மாப்பிள்ளை கேட்ட மணப்பெண்


 ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார ஜமீன்தார் இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விட்டாள். தன்னுடைய மகளுக்கு மல்லிகா என்று பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். சில ஆண்டுகளில் மல்லிகா பெரியவளாகி மணப் பருவம் எய்தினாள். அவளது தோழிகள் அவளுடைய அழகைப் புகழ்ந்தார்கள். இதனால் மல்லிகா தன் அழகால் கர்வம் கொண்டிருந்தாள்.
அந்தக் காலத்தில் கிராமத்து நாவிதனுக்கு கிராமத்திலுள்ள இளைஞர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. ஜமீன்தார் ஒரு நாள் நாவிதனை அழைத்து தன் மகளுக்குப் பொருத்தமான வரனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். இருவரின் பேச்சுவார்த்தையைக் கவனித்த மல்லிகா, "அப்பா, பலசாலியான ஒருவனைத் தான் நான் மணம் புரிவேனே தவிர சாதாரண மனிதனை அல்ல" என்று பளிச் என சொன்னாள்.

அவளுடைய அதிரடி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தாருக்கும், நாவிதனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. தனது திருமண விஷயத்தைப் பற்றி ஒரு இளம்பெண் இவ்வளவு பகிரங்கமாகப் பேசுவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜமீன்தார் மல்லிகாவை நோக்கி, "மகளே, உன்னுடைய திருமணத்தைப் பற்றி நீயே பேசுவது சரியில்லை. உனக்குத் தகுந்த மாப்பிள்ளையை நான்தான் தேர்வு செய்ய வேண்டும்" என்றார். ஆனால் மல்லிகா பிடிவாதமாக, "அப்பா, நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நான் மணம் புரிய முடியாது. என்னுடைய எதிர்பார்ப்புகளைப் பற்றி நாவிதனுக்கு என்ன தெரியும்?" என்று கூறி விம்மிக் கொண்டே சென்றாள்.

 தன்னுடைய அருமை மகள் விம்முவதைக் கண்டதும் அதற்குமேல் அவளைக் கடிந்து கொள்ள மனமில்லாமல் ஜமீன்தார் மவுனமானார். ஆனால் மல்லிகாவோ தனக்கு விருப்பமான நபரை வீட்டை விட்டு வெளியேறித் தானேத் தேடிக் கொள்ள முடிவு செய்தாள்.

மறுநாள் காலை ஜமீன்தார் எழுவதற்கு முன்பே மல்லிகா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். நடந்து கொண்டே சென்றவள் பிரதான சாலையில் ஓர் ஊர்வலம்  செல்வதைக் கண்டு சற்றே ஒதுங்கி நின்றாள். ஊர்வலம் அருகே நேருங்கியதும் குதிரை மீது பணக்கார மனிதன் சவாரி செய்து  கொண்டு செல்வதையும் குதிரைக்கு முன்னும் பின்னும் அவனுடைய ஆட்கள் அணி வகுத்து செல்வதையும் பார்த்தாள். சாலையில் கூடியிருந்த மக்கள் அவரை வாழ்த்துவதையும் கண்டாள்.

ஒருவேளை இவர்தான் இந்த நாட்டு மன்னரோ என்று மல்லிகா அதிசயித்தாள். இதற்கு முன் மன்னரை அவள் பார்த்ததேயில்லை. ஆனால் இவர் மன்னராயிருந்தால், கண்டிப்பாக பலசாலியாகத் தான் இருப்பார் என்றும் மணம் புரிந்தால் இவரையே மணம் புரிய வேண்டும் என்றும் எண்ணினாள். இந்த எண்ணத்துடன் அந்த ஊர்வலத்திற்குப் பின்னால் தானும் சென்றாள்.
ஒரு குளத்தருகே செல்லும்போது ஊர்வலம் நின்றது. அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு யோகியை அந்த நபர் பார்த்ததே இதற்குக் காரணம். குதிரையிலிருந்து இறங்கிய அந்த பணக்காரர் நேராக அந்த யோகியிடம் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவருடன் வந்த ஆட்கள் மலர்களையும், பழங்களையும் யோகியின் காலடியில் சமர்ப்பிக்க யோகி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார்.

குதிரையில் வந்த பணக்காரர்தான் மிகுந்த பலசாலி என்று நினைத்திருந்த மல்லிகாவுக்கு அவரது இந்த செய்கை ஆச்சரியத்தை அளித்தது. அப்படிப் பட்டவர் யோகியை விழுந்து வணங்கினாரெனில் யோகிதான் அவரை விட பலசாலியா! அப்படியானால், யோகியைத் தான் மணக்க வேண்டும். ஆனால் யோகி தன்னை மணப்பாரா? இப்படிப்பட்ட சிந்தனைகள் அவளுக்குத் தோன்றின. ஊர்வலத்தை மறந்து விட்டு யோகியின் அருகில் மல்லிகா அமர்ந்தாள்.

 சிறிது நேரத்தில் பழங்கள், பூக்களுடன் யோகி எங்கோ கிளம்பிச் செல்ல, அவரை மல்லிகாவும் பின் தொடர்ந்தாள். அந்த யோகி ஒரு சிறிய கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த இறைவனை வணங்கினார். அதன்பிறகு யோகி வெளியில் சென்று விட்டார். கோயிலிலுள்ள இறைவன் தான் யோகியைவிட பலசாலி என இப்போது மல்லிகா நினைத்தாள். இறைவனையே மணந்து கொண்டு அந்தக் கோயிலிலேயே தங்கிவிட மல்லிகா தீர்மானித்தாள். "இறைவா, இப்படி சிலையாக இல்லாமல் உயிருள்ள வடிவம் எடுத்துவா. உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்.

அப்போது கோயிலுக்குள் ஒரு நாய் நுழைந்து விட்டது. இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை, அந்த நாய் உண்ணத் தொடங்கியது. திடீரெனக் கண் விழித்துப் பார்த்த மல்லிகா, அந்த நாயைக் கண்டதும் இறைவனே தன் பிரார்த்தனைக்கிணங்கி நாய் உருவத்தில் வந்து விட்டார் என நினைத்தாள், இதற்குள் அந்த நாய் கோயிலை விட்டு வெளியே ஓடியதும், மல்லிகா நாயைப் பின் தொடர்ந்தாள்.

நாய் நேராக ஒரு வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த ஒரு மனிதனிடம் கொஞ்சி விளையாடி அவன் முன் படுத்துக் கொண்டு குழைந்தது. நாயின் எசமான் அவன் என்று தெரிந்து கொண்ட மல்லிகா, நாய் வடிவத்திலிருந்த கடவுளை விட அவன் பலசாலி என்று எண்ணினாள். அந்த ஆள் ஒரு விவசாயி. அவன் சற்று நேரத்திற்குப் பின் தனது ஏரை எடுத்துக் கொண்டு தன் வயலில் இறங்கி உழ ஆரம்பித்தான்.

இறுகிய நிலத்தையே ஆழமாக உழுபவன்தான் மிகுந்த பலசாலி என்று மல்லிகா இப்போது உறுதியாக நம்பினாள். அடுத்த கணம் அவன் கால்களில் வீழ்ந்து வணங்கி, "இந்த ஊரில் நீங்கள்தான் மிகுந்த பலசாலி என்று தெரிந்து கொண்டேன். என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினாள். அவளது கதையை முதலிலிருந்து கேட்டுவிட்டு அவளது அழகிய முகத்தைப் பார்த்து, "மல்லிகா,  உன்னைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்" என்றான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter