விநாயகர் - 19

 

குகை வாயிலில் இருந்த பெரும் பாறையை ஒரு சிறு கல்லைத் தூக்கி எறிவது போலத் தன் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டு யானை அதற்குள் போயிற்று. பிறகு ரத்தினங்கள் பதித்த தங்க நகைகளை பல கட்டுகளாகக் கட்டி அது குகைக்கு வெளியே கொண்டு வந்து சௌதாமினியிடம் கொடுத்தது. பல தங்க மாலைகளைத் தன் கழுத்து நிறையப் போட்டு மற்றவற்றை எடுத்துக் கொண்டு போகும்படியும் அந்த யானை அவளுக்கு சைகை செய்து ஆசீர்வதித்தது.

அவளும் நகைகளை அணிந்து மிகுந்ததை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டபின் யானை அவளைத் தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு கல்யாணி நகரத்தின் எல்லையில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பிக் காட்டிற்குள் சென்றது.

கண்ணைப் பறிக்கும் நகைகளோடு தங்கச் சிலையே அசைந்து ஆடி வருவது போல சௌதாமினி வந்தது கண்டு அவளது மாமியார் கலககண்டி திகைத்துப் போனாள். பிறகு ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு அந்த நகைகள் எல்லாம் அவளுக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்டாள்.

சௌதாமினி கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு அவள் "ஓ! யானைக்கு விளாம்பழம் என்றால் மிகவும் பிடிக்குமா? சரி, சரி" என்று கூறி உடனே ஒரு பெரிய கூடையை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனாள். அது நிறைய விளாம்பழங்களை வாங்கிக்கொண்டு அவள் வீடு திரும்பினாள்.
 பிறகு ஒரு பெரிய சாக்குப் பை எடுத்து விளாம்பழக் கூடை மீது போட்டு அதனை எடுத்துக் கொண்டு கலககண்டி தன் மருமகள் கூறிய இடத்திற்குப் போய் "யானையே, யானையே! ஓடோடி வா, யான் மகிழ நகைகளைக் கொண்டோடி வா!" என்று பாட்டுப் பாடினாள்.

யானை வரவில்லை. ஆனால் காடே அதிரும்படி ஏதோ ஒரு மிருகம் உறுமும் சத்தம் கேட்டது. கலககண்டி தலை நிமிர்ந்து பார்த்தபோது ஒரு புலி குதித்து ஓடி வருவதைக் கண்டாள். பையைக் கீழே போட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கலககண்டி எடுத்தாள் ஓட்டம்.

ஓடி ஓடி அவள் ஓரிடத்தில் போய் பொத்தென்று விழுந்தாள். அதுதான் சௌதாமினி கூறிய குகை. அதுகண்டு அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குகை திறந்துதான் இருந்தது. அவள் எழுந்து கிடுகிடுவென்று குகைக்குள் போனாள்.

அக்குகைக்குள் எங்கு பார்த்தாலும் நகைகள் குவியல்குவியலாக இருப்பது கண்டு பைத்தியம் பிடித்தவள் போலக் கத்திக் குதித்தாள். கழுத் திலும் கைகளிலும் இடுப்பிலும் கால்களிலும் எவ்வளவு நகைகளை அணிந்து கொள்ள முடியுமோ அவ்வளவுக்கும் எடுத்து அணிந்து கொண்டாள். பிறகு தான் கொண்டு வந்த சாக்குப் பை நிறையும்வரை நகைகளை அள்ளி அள்ளி எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

அந்த மூட்டையை கலககண்டி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தபோது குகை வாசல் மூடப் பட்டிருப்பதைக் கண்டு திகைத்தாள். அங்கு அனல் போன்ற கண்களோடும் அரிவாள் போன்ற கோரைப் பற் களோடும் பயங்கரச் சிரிப்பு சிரித்துக் கொண்டு நிற்கும் பிரம்மராட்சஸி யைக் கண்டு பயந்து நின்றாள்.

பிரம்மராட்சஸியும் "ஓ! கலக கண்டியா! நீ உன் மருமகளை ஆட்டி வைத்தவள் அல்லவா? நான் என் மாமியாரையே சித்திரவதை செய்த மருமகள். தெரியுமா என் கதை?" என்று கூறிக் கதை சொல்லலாயிற்று.
ஒரு காலத்தில் நான் மிக அழகாக இருந்தேன். எனக்கு கலஹம்சி என்ற பெயர் வைக்கப்பட்டாலும் கணவன் வீட்டிற்குப் போனதும் என் வாயாடித்தனத்தைக் கண்டு கலகதுந்துபி என்ற பெயரை வைத்துவிட்டார்கள்!

 நீ எவ்வளவு கெட்ட மாமியாராக இருந்தாயோ அவ்வளவுக்கு என் மாமியார் மிகவும் நல்லவராக இருந்தார். பரம சாது.

நான் குடித்தனம் செய்ய வந்த மறுவருடமே என் கணவர் என் குணம் கண்டு சகிக்க முடியாமல் சொல்லிக் கொள்ளாமலேயே எங்கோ ஓடிவிட்டார். எனக்கோ நகைகள் என்றால் கொள்ளை ஆசை! நல்ல நெல்வயல்களை விற்று நகைகளைச் செய்து போட்டுக் கொண்டேன். என் மாமியாரும் தனக்கு ஒரு மூக்குத்தி கூட வைத்துக் கொள்ளாமல் தன் நகைகளை எல்லாம் எனக்கே கொடுத்துவிட்டார். அப்படியிருந்தும் நான் அவருக்குச் சரியாக சாப்பாடுகூடப் போடவில்லை. வீட்டு வேலைகளை எல்லாம் அவர் தலை மீதே சுமத்தினேன்.

பாவம்! இளைத்துப் போய் அவர் கடைசி காலத்தில் காசிக்குப் போயாவது கடவுளை தரிசித்துவிட்டு கங்கையில் உயிரைவிடலாம் என எண்ணி ஒரு மூட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். என் மாமனாரும் தன் மனைவியோடு கிளம்பிவிட்டார். என் மாமியார் ஏதோ மூட்டைகளைக் கொண்டு போவது கண்டு கோபப்பட்டு அதை நான் வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டேன். நான் இழுத்த இழுப்பில் நிலைதடுமாறி என் மாமியார் கீழே விழுந்து உயிரை விட்டுவிட்டார். அதுகண்டு மாமனாரும் தன் மனைவியின் பிரிவு தாங்காமல் உயிரை விட்டுவிட்டார். இப்படியாக இருவரும் இறந்து கிடந்தார்கள்.

அந்த சமயம் தாடிக்காரப் பேர்வழி ஒருவர் அங்கு வந்தார். அவர் என்னைப் பார்த்து, "நீ பிரம்மராட்சஸி யாகித்திரி," என்று சபித்துவிட்டு இறந்து கிடந்த இருவரது உடல்களுக்கும் தகனக் கிரியைகளைச் செய்தார். அவர் தான் என்னைவிட்டுப் போன என் கணவர். என் அழகைக் கண்டு என்னை மணந்த அவர் என்னை இப்படியாகும்படி சபித்தார். அப்போதும் என் நகைப் பைத்தியம் என்னைவிட்டுப் போகவில்லை. கொள்ளைக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தேன். கொள்ளைக்கார ராட்சஸி என்ற பெயரும் பெற்றேன்.
 இந்த குகையில் தான் கொள்ளைக்காரர்கள் தாம் கொள்ளை அடித்த நகைகளைச் சேர்த்து வைத்து வந்தார்கள். இவற்றை எல்லாம் நானே அடைய எல்லாக் கொள்ளைக்காரர்களுக்கும் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்தேன். அவர்கள் இறக்குமுன் என்னை இந்த குகைக்குள் வைத்து இதன் வாயிலைப் பெரிய பாறாங்கல்லால் மூடிவிட்டே செத்தார்கள்.
கலககண்டி! என்னால் இந்த நகைகளைக் காவல் காக்கத்தான் முடிந்தது, போட்டுக் கொண்டு எங்கேயும் போக முடியவில்லை. உனக்கு நல்ல புத்தி வரும்படி செய்தால் எனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்று இந்த குகைக்குள் வந்த யானை கூறியது.

யானை உன் மருமகளுக்கு கொடுத்த நகைகள் எல்லாம் அசல் தங்க நகைகளே. ஆனால் நீ அள்ளி எடுத்துக் கொண்டவைகள் எல்லாம் என்ன என்று மூட்டையை அவிழ்த் துப் பார்!" இவ்வாறு பிரம்மராட்சஸி கூறியதும் கலககண்டி தன் தலை மீதிருந்த மூட்டையை இறக்கி அவிழ்த்துக் கொட்டினாள். பாம்புகளும் தேள்களும் நட்டுவாக்காளிகளுமே அதிலிருந்து வெளி வந்து ஊர்ந்து குகையின் நாலாபுறமும் சென்றன.
அதுமட்டுமல்ல கலககண்டி அணிந்திருந்த நகைகளும் பாம்பு களாகவும் தேள்களாகவும் மாறி அவளது உடலைக் கொட்டின. வலி தாங்க முடியாது கலககண்டி குகையே எதிரொலிக்கக் கத்தினாள்.

பிரம்மாராட்சஸி பலமாகச் சிரித்து "நீ உன் மருமகளைக் கொடுமைப்படுத்தினாய். நான் என் மாமியாரைக் கொடுமைப்படுத்தினேன். நம் போன்றவர்கள் பெண் குலத்திற்கே அவமானச் சின்னமாகும். உத்தமமான உன் மருமகளை நீ நல்ல விதமாக நடத்தப் போகிறாயா அல் லது இந்த குகையில் என்னைப் போல பிரம்மராட்சஸியாக ஆகி வாழ்நாள் முழுவதும் கழிக்கப் போகிறாயா? என்ன சொல்கிறாய்?" என்று கேட்டது.
கலககண்டித் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டு "எனக்கு புத்தி வந்தது. இனிமேல் என் மருமகளிடம் அன்புடன் நடந்து கொள்வேன். நான் இந்த குகையிலிருந்து வெளியே போனால் போதும். அதற்கு நீ வழி செய்.
நீ சொன்னபடி எல்லாம் கேட்கிறேன்," என்று பிரம்மராட்சஸியிடம் கெஞ்சினாள்.பிரம்மராட்சஸியும் கலககண்டியை குகையிலிருந்து வெளியே அழைத்துப் போய் காட்டைத் தாண்டி கல்யாணி நகர எல்லைக்குக் கொண்டு போய்விட்டாள்.

பிறகு அவள் "எச்சரிக்கிறேன். ஜாக்கிரதை! நீ மட்டும் நான் சொன்னபடி நடந்து கொள்ளாவிட்டால் மறுபடியும் அந்த குகைக்குள் போய் பிரம்மராட்சஸியாகத் தான் இருக்க வேண்டி வரும். நினைவில் வைத்துக் கொள்!" என்று கூறி அனுப்பினாள்.

கலககண்டியும் தப்பினேன் பிழைத்தேன் என்று தன் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள். அவள் சௌதாமினியின் கால்களில் வீழ்ந்து, "அம்மா சௌதாமினி! என்னை மன்னித்துவிடு. நீயும் உன் கணவனும் சந்தோஷமாக வாழ்வதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்? நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து என்னை மன்னித்து விடு!" என வேண்டினாள். தன் மாமியார் இப்படி மாற விநாயகரே காரணம் என்பது சௌதாமினிக்குத் தெரிந்துவிட்டது.

பாவனமிசிரர் இந்தக் கதையைக் கூறி "அந்த குகையின் யானை யார் தெரியுமா?" என்று கேட்க, சிறுவர்கள் எல்லோரும் ஒரே குரலில் "விநாயகர் தாம். வேறு யாராக இருக்க முடியும்?" என்றார்கள். இப்படியே அவர் பல கதைகளைக் கூறி சிறுவர்களின் மனதில் விநாயகர் மீது பக்தி ஏற்படும்படிச் செய்தார்.

 
ஒருமுறை ஒரு சங்கீத ரசிகர் ஒரு கோயிலில் உள்ள சித்திரத்தைக் காட்டி "இதில் வீணை ஒருவர் வாசிக்க விநாயகர் களிநடம் புரிவதாக இருக்கிறதே. இதற்கு ஏதாவது கதை உண்டா?" என்று பாவன மிசிரரிடம் கேட்டார். அவரும் "ஆமாம். உள்ளது கூறுகிறேன்," எனக் கூறிக் கதையை ஆரம்பித்தார்.

வாதாபி நகரம் கலைகளில் சிறந்து விளங்கியது. இசை, ஓவியக் கலைஞர்கள் இங்கு தோன்றினர். கஜானன பண்டிதர் நகரில் முதலிடம் பெறுபவர். நல்ல அறிஞர். இசை ஞானம் அவருக்கு அபாரம். நன்கு பாடுவார். அவரது குரலே பிறரைக் கவர்ந்து இழுத்துவிடும் சக்தி பெற்றிருந்தது.

வாதாபி கணபதியின் மீது அவரே பல பாடல்களை இயற்றிப் பாடி இருக்கிறார். அவரது பேரன் பால கணேச பட்டன் அவர் பாடுவதற்குத் தக்கபடி தாளம் போட்டு வந்தான்.

கஜானன பண்டிதர் பல ராகங்களில் விநாகயரைப் புகழ்ந்து கீர்த்தனைகளை இயற்றிப் பாடி வரலானார். அவர் தனக்கு மதிப்பு, கௌரவம் முதலியன வேண்டும் என்று சற்றும் எதிர்பாராதபோதிலும் ஒவ்வொரு ஆண்டிலும் முதலில் தங்க கணபதி விக்கிரகம் அவரது இல்லத்திற்கே வரும். இதனால் வாதாபி நகரில் உள்ள ஒரு சிலருக்கு அவர் மீது பொறாமை ஏற்பட்டது. இவர்களில் ஸ்வரகேசரி என்ற பாடகர் ஒருவர்.


அவர் எப்போது பார்த்தாலும் கஜானன பண்டிதர் பாடுவதில் ராகம் தப்பு, தாளம் தவறு என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லி வந்தார். அவர் தம் குரலைப் பலவிதத்திலும் திருப்பி வேகவேகமாக ஸ்வரம் போட்டுத் தாம் பெரிய வித்வான் எனக் காட்டிக் கொள்ள முயல்வார்.
ஒருமுறை ஸ்வரகேசரி "இந்த ஆண்டு தங்க விநாயகர் விக்கிரகம் கஜானன பண்டிதர் வீட்டிற்குப் போகாமல் செய்துவிடுகிறேன் பார்!" என எண்ணி அதற்கான ஒரு திட்டத் தையும் கூட போட்டு வைத்துக் கொண்டார்.     (தொடரும்)

0 comments:

Post a Comment

Flag Counter