சனீஸ்வரரின் விஜயம்


 ஒரு ஏழை விவசாயிக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களை விவசாயி மிகவும் பிரியத்துடன் வளர்த்தான். அவர்களும் வளர்ந்து பெரியவர்களானதும் வயல் வேலைகள் அனைத்திலும் தந்தைக்கு உதவியாக இருந்தனர். உரிய காலத்தில் தகுந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து தன் பிள்ளைகளுக்கு விவசாயி திருமணம் செய்து வைத்தான். அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். மருமகள்களுடைய ஒப்பந்தப்படி ஒவ்வொரு நாளும் ஒரு மருமகள் வீட்டிலேயே தங்கி அனைவருக்கும் உணவு தயாரிக்க மற்ற மருமகள் இருவரும் வயல் வெளிக்கு சென்று வந்தனர்.

ஒரு சனிக்கிழமை மூன்றாவது  மருமகளின் சமைக்கும் முறையாக அமைந்தது. அவள் சமைக்க ஆரம்பித்த போது, யாரோ அழைக்கும் குரல் கேட்டு, அவள் வெளியே வந்தாள். கிழிந்த உடைகளில் ஒரு பிச்சைக்காரன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அவன் அவளை நோக்கி, "தாயே எனக்கு உடல் முழுதும் அரிக்கிறது எனக்குத் தேய்த்துக் கொள்ள எண்ணெய் கொடுப்பாயா?" என்று கேட்டான்.

அவள் உடனே உள்ளே சென்று எண்ணெய் பாத்திரம் எடுத்து வந்து அவனது கைகளில் நல்லெண்ணெய் வார்த்தாள். அதை அவன் உடல் முழுதும் பூசிக் கொண்டான். அவள் அவனைப் பார்த்து "நீ அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு வா. உனக்கு சாப்பாடு போடுகிறேன்" என்று அன்புடன் சொன்னாள்.

பிச்சைக்காரன் குளத்தில் குளித்து விட்டு, வரும் வழியில் இலைகளை  பறித்து அவற்றை தைத்து உண்பதற்கான இலையாக மாற்றிக் கொண்டு வந்தான். சிறிய மருமகள் அன்புடன் பறிமாற, பிச்சைக்காரன் மகிழ்ச்சியுடன் உண்டு விட்டு "நன்றி தாயே! இவ்வளவு சுவையான உணவு நான் சாப்பிட்டதேஇல்லை" என்று அவளைப் புகழ்ந்து விட்டு, தான் சாப்பிட்ட இலையை அவர்கள் வீட்டுக் கூரையிலேயே செருகிவிட்டுச் சென்று விட்டான். இதை அந்தப் பெண் பார்த்தாள். ஆனால் விரைவிலேயே அதை மறந்து விட்டாள்.

 அன்றிரவு குடும்பம் முழுவதும் சாப்பிட அமர்ந்தவுடன், சிறிய மருமகள் பறிமாற அன்று உணவுப் பண்டங்கள் மிகவும் சுவையாய் இருந்ததைக் கண்டு அனைவரும் அவளைப் புகழ்ந்தனர். அடுத்த சனிக்கிழமை, இரண்டாவது மருமகளின் முறை வந்தது. அவள் சமைக்கத் தொடங்கியதும் அதே பிச்சைக்காரன் அன்றும் வந்தான். "தாயே, உடல் எங்கும் அரிக்கிறது. கொஞ்சம் எண்ணெய் தாருங்களேன்" என்று அந்தப் பிச்சைக்காரன் வேண்டியதும், இரண்டாம் மருமகளுக்குக் கோபம் வந்தது. "பிச்சைக்காரனுக்கு எண்ணெய் வேண்டுமா? சபாஷ். உனக்குத் தருவதற்காக நாங்கள் எண்ணெய் வைத்துக் கொள்ளவில்லை. போ வெளியே" என்று விரட்டினாள்.

"சரி, எண்ணெய் இல்லாவிடில் பரவாயில்லை. சாப்பிட ஏதாவது தருகிறீர்களா?" என்று பிச்சைக்காரன் கேட்க "நீ இன்னுமா போகவில்லை?" என்று அழுக்கு நீரை ஜன்னல் மூலம் அவன் மீது வீசினாள்.
"உனக்கு இன்று சாப்பிட ஒன்றுமில்லாமல் போகட்டும்" என்று சாபமிட்டு விட்டுப் பிச்சைக்காரன் சென்று விட்டான்.

அன்றிரவு அனைவரும் சாப்பிட அமர்ந்தவுடன் மருமகள் பறிமாற வேண்டி பாத்திரங்களைத் திறந்தால் அவை அனைத்தும் காலியாக இருந்தன. ஏதோ தவறு நடந்து விட்டது என்று எண்ணி விவசாயி மீண்டும் சமையல் செய்யக் கூறினான். ஆனால் வீட்டில் அரிசி, தானியங்கள் உள்ள பாத்திரங்கள் அனைத்தும் காலியாய்த் தென்பட்டன. விவசாயியின் மகன்கள் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வர, மீண்டும் சமையல் செய்யும் படியாக ஆயிற்று.

அதற்கடுத்த சனிக்கிழமை, மூத்த மருமகளின் முறையாக அமைந்தது. அந்த சனிக்கிழமையும் சொல்லி வைத்தாற்போல், அதே பிச்சைக்காரன் வந்தான். "தாயே, கொஞ்சம் எண்ணெய் தருவீர்களா?" என்று
கேட்ட பிச்சைக்காரனைக் கண்டதும் மூத்தவளுக்கு எரிச்சல் உண்டாயிற்று.

 இவன்தான் சென்ற சனிக்கிழமை தன் வீட்டிலிருந்த சமையல் பதார்த்தங்களைத் திருடிச் சென்றவனோ என்ற சந்தேகமும் உண்டாயிற்று. உடனே அவனை சரமாரியாகத் திட்டி, "திருட்டுப்பயலே, இங்கிருந்து போ" என்று அவனை விரட்டினாள்.

அந்தப் பிச்சைக்காரன், "அம்மா, அநியாயமாக என்னைப் பழி சொல்லாதீர்கள். எனக்குக் கொஞ்சம் எண்ணெயும், உணவும் கொடுத்தால், உங்களை வாழ்த்திவிட்டுப் போவேன்" என்றான்.
மூத்த மருமகள் தன் கையில் ஒரு கம்பு எடுத்துக் கொண்டு, "உன் வாழ்த்துகளை குப்பையில் போடு. போகிறாயா இல்லை கம்பால் அடித்துத் துரத்தவா?" என்று கம்பை ஆட்டினாள்.

"நீ இன்று சமைப்பதை யாரும் சாப்பிட முடியாது" என்று சாபமிட்டு விட்டு பிச்சைக்காரன் சென்று விட்டான். ஏகோ பைத்தியக்காரன் என்று எண்ணி, மருமகள் தன் வேலையை கவனித்தாள். அன்றிரவு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். பரிமாற வேண்டி, மூத்த மருமகள் ஒரு பாத்திரத்தைத் திறந்தால் அதில் புழுக்கள் நேளிந்தன. மற்றொரு பாத்திரத்தில் எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லா உணவு பதார்த்தங்களிலும் பூச்சிகளும், புழுக்களுமாய் நிறைந்திருந்தன.

விவசாயி கவலையில் ஆழ்ந்தான். "நம்முடைய செயலால் கடவுளின் கோபத்தைத் தூண்டி விட்டிருக்கிறோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும்" என்று நினைத்துக் கொண்டான். மீண்டும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி சமைக்க வேண்டி வந்தது.

அடுத்த சனிக்கிழமை மீண்டும் கடைசி மருமகளின் முறை வந்தது. அன்றும் அதே பிச்சைக்காரன் வந்தான். அவனை அடையாளம் கண்டு கொண்ட மருமகள், "உனக்கு இன்னுமா அரிப்பு சரியாக வில்லை? கவலைப்படாதே, இன்றும் உனக்கு எண்ணெய் தருகிறேன்" என்று சொல்லி எண்ணெய் தந்ததுடன், அவனைக் குளித்துவிட்டு சாப்பிட வருமாறு அழைத்தாள்.

 போனமுறை செய்ததுபோல் அன்றும் ஓர் இலை தயாரித்துக் கொண்டு வந்த பிச்சைக்காரன் வாயிராற உண்டு விட்டு, "நீயும் உன் கணவனும் நீடூழி வாழ்க" என்று வாழ்த்தி விட்டு, முன்போலவே, சாப்பிட்ட இலையை வீட்டுக் கூரையில் செருகி விட்டுச் சென்றான். இதை கவனித்த மருமகள் அன்றும் ஒன்றும் சொல்லவில்லை.

அன்றிரவு உணவு மிகவும் சுவையாக இருந்தது. அதைக் கண்ட விவசாயி, " என்ன அதிசயம்? ஒரு சனிக்கிழமை சாப்பாடு காணாமற்போனது. அடுத்த சனிக்கிழமை பூச்சியும் புழுவுமாக இருந்தது. இந்த சனிக்கிழமை மிகவும் சுவையாக உள்ளது. கடவுளுக்கு இப்போது நம்மீது கோபமில்லை என்று நினைக்கிறேன்," என்றான். உடனே அந்தப் பிச்சைக்காரனின் ஞாபகம் வந்த கடைசி மருமகள், அவள் வீட்டிலிருந்த இரண்டு சனிக்கிழமைகள் நடந்த விஷயங்களைக் கூறினாள். சாப்பிட்ட இலைகளை அவன் வீட்டுக் கூரையில் செருகியதையும் நினைவு கூர்ந்தாள்.

உடனே விவசாயி அந்த இலைகள் இன்றும் இருக்கின்றனவா என்று பார்க்கச் சென்றான். அவை இன்னும் அங்கேயே இருந்தன. ஓரிலையை மெதுவாக இழுத்துப் பார்த்தால், அதிக நவரத்தின கற்கள் இருந்தன. மற்றோர் இலையை இழுத்துப் பார்க்க, அதில் தங்க நாணயங்கள் இருந்தன. அவற்றைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். அப்போது மற்ற இரு மருமகள்களுக்கும் தான் செய்தது நினைவுக்கு வர, அதை வெட்கத்துடனும் வருத்தத்துடனும் எடுத்துரைத்தனர்.

யாவற்றையும் செவிமடுத்துக் கேட்ட விவசாயி, "எனக்குப் புரிந்து விட்டது. பிச்சைக்காரன் உருவத்தில் வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் சனீஸ்வர பகவான்தான். அவர் நம்மீது மகிழ்ச்சி அடைந்து, அளவற்ற செல்வத்தை கொடுத்திருக்கிறார்" என்றான். இந்த நிகழ்ச்சி கிராமத்தில் எல்லாருக்கும் தெரிய, அன்று முதல் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எண்ணெய் அளித்து வழிபடத் துவங்கினார்.

0 comments:

Post a Comment