அதிசயத் திருடன்


 பணக்காரர்களைக் கொள்ளைஅடித்து ஏழைகளுக்கு உதவி புரிந்த ராபின்ஹுட் என்ற கதாநாயகனைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கேரள மாநிலத்தில் அதே போன்ற ஓர் அதிசயத் திருடன் நிஜமாகவே இருந்ததுண்டு. கொச்சுண்ணி என்ற பெயர் கொண்ட அந்தத் திருடன் ஏழைகளை வஞ்சித்து பணம் பறிக்கும் செல்வந்தர்களைக் கொள்ளையடித்து வந்தான். ஆனால் இவ்வாறு திருடிய பணத்தை தனக்குஎன்று பயன்படுத்தாமல் அதைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி வந்தான்.

இதனால் ஏழைகள் அவனிடம் நட்புரிமை பாராட்டிய போதிலும் அவன் பெயரான ‘காயம் குளம் கொச்சுண்ணி’ என்பதைக் கேட்டவுடனேயே பண்காரர்களுக்கு குலைநடுக்கம் ஏற்பட்டது.

காயங்குளம் என்ற ஊரில் ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு ஜமீன்தார் இருந்தார். தங்க நகை முதலிய ஆபரணங்களை அடமானமாகப் பெற்றுக் கொண்டு மிக அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுப்பது அவர் வழக்கமாகஇருந்தது. பெரும்பாலானவர்கள் அசலை குறித்த தவணையில் செலுத்த முடியாது தவிக்கையில், அவர்களது அடமானப் பொருட்களை ஜமீன்தார் தன்னுடையதாக்கிக் கொள்வார். இவ்வாறு சேர்த்த செல்வத்தினால் அவர் பெரிய மாளிகையே கட்டி விட்டார்.

அந்த மாளிகையில் இரட்டைச் சுவர்களை அமைத்து தன் இருப்பிடத்தை உறுதியாகவும் பத்திரமானதாகவும் ரகசிய அறைகள் அடங்கிய தாகவும் ஏற்படுத்திக் கொண்டார்.

 இவ்வளவு பந்தோபஸ்து எதற்கு என்று நண்பர்கள் யாராவது கேட்டால் "கொச்சுண்ணி திருட முயற்சித்தால் என்னிடமுள்ள அடமானப் பொருட்களை நான் எப்படி பத்திரமாக பாதுகாக்க முடியும்? ஆகவே தான் என் வீட்டை ஒரு மர்மக் கோட்டை ஆக்கிவிட்டேன். இப்போது பத்து கொச்சுண்ணிகள் வந்தாலும் திருட முடியாது" என்று பெருமை பேசினார்.

அவரது இந்த வாய் சவால் கொச்சுண்ணியின் செவிகளை எட்டியது. ஜமீன்தாருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்த கொச்சுண்ணி ஒருநாள் நேராக ஜமீன்தாரை சந்தித்து பணம் கடன் கேட்டான். அவர் தராவிட்டால் அவரது வீட்டில் புகுந்து திருடலாம் என்று எண்ணினான். ஆனால் ஜமீன்தார் உடனே கடன் கொடுத்து விட்டார். கொச்சுண்ணியால் தன் வீட்டில் திருட முடியாது என்று சவால் விட்ட ஜமீன்தாரை, இப்போது வேறு வழியில் கொச்சுண்ணி மடக்க எண்ணினான்.

கிருஷ்ணன் நாயர் என்பவன் தனது நகைகளை ஒரு முறை ஜமீன்தாரிடம் அடகு வைத்து ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான். இதை அறிந்த கொச்சுண்ணி ஒரு நாள் இரவு ஜமீன்தாரின் வீட்டை அடைந்தான். ஜமீன்தாரின் தினசரி நடவடிக்கைகளை நன்கு அறிந்திருந்த கொச்சுண்ணிக்கு முன் இரவு நேரத்தில் ஜமீன்தார் என்ன செய்வார் என்பது தெரிந்திருந்தது.

ஜமீன்தார் உடலில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, தன் வீட்டிலுள்ள சிறிய குளத்தில் குளிப்பதற்குத் தயாராக இருந்தார். இதுதான் சமயம் என்று வீட்டிலுள்ள கொச்சுண்ணி வீட்டின் முன்புறம் மறைவாக நின்று கொண்டு, ஜமீன்தாரது மனைவியை அழைத்து, "கிருஷ்ணன் நாயர் வந்திருக்கிறான். அவனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் அடகு வைத்திருந்த நகைகளை திருப்பிக் கொடு" என்று ஜமீன்தாருடைய குரலில் பேசினான். தன் கணவர் தான் தோட்டத்திலிருந்தபடியே பேசுகிறார் என்று நம்பிவிட்ட ஜமீன்தார் மனைவி அடகு நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 அங்கு நின்றிருந்த கொச்சுண்ணியின் கையிலிருந்து பணப்பையைப் பெற்றுக் கொண்டு நகைகளைக் கொடுத்து விட்டாள். கொச்சுண்ணியும் நகைகளுடன் சென்று விட்டான். இது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஜமீன்தாருக்குத் தெரியாது.

சில நாள்கள் கழித்து கிருஷ்ணன் நாயர் ஜமீன்தாரிடம் வந்து தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து அடகு வைத்த நகைகளைக் கேட்டான். பணத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளே நகைகளைத் தேடிய ஜமீன்தாருக்கு அவற்றைக் காணாததால் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே தன் மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார். அவள், "உங்களுக்கு மறந்து விட்டதா? நீங்கள் தானே சில நாள்களுக்கு முன் கிருஷ்ணன் நாயர் வந்திருந்த போது அவருடைய பணத்தைப் பெற்றுக் கொண்டு நகைகளைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னீர்கள்!" என்றாள்.

"அப்படியா, அந்தப் பணம் எங்கே?" என்று ஜமீன்தார் கேட்டார். அவளும் கொச்சுண்ணி தந்த சிவப்பு நிற பணப்பையைக் கொண்டு வந்தாள். அதைத் திறந்து பார்த்தால் உள்ளே பணமே இல்லை.

பெருத்த அதிர்ச்சியுற்ற ஜமீன்தார் கிருஷ்ணன் நாயரிடம் நிலைமையை விளக்கித் தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். நகைகளுக்கு பதிலாக அதற்குச் சமமான மதிப்புஉள்ள பணம் கொடுத்து அவனை அனுப்பினார்.

ஜமீன்தாரும் அவரது மனைவியும் தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டதை உணர்ந்தனர். ஜமீன்தார் தன் மனைவியிடம் "அன்று வந்த ஆள் எப்படி இருந்தான்?" என்று கேட்க "நான் உன்னிப்பாக கவனிக்கவில்லை. நீங்களே கொடுக்கச் சொன்னதால் தான் வந்திருப்பது கிருஷ்ணன் நாயர் என்று நினைத்தேன்" என்றாள்.

"ஆகா! இது கொச்சுண்ணியின் வேலையா!" என்ற எண்ணம் தோன்றவே ஜமீன்தாருக்கு அதிர்ச்சியுடன் பயமும் ஏற்பட்டது. தன்னுடைய குரலில் பேசி தன் மனைவியை ஏமாற்றி விட்டானே, இன்னும் என்னவெல்லாம் செய்வானோ என்ற பயம் வந்தது.

இப்படி சோகக் கடலில் மூழ்கிஇருந்த இருவரையும் நோக்கி சில மணிநேரங்களில் கொச்சுண்ணியே வந்தான் என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? செய்வதையும் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல், "ஏன் இப்படி இருவரும் கவலையாக இருக்கிறீர்கள்?" என்றான் கொச்சுண்ணி. ஜமீன்தாரால் பேசவே முடியவில்லை. அவர் மனைவி நடந்ததை சொன்னாள்.

 அவள் சொன்னதைக் கேட்டு கடகடவென சிரித்த கொச்சுண்ணி ஒரு பையை நீட்டி "இதோ அந்த நகைகள். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்" என்றானே பார்க்கலாம். பிறகு தொடர்ந்து "கிருஷ்ணன் நாயரைக் கூப்பிட்டு அவனுக்கு நகைகளைக் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

என்னமோ, பத்து கொச்சுண்ணிகள் வந்தாலும் உங்கள் வீட்டில் திருட முடியாது என்று சவடால் அடித்தீர்களல்லவா? அதற்காகத்தான் இப்படிச் செய்தேன்" என்று கொச்சுண்ணி பதில் கூறினான்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் ஜமீன்தார் நல்லவராக திருந்தி விட்டார் என்று கொச்சுண்ணி கேள்விப்பட்டிருந்தான். ஆகவே அதன் பிறகு கொச்சுண்ணி ஜமீன்தாருக்கு இடைஞ்சல் எதுவும் செய்யவில்லை.

அந்த ஊரில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரு கொப்பரை வியாபாரி இருந்தான். அவன் வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. அடிக்கடி அதிக வட்டிக்குப் பணம் வாங்கி ஏகப்பட்ட சிக்கலில் மூழ்கி இருந்தான். இவ்வாறு வியாபாரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதும், என்றாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவன் நாள்களை ஓட்டி வந்தான்.

ஒருநாள் அவன் கொப்பரை  தேங்காய்களை ஆலப்புழைக்குச் சென்று விற்றுவிட்டு, எதிர்பார்த்த விலையில் விற்பனை ஆகவில்லை என்பதனால் வருத்தத்துடன் தனது ஊர் நோக்கிச் செல்லும் படகில் அமர்ந்து இருந்தான். திடீரென அவர்கள் பின் பக்கத்திலிருந்து ஒரு விசைப்படகு வேகமாக வந்தது. அதிலிருந்து ஒருவன், வியாபாரி சென்று கொண்டிருந்த படகுக்குத் தாவியேறினான். அது கொச்சுண்ணி என்று அறிந்தவுடன் வியாபாரி பயந்து நடுங்கினான்.

கொச்சுண்ணி வியாபாரியை யாரென்று கேட்டான். வியாபாரி, "நான் கொப்பரை தேங்காய் விற்பவன். ஆலப்புழையிலிருந்து திரும்பி வருகிறேன்" என்றான்.

 "தேங்காய் வியாபாரியா நீ? அப்படியானால் உன்னிடம் அதிகப்  பணம் இருக்கும். அதை இப்போதே என்னிடம் கொடுத்து விடு" என்று கொச்சுண்ணி கட்டளையிட்டான்.

"ஐயா, நான் ஓர் ஏழை வியாபாரி. என்னை விட்டு விடுங்கள்" என்று வியாபாரி கெஞ்சினான். "நான் யார் தெரியுமா? நான்தான் கொச்சுண்ணி. நான் சொல்கிறபடி செய்," என்று கொச்சுண்ணி அதிகாரம் செய்தான். வேறு வழியின்றி தன்னிடமுள்ள பணம் இருநூற்று ஐம்பது ரூபாயை வியாபாரி கொச்சுண்ணியிடம் தந்து விட்டான்.

கொச்சுண்ணி மீண்டும் தன் படகில் ஏறிச் சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்ததும் வியாபாரி நடந்ததைத் தன் மனைவியிடம் சொல்ல, அவள் மனமுடைந்து அழுதாள். "இப்போது பணத்துக்கு என்ன செய்வது? நமது வீட்டை விற்று விடலாம். அதில் கிடைக்கும் பணத்தில் மீண்டும் வியாபாரம் செய்யலாமா?" என்று மனைவி கேட்க, வியாபாரிக்கும் அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

ஆனால் வீட்டை விற்க முயற்சித்த வியாபாரிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அவன் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்பனையாகவில்லை. இவ்வாறு பலவிதமான சோதனைகளுக்கும் ஆளான வியாபாரியின் வீடுதேடி ஒருநாள் கொச்சுண்ணியே வந்து விட்டான். "வியாபாரியே, பயப்படாதே! உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன். உன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். உன்னிடமிருந்து பணத்தைக் கைப்பற்றிய அன்றே நீ ஓர் ஏழை வியாபாரிதான் என்று தெரிந்து விட்டது. அன்று எனக்குப் பணம் தேவையாயிருந்ததால் உன்னிடம்இருந்து பலவந்தமாகப் பணத்தை எடுத்துக் கொண்டேன். அதற்காக வருந்துகிறேன். எடுத்துக் கொள் உன் பணத்தை" என்று சொல்லிவிட்டு கொச்சுண்ணி சென்று விட்டான்.

அந்த பணப்பையில் அன்று கொச்சுண்ணி எடுத்துக் கொண்டதைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகப் பணம் இருந்தது. கொச்சுண்ணியின் இரக்க குணத்தை அறிந்து உணர்ச்சி வசப்பட்ட வியாபாரி, "கடவுளே கொச்சுண்ணியின் நல்ல மனதிற்காக அவனை நீண்ட காலம் வாழச் செய்யுங்கள்" என்று பிரார்த்தனை செய்தான்.

0 comments:

Post a Comment

Flag Counter