குதிரையின் சக்தி!

 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு முறை உயர் ரகக் குதிரையாக அவதரித்தார்.

அந்தக் குதிரை அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டதால் அது மிகவும் அழகானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. அனைவரும் அதனை பஞ்ச கல்யாணி என அழைத்தனர். அதற்குப் பூட்டப்பட்ட சேணமும் கடிவாளங்களும் தங்கத்தாலும்  நவ இரத்தினங்களாலும் ஆனவை.

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த குதிரை இருந்ததால் காசியின் மீது படை எடுத்து வர எந்த நாடும் துணியவில்லை. ஆனால் பல அரசர்கள் காசி மன்னன் மீது பொறாமை கொண்டார்கள். இந்தப் பொறாமை அவர்களது அறிவை மழுங்கச் செய்தது. அதனால் ஏழு சிற்றரசர்கள் ஒன்று கூடி காசியை தாக்குவது எனத் தீர்மானித்தார்கள். அவர்கள் ஒரு தூதனைக் காசி மன்னனிடம் அனுப்பி "மன்னா! நீ உனது நாட்டை மரியாதையாக எங்களிடம் ஒப்படைத்துவிடு. இல்லாவிட்டால் நீ போருக்குத் தயாராக இரு" எனச் சொல்லச் சொன்னார்கள்.

சிற்றரசர்களின் செய்தி கிடைத்ததும் காசி மன்னன் தன் சேனாதிபதி வீரவர்மனை அழைத்து "வீரவர்மா! இப்போது ஏழு சிற்றரசர்கள் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை அடக்கிப் புறமுதுகு காட்டி ஓடும்படிச் செய்ய வேண்டும்" என்றான். வீரவர்மனும் "அரசே! தங்கள் கட்டளைப்படியே நான் நடக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த போரை நடத்தத் தாங்கள் பஞ்ச கல்யாணி குதிரையைக் கொடுத்து உதவ வேண்டும். அது இருந்தால் இந்த ஏழு உலகங்களையுமே எளிதில் வென்று விடலாம்" என்றான்.

காசி மன்னனும் சேனாதிபதி வீரவர்மனின் வார்த்தைக்கு இணங்கி பஞ்சகல்யாணியை வீரவர்மனுக்குக் கொடுத்துப் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வரும் படி வாழ்த்துகள் கூறி வழி அனுப்பினான்.

 வீரவர்மனும் பஞ்ச கல்யாணியுடன் தன் படை களை நடத்தியவாறே போருக்குக் கிளம்பினான். கோட்டையிலிருந்து மின்னல் வேகத்தில் கிளம்பிய அவன் முதலில் தன் எதிரே வந்த முதலாவது சிற்றரசனைப் போரில் தோற்கடித்துச் சிறைப் பிடித்தான். அதற்குப் பின் இரண்டாவது சிற்றரசனையும் போரில் வென்று சிறைப் பிடித்தான். இப்படியே போர் புரிந்து ஐந்து சிற்றரசர்களைச் சிறைப் பிடித்து விட்டான். வீரவர்மனின் வெற்றிக்குக் காரணம் அவன் பஞ்ச கல்யாணியின் மீது அமர்ந்து போர் புரிந்ததுதான்.

அவன் ஆறாவது சிற்றரசனோடு போர் புரியும்போது பஞ்ச கல்யாணிக்குக் காயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் வெற்றி வீரவர்மனுக்கே கிட்டியது. ஆறாவது சிற்றரசனையும் அவன் சிறைப்படுத்தி விட்டான். இனி ஒரே ஒரு சிற்றரசனைத்தான் தோற்கடிக்க வேண்டும்.

அப்போது போரில் பஞ்ச கல்யாணிக்கு ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து ரத்தம் வருவதைக்  கண்ட வீரவர்மன் அதனை இனிப் போரில் பயன்படுத்துவது சரியல்ல என எண்ணினான். எனவே வேறொரு நல்ல குதிரையைத் தேர்ந்து எடுத்து அதன் மீது அமர்ந்து போர் புரிய வேண்டும் என்று தீர்மானித்துப் பஞ்ச கல்யாணிக்குப் பூட்டியிருந்த கடி வாளங்களையும் சேணத்தையும் கழற்றலானான்.

 அப்போது பஞ்ச கல்யாணியாக அவதரித்திருந்த போதிசர்வர் வீரவர்மனிடம் "மாவீரனே! வேறொரு குதிரையின் மீதா அமர்ந்து போர் புரியப் போகிறாய்? நீ என்னைப் பயன் படுத்தித்தான் இதுவரை ஆறு சிற்றரசர்களையும் வென்றாய். இப்போது என்னை விட்டு வேறொரு குதிரையின் மீது அமர்ந்து நீ போரில் தோற்று விட்டால் இது வரை நீ பட்டபாடெல்லாம் வீணாகி விடும். அது மட்டுமல்ல.

எதிரி உன்னைச் சிறைப் படுத்தி உன்னைக் கொன்றும் விடுவான். இதனால் நம் எசமானரான காசி மன்னருக்குத்தானே ஆபத்து? அவர் மிக எளிதில் எதிரிகளிடம் அகப்பட்டு விடுவாரே. அந்த ஏழாவது சிற்றரசனையும் தோற்கடிக்க வேண்டுமானால் நீ என் மீது அமர்ந்தே போர் புரிய வேண்டும்" என்றார். இதைக் கேட்ட வீரவர்மன் "உனக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டுஇருக்கிறதே என்று தான் நான் யோசிக்கிறேன்" என்றான்.

அதற்குப் பஞ்ச கல்யாணி "போரில் வீரர்களுக்குக் காயம் ஏற்படுவது இயல்பே. அதற்காக மனம் ஒடிந்து போர் புரியாது இருந்தால் தோல்விதானே ஏற்படும்! தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டு துணிச்சலுடன் எதிரியை எதிர்த்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். என் காயத்தைப் பற்றி நீ கவலைப்படாதே. என் காயத்திற்கு மருந்து போட்டுக் கட்டு. அது தானாகவே ஆறி விடும்" என்றது. வீரவர்மனும் பஞ்ச கல்யாணி கூறியது போலவே அதன் காலில் ஏற்பட்ட காயத்தைக் கழுவி மருந்து வைத்துக் கட்டினான்.

பிறகு அதனையே போர்களத்தில் பயன்படுத்தினான். பஞ்சகல்யாணியும் விரைந்து சென்ற வீரவர்மனுக்குத் தாக்குதலின்போது உறுதுணையாக நின்றது. அதனால் அவன் ஏழாவது சிற்றரசனையும் எளிதில் சிறைப்பிடித்து விட்டான். போரில் அவனுக்கே முழு வெற்றி கிடைத்தது.

வீரவர்மன் தான் சிறைப்பிடித்த ஏழு சிற்றரசர்களையும் இழுத்துக் கொண்டு போய் காசி மன்னனின் முன் நிறுத்தினான். அப்போது பஞ்சகல்யாணியாக இருந்த போதிசத்வரும் அவனோடு சென்றிருந்தார்.  அவர் காசி மன்னனிடம் "அரசே! இந்த ஏழு பேர்களும் தங்களைப் போல் அரசர்களே. இவர்களைத் துன்புறுத்துவது சரியல்ல. தங்களுக்குத் தோன்றும் ஏதாவது ஒரு நிபந்தனையை விதித்து அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி விடுதலை செய்யுங்கள். பகைவனுக்கும் அருள் புரியுங்கள். யாரையும் வெறுக்க வேண்டாம். இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் நல்லதுதான்" என்றார்.

அப்போது வீரர்கள் பஞ்சகல்யாணிக்குப் பூட்டி இருந்த கடிவாளங்களையும் சேணத்தையும் அவிழ்த்தார்கள். மறுநிமிடமே பஞ்ச கல்யாணி கீழே விழுந்து அமரத்துவம் அடைந்தது. அது பிறந்து செய்ய வேண்டியதைச் செய்து முடித்து விட்டது.

அந்த உயர்ரகக் குதிரைக்குக் காசி மன்னன் ஒரு உத்தமருக்குச் செய்வது போல  ஈமச்சடங்குகளைச் செய்தான். வீரவர்மனையும் தக்கபடி கௌரவித்தான். ஏழு சிற்றரசர்களையும் காசி மன்னன் விடுதலை செய்து தக்க மரியாதைகளுடன் அவர்களது நாட்டிற்கு அனுப்பியும் வைத்தான்.  அதன் பிறகு காசி மன்னன் போதிசர்வர் உபதேசித்துச் சென்றபடி நியாயம் தவறாமல் நேர்மையுடன் ஆட்சி புரிந்து தயை புரியும் மன்னன் எனப் பெயரும் பெற்றான்.

0 comments:

Post a Comment

Flag Counter