தூரத்தில் நின்று சிரித்த வாறே வேடிக்கை பார்க்கலானான்.

கஜானன பண்டிதரும் "நந்தா! இந்த அற்ப விஷயத்திற்குக் கடவுள் சாட்சியாக என்கிறாயா? அப்படி யானால் தூய மனதோடு சத்தியம் செய், பார்க்கலாம்!" என்றார் கோபத்தோடு.

நந்தனுக்கும் கொஞ்சம் துணிவு ஏற்பட்டது. அவன் எதிர் அறையில் இருந்த விநாயகரின் முன்பக்கம் போய் நின்று நடுநடுங்கும் குரலில் "நான் மட்டும் இந்தப் பாலில் தண்ணீர் கலந்திருந்தால் என் இரண்டு கைகளும் துண்டித்து விழட்டும். அப்படி இல்லாமல் என் மீது குற்றம் சாட்டப்பட்டது பொய்யானால் அந்தக் குரலே மீண்டும் பேச முடியாமல் போய்விடட்டும்," எனக் கூறி சத்தியம் செய்து எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தான்.

கஜானன பண்டிதர் திடுக்கிட்டார். திடீரென தம் தொண்டை அடைத்துக் கொண்டதை உணர்ந்தார். உண்மை நிலையை அறிந்த சிலர் "ஐயோ! இதென்ன?" என மனவேதனைப் பட்டனர். சுவரகேசரியோ, "பின் என்னவாம்? சத்தியம் செய்வது என்பது விளையாட்டா?" என்றான்.


நந்தன் தன் கைகள் வேறுபட்டு விழாமல் போனது கண்டு மகிழ்ந்து சுவரகேசரியின் அருகே போய் நின்றான். இதே சமயம் பண்டிதரின் பேரன் கணேசபட்டன் ஓடோடி வந்து "தாத்தா! வண்டியிலிருந்து இறங்கி எல்லோருக்கும் முன் நான் ஓடி வந்துவிட்டேன். பின்னாலேயே பாட்டியும் அம்மாவும் அப்பாவும் வந்து கொண்டிருக்கிறார்கள்," என்றான். ஆனால் அவர் எதுவும் பேசாமல் இருப்பது கண்டு திடுக்கிட்டான்.

அப்போது நடந்ததைச் சிலர் சொல்ல கணேசபட்டன் "ஏய் நந்தா! எங்கே போகிறாய்? வா இங்கே!" என்றான்.
சுவரகேசரியுடன் கிளம்பிச் செல்ல முயன்ற நந்தன் எதிர் அறைக்குள் விநாயகரின் முன் விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். கணேசபட்டனோ, "நீ சரியாகச் சத்தியம் செய்யவில்லை. அதோ பார். விளக்கு இன்னமும் எரிந்து கொண்டே இருக்கிறதே. சரியாகச் சத்தியம் செய்," என்றான். கணேசபட்டனும் "இதோ பார்!
எனக்குத் தெரிந்து நான் தண்ணீர் கலந்த பாலைக் கொடுக்கவில்லை. இது சத்தியம். இது உண்மையாக இல்லாவிட்டால் என் கைகள் துண்டித்து விழட்டும் என்று சொல்லி விளக்கை அணைத்து சத்தியம் செய்!" என்றான்.

நந்தனுக்கு கைகால் நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அவன் "ஐயோ! நான் இந்த மாதிரி சத்தியம் செய்ய முடியாது. சுவரகேசரி பாலில் தண்ணீர் கலந்து என்னிடம் கொடுத்தது எனக்குத் தெரியுமே. நான் பாலில் தண்ணீர் விடவில்லை என்று தானே சத்தியம் செய்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்," என்று கூறிவிட்டு உள்ளே போய் சொம்பில் இருந்த நல்ல பாலை எடுத்து வந்து கணேசபட்டனிடம் கொடுத்து அவன் காலில் விழுந்து வணங்கினான்.

அங்குள்ளவர்கள் "ஆ! இதுவா விஷயம்?" எனக் கைதட்டிச் சிரித்தார்கள். சுவரகேசரி மெதுவாக நழுவலானான். சிலர் அவனைப் பிடித்து நிறுத்தினர்.

கணேசபட்டனும் "பார்த்தீர்களா எப்படி மோசடி வேலை நடந்திருக்கிறது என்று?" என்று அங்கு சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

எல்லோரும் "ஆமாம்! அப்பாவி நந்தனைக் கொண்டு என்ன வேலை செய்துவிட்டான் இந்தப் பாவிப் பயல்!" என்றனர்.அப்போது கஜானன பண்டிதரின் குரலும் முன்போலச் சரியாகி விட்டது. எல்லோரும் கணேச பட்டனைப் பாராட்டிக் கொண்டு இருக்கும்போதே வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது.

அப்போது வண்டியிலிருந்து இன்னொரு கணேசபட்டன் குதித்து வருவது கண்டு ஆச்சரியப்பட்டு பண்டிதர் தம் அருகில் நின்ற சிறுவனைப் பார்த்தார். ஆனால் அவன் அங்கே இருக்கவில்லை. மாயமாய் மறைந்துவிட்டான். கஜானன பண்டிதரின் முகம் தாமரை போல் மலர்ந்து "விநாயகா! நீயே வந்து என் கண்களைத் திறந்தாயே!" என அவர் துதி செய்து பாடலானார்.

கணேசபட்டன் ‘தாத்தா’ எனக் கூவிக் கொண்டு வரவே பண்டிதரும் "வாப்பா கணேசா!" எனக் கூறித் தம் இரு கைகளை நீட்டி அவனைத் தூக்கி வாரி அணைத்துக் கொண்டார்.  பின்னர் அவர் "விநாயகரின் அருள் நமக்குக் கிட்டிவிட்டது. சற்றுமுன் அவர் உன்னைப் போல உருவம் எடுத்து நம் வீட்டிற்கு வந்து இதனைப் புனிதமாக்கினார். இது அவரது ஆலயம்," என்று கூறிச் சிறுவன் போல ஆடிக் களித்தார்.

விநாயகரின் மீதான கீர்த்தனைகளைத் தம் இனிய குரலில் பாடலானார். அந்த கான மழை பொழிவதைக் கேட்ட மக்கள் அங்கு வந்து கூடி "ஆகா! என்ன இனிமை!" என ரசிக்கலாயினர்.

சுவரகேசரியும் அந்த கானத்தைக் கேட்டு ஓடோடி வந்து கஜானன பண்டிதரின் கால்களில் `விழுந்து "என்னை மன்னித்ததாகக் கூறினாலே தங்களது பாதங்களை விடுவேன்," எனக் கூறி அவரது கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு வேண்டினான். கஜானன பண்டிதர் திகைத்துப் போனார்.

சுவரகேசரியை கைலாகு கொடுத்துத் தூக்கி நிறுத்தி "சுவரகேசரி! எனக்கு எதற்குத் தங்க விக்கிரகம்? நீயே சுவர்ண கணேச விக்கிரகத்தை அடைந்து கொள். எனக்கு அந்த மரியாதை வேண்டாம். இனிமேல் நான் இம்மாதிரிக் கூட்டங்களில் பாடவும் போக மாட்டேன்," என்றார்.

அப்போது சிறுவன் கணேச பட்டன், "தாத்தா! நீங்கள் உங்கள் திருப்திக்காக வீட்டிற்குள்ளேயே இருந்து பாடினால் மட்டும் போதாது. பக்தியுடன் பிறர் மனம் மகிழ வைத்து அவர்களை ரசிக்குமாறும் செய்தாலே உங்கள் திறமைக்கு மதிப்பு," என்றான்.

கஜானன பண்டிதர் கை எடுத்துக் கும்பிட்டு "விநாயகரே! நீங்கள் சொல்ல வேண்டியதை இந்தச் சிறுவன் வாயிலாகச் சொல்ல வைத்து எனக்கு அறிவுரை கூறுகிறீர்களா? ஆகா! நீங்கள் கூறுவது போலவே செய்கிறேன். ஆனால் என்னை யாரும் சிறப்பாக கௌரவிக்காமல் இருக்குமாறு மட்டும் செய்துவிடுங்கள்," என வேண்டினார்.


அப்போது அதைக் கேட்டுக் கொண்டு நின்ற சுவரகேசரி "குரு தேவா! நீங்கள் இயற்றிப் பாடிய கீர்த்தனைகளை மற்றவர்களும் பாடினால் சுவர்ண கணேச விக்கிரகம் கிடைக்கப் பெற்று மரியாதையை அடைகிறார்கள். இதுபோன்ற பக்தியை நான் தங்களிடமும் காட்டி அதிர்ஷ்டம் அடையுமாறு அனுக்கிரகிக்க வேண்டுகிறேன்," என்றான்.
கஜானன பண்டிதருக்கு அறுபது ஆண்டுகள் நிறையவே அவரது சஷ்டியப்தப் பூர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அன்று மாலை வாதாபி கணபதி ஆலயப் பிரகாரத்தில் மாபெரும் கூட்டம் நடந்தது. அவர் கழுத்தில் மலர் மாலைகள் போடப்பட்டு மலை போல குவிந்தன.

அப்போது பல ராகங்களில் அவர் விநாயகரின் மீது பக்திப் பாடல்களைப் பாடினார். அன்று அந்தக் கீர்த்தனைகளைக் கேட்ட ஒவ்வொருவரின் உள்ளத்திலும் விநாயகர் குடி கொண்டு மனம் மகிழச் செய்தார். வாதாபி நகர வரலாற்றில் கஜானன பண்டிதர் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார்.

இவ்வாறு பாவனமிசிரர் கூறிய கதையைச் சிறுவர்களும் வயதானவர்களும் கேட்டு ரசித்தார்கள். ஒருநாள் ஆலயத்தில் ஒரு விசித்திரமான ஓவியம் வரையப்பட்டிருப்பது கண்டு எல்லோரும் அதையே பார்க்கக் கூடிவிட்டனர். அது ஒரு விசித்திரமான பூத உருவம். அந்த சமயம் பாவனமிசிரர் அங்கு வரவே சிறுவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவரும் அதன் கதையை அவர்களுக்குச் சொல்லலானார்.

இந்திரன் சகர மன்னனின் யாகக் குதிரையை எங்கோ ஒளித்து வைத்து விட்டான். பிருது சக்கரவர்த்தியின் யாகமும் நிறைவேறாமல் இருக்கவும் அவரது யாகக் குதிரையையும் திருடிக் கொண்டும் போனான்.

இப்படியாக பல அக்கிரமச் செயல்களை அவன் புரிந்தான். பிருது சக்கரவர்த்தியின் வம்சத்தில் பிறந்த அபிநந்தன் என்ற மன்னன் அச்சமயம் ஒரு யாகத்தைச் செய்யலானான். அதில் இந்திரனுக்கு அவிர் பாகம் அளிக்கபட மாட்டாது எனவும் அவன் அறிவித்துவிட்டான். இதனால் இந்திரன் கோபமும் ஆத்திரமும் கொண்டு காலன் என்பவனுக்கு மது, மங்கை முதலிய ஆசைகளைக் காட்டி பிருது மன்னனின் யாகத்தை நடக்கவிடாமல் நாசம் செய்து வருமாறு கூறி அனுப்பினான்.

காலன் மரணத்திற்கு அப்பாற்பட்டவன். எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழவும் இறக்கவும் அவனே காரணமாவான். அவனைக் கால தர்மன் என்றும் கால யமன் என்றும் கூட அழைப்பது உண்டு. காலன் அந்த மன்னனின் யாகத் தீயிலிருந்து பயங்கர உருவம் ஒன்றை வெளிவரும்படிச் செய்தான். அது கண்டு யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் பயந்து ஓடலானார்கள். யாகசாலையே நாசமாகிவிட்டது.

அபிநந்தன் விநாயகரின் பரம பக்தன். அவனது குரு வசிஷ்டரும், "இந்த மாதிரி ஏதாவது நிகழக் கூடும் என எதிர்பார்த்து நான் யாக பீடத்தின் எதிரே சுவஸ்திக கணேசரைப் பிரதிஷ்டை செய்திருக்கிறேன். அங்கு மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து வணங்கு. அவர் அவதரித்து இந்த பயங்கர உருவத்தை அழிப்பார்," என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான்.

அந்த சுவஸ்திகா சின்னத்தில் இருந்து இனிய நாதம் கேட்டது. அணுக்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் பூதம் ஒன்று உருவாகியது. அது பெரிதாகி எலிகளாக மாறின. அந்தச் சுண்டெலிகள் பயங்கர உருவத்தின் மீது எறும்புகள் மொய்ப்பதுபோல மொய்த்துப் பிடுங்கிக் குதறி குற்றுயிராக்கி அதனை விழச் செய்தன. அதுவும் கீழே விழுந்து சட்டென மாயமாய் மறைந்தது.

0 comments:

Post a Comment