உயர்வு-தாழ்வு


பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் ஒரு சிங்கமாகப் பிறந்தார். அந்தச் சிங்கம் தன் மனைவியோடு ஒரு மலையின் குகையில் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் வேட்டையாடப் போன அந்த சிங்கம் ஒரு குளத்தருகே பல முயல்களும் மான்களும் இருப்பது கண்டு பலமாகக் கர்ஜித்தவாறே பாய்ந்தது.

சிங்கத்தின் கர்ஜனை கேட்டு முயல்களும் மான்களும் ஓடி விட்டன. ஆனால் வேகமாய்ப் பாய்ந்துவந்த சிங்கம் குளக்கரையில் உள்ள பெரிய பள்ளத்து சேற்றில் போய் விழுந்து சிக்கிக் கொண்டது. அதிலிருந்து அது எழுந்து வர முடியாமல் தத்தளித்தது. அது மேலே வரத் தன் கால்களை அழுத்திய போது கீழேதான் போயிற்று. தன்னை யாராவது காப்பாற்ற வருவார்களா என அது பார்க்கலாயிற்று. ஆனால் யாருமே வரவில்லை. ஒரு நாளல்ல இரண்டு நாள்களல்ல, இந்த நிலையில் அது ஏழு நாள்கள் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஒரு நரி அவ்வழியே வந்ததை அது பார்த்தது.

நரி சிங்கத்தைப் பார்த்து பயந்து சற்று தூரத்திலேயே நின்று விட்டது. சிங்கமோ தம்பி! பயப்படாதே. உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஒருவார காலமாக உணவின்றி இங்கே அகப்பட்டுத் தவிக்கிறேன். என்னைக் காப்பாற்று" என்றது.
நரியோ "ஐயோ! பசியாக இருக்கும் உங்களைக் காப்பாற்றினால்  முதலில் என்னையே கொன்று சாப்பிட்டு விடுவீர்களே. உங்களை எப்படி நம்புவது?" எனக் கேட்டது. சிங்கமும் "நீ என் உயிரைக் காத்தவன் என்ற நன்றி விசுவாசம் எனக்கு இராதா?


நீ மட்டும் இந்தச் சேற்றில்இருந்து வெளியே வர எனக்கு உதவினால் என் வாழ் நாள் முழுவதும்  உனக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன், என்னை நம்பு" என்றது.

 
நரியும் சிங்கம் கூறியதை நம்பி உலர்ந்த நீண்ட கட்டைகளை இழுத்து வந்து அந்தப் பள்ளத்தில் போட்டது. சிங்கமும் அவற்றின் மீது காலை வைத்து அந்தப் பள்ளத்திலிருந்து வெளியே வந்தது. அதன் பிறகு அந்த சிங்கமும் நரியும் சேர்ந்தே வேட்டையாடின. சிங்கம் கொன்ற மிருகத்தை இரண்டும் சமமாகப் பகிர்ந்து கொண்டன. பிறகு சிங்கம் "இனி நீ உன் மனைவியோடு என் குகைக்கே வந்து விடு. நாம் எல்லாரும் ஒன்றாக வாழலாம்" என்றது. நரியும் அதற்கு இணங்கித் தன் மனைவியை சிங்கத்தின் குகைக்கு அழைத்து வந்தது.

ஆண் சிங்கம் தன் நண்பனான நரியை அக்கரையுடன் கவனித்துக் கொண்டாலும் பெண் சிங்கம் மட்டும் நரியின் மனைவியைத் தாழ்வாகவே எண்ணி நடந்து கொண்டது. நரியின் மனைவியும் சிங்கம் உயர்ந்தது என்று தானே எண்ணிப் பணிந்து போய் நடந்து வந்ததால் இரு குடும்பத்தினிடையே எவ்விதச் சண்டையும் ஏற்படவில்லை.

சிறிது காலத்திற்குப் பின் சிங்கத்திற்குக் குட்டிகள் பிறந்தன. நரிக்கும் குட்டிகள் பிறந்தன. அந்தக்குட்டிகளும் ஒன்று சேர்ந்து விளையாடலாயின. அப்போது பெண் சிங்கத்திற்கு ஒரே எரிச்சலாக வந்தது. தன் குட்டிகள் நரிக்குட்டிகளோடு விளையாடுவது தன் அந்தஸ்திற்குக் குறைவு என எண்ணி அது பொறுமியது. ஆனால் சிங்கக்குட்டிகளும் நரிக்குட்டிகளும் எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் ஒன்றாக விளையாடி வரலாயின.

இதைக் காணச் சகியாத பெண் சிங்கம் தன் குட்டிகளிடம் "நாம் உயர்குலத்தவர். நரிக்குட்டிகள் தாழ் குலத்தில் பிறந்தவை. எனவே நீங்களெல்லாம் அவற்றோடு சமமாக பழகக் கூடாது" என்று சொல்லி வரலாயிற்று. தாய் இவ்விதம் அடிக்கடி கூறியதால் சிங்கக் குட்டிகளும் நரிக்குட்டிகளைத் தாழ்வாகவே கருதலாயின. அது விளையாட்டில் அடாவடி செய்து தாம் சொன்னதைத்தான் ஏற்க வேண்டும் எனச் சிங்கக் குட்டிகள் கூறி தாம் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என அறிவித்துப் பெருமைப் பட்டன.

ஒருநாள் பெண் நரி தன் கணவனிடம் தன் மனத்தை திடப்படுத்தி கொண்டு பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் நடந்து கொள்ளும் விதம் பற்றிக் கூறியது.
 
மறுநாள் வேட்டைக்குப் போன போது நரி சிங்கத்திடம் "நீங்கள் அரச குடும்பத்தவர். நாங்கள் சாதாரணக் குடிமக்கள். எனவே இனி நம் இரு குடும்பங்களும் சேர்ந்து வாழ்வது அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகையால் நான் என் குடும்பத்தவரை அழைத்துக் கொண்டு என் உறவினர்கள் இருக்கும் இடத்திற்கும் போய் விடுகிறேன்" என்றது.

சிங்கம் அது கேட்டுத் திடுக்கிட்டு நரி ஏன் இப்படிக் கூற வேண்டும் எனக் கேட்டது. நரியும் உள்ள நிலையை விளக்கிக் கூறியது. குகை திரும்பிய சிங்கம் அன்றிரவு தன் மனைவியிடம் "நீ ஏன் நரிக் குட்டிகளை இழிவு படுத்துகிறாய்?" என்று கேட்டது.

பெண் சிங்கமும் "ஆமாம். அப்படிச் செய்வதில் என்ன தவறு உள்ளது? தாழ் குலத்தில் பிறந்த அவை உயர் குலத்தில் பிறந்த நம் குட்டிகளுக்குச் சமமாக ஆகிவிட முடியுமா? நான் என் குட்டிகளை நரிக்குட்டிகளோடு சேரவிட மாட்டேன். ஆமாம்! உங்களுக்கு ஏன் இந்த நரிக்குடும்பத்திடம் இவ்வளவு பாசம்!" என்று கேட்டது. சிங்கமும் "ஓகோ! இதுவா விஷயம்! நான் ஒருமுறை சேற்றில் அழுந்தி ஒருவாரம் உணவும் நீரும் இல்லாமல் தவித்தேன். அப்போது இந்த நரி தன் மூளையை உபயோகித்து என்னை அந்தப் பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது.

அன்று மட்டும் இந்த நரி என்னைக் காப்பாற்றிஇராவிட்டால் நானும் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். இந்தக் குட்டிகளும் உனக்குப் பிறந்திருக்காது. உயிர் காத்தவரை உதறி தள்ளுவது மாபெரும் பாவம். நம்மை நாமே அவமதித்துக் கொள்வதாகும்" என்றது. அது கேட்டு பெண் சிங்கம் வெட்கித் தலை குனிந்தது. மறுநாளே அது பெண் நரியிடம் தன் நடத்தைக்கு மன்னிப்புக் கோரியது. அன்று முதல் அந்த இரு குடும்பங்களும் அன்னியோன்யமாக வாழ்ந்து வரலாயின. 


 

0 comments:

Post a Comment

Flag Counter