நம்பிக்கைத் துரோகி



பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது ஒரு ஊரில் பத்து கோடிகள் சேர்த்த பணக்காரன் இருந்தான். அவனுக்குக் கல்யாணமாகி வெகு நாள்களுக்குப் பின் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நாராயணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

வருமையே தெரியாமல் வளர்ந்த நாராயணனுக்கு நண்பர்களாக சில போக்கிரிகள் கிடைத்தனர். அதனால் அவனுக்குச் செலவு அதிகமாகியது. அவன் கோடீஸ்வரன் மகனானதால் பலர் கடனும் கொடுத்தார்கள்.
தன் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டு நாராயணனின் தந்தை இறந்து போனான். அப்போது நாராயணனுக்குக் கடன் கொடுத்தவர்கள் எல்லாம் ஒரே சமயத்தில் வந்து தம் கடனைத் தீர்க்குமாறு நேருக்கினார்கள். நாராயணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடன் தொல்லையால் வாழ்க்கை மீதே வெறுப்பு ஏற்பட்டது.

அதனால் தன் வீட்டிற்கு வந்த கடன்காரர்களிடம் எல்லாம் அவன் மறுநாள் கங்கைக்கரைக்கு வரச் சொன்னான். அங்கு ஓரிடத்தில் தகப்பனார் பணத்தை எல்லாம் புதைத்து வைத்திருப்பதாயும் அதனை எடுத்துக் கடனைத் தீர்ப்பதாயும் கூறி அனுப்பினான்.

மறுநாள் நாராணயன் கங்கைக் கரைக்குச் சென்றான். அவனுக்குக் கடன் கொடுத்தவர்களும் அங்கு வந்திருந்தார்கள். நாராயணன் நதிக் கரையில் புதைத்து வைத்துள்ள பணத்தைத் தேடுபவன் போல நடித்து யாரும் எதிர்பாராத சமயத்தில் கங்கை நதிக்குள் குதித்து விட்டான். நீரின் வேகம் அவனை வெகு தூரத்திற்கு இழுத்துப் போய் விட்டது.

அந்த சமயத்தில் போதிசத்வர் ஒரு மானாகப் பிறந்து மற்ற மான்களோடு சேராமல் தனியாக கங்கைக் கரையில் ஓரிடத்தில் வசித்து வந்தார். 
 
போதிசத்வரான மானின் உடல் தங்க நிறமானது. கொம்புகள் வெள்ளி போலும் கண்கள் வைரக் கற்கள் போலும் மின்னின. அந்த மானின் காதில் நள்ளிரவில் யாரோ நதியில் மிதந்தவாறே "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என்று கூச்சலிட்ட குரல் வந்து விழுந்தது. அது உடனே நதியில் குதித்து நீரில் மிதந்து வந்த மனிதனருகே சென்றது. அவனைத் தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு "பயப்படாதே! நீ உயிர் தப்புவாய்" எனக் கூறிக் கரைக்கு வந்து அவனைத் தன் இருப்பிடத்திற்குக் கொண்டு போயிற்று. அவன்தான் நாராயணன்.

அந்த மான் அவனைப் பல நாள்கள் வரைத் தன் இருப்பிடத்தில் இருக்கச் செய்து பழங்களும் உணவும் கொடுத்தது. பிறகு ஒரு நாள்  அது "அப்பனே! உன்னை உன் நாட்டிற்குப் போகும் வழியில் கொண்டு போய் விடுகிறேன். நீ எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால் யாரிடமும் இந்த இடத்தில் என்னைக் கண்டதாகச் சொல்லாதே" என்றது.

நாராயணனும் யாரிடமும் அது பற்றிக் கூறுவதில்லை என்று உறுதி மொழி அளித்தான். அதனை நம்பி தங்கமான் அவனைத் தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு ராஜ பாட்டையில் கொண்டு போய் விட்டது. நாராயணன் அப்பாதை வழியே நடந்து அவன் காசியை அடைந்தான்
 
அவன் காசியை அடைந்த சில நாள்களில் ஒரு அதிசயம் நிகழ்தது. காசி மன்னனின் மனைவி கனவில் ஒரு தங்கமானைப் பார்த்தாளாம். அது அவளுக்கு அறிவுரைகள் கூறியதாம். எனவே அவள் தன் கணவனான மன்னனிடம் "இந்த மாதிரி ஒரு தங்க மான் உலகில் எங்கோ இருப்பதால் தானே என்னால் அதைக் கனவில் காண முடிந்தது. எனவே அந்த மானைப் பிடித்துத் தாருங்கள்" எனக் கேட்டான்.

உடனே மன்னன் அதற்கான ஏற்பாட்டைச் செய்தான். ஒரு யானை மீது ஒரு குடத்தில் ஆயிரம் தங்க நாணயங்களைப் போட்டு நகரத் தெருக்களில் சுற்றி வரச் செய்தான். அதனோடு சென்றவர்கள் பறை அறைந்து "தங்கமானைப் பற்றிய தகவல் கொடுப்பவருக்கு இந்த யானை மீதுள்ள குடத்தில் உள்ள தங்க நாணயங்கள் பரிசாகக் கிடைக்கும்" என அறிவிக்கவும் மன்னன் ஏற்பாடு செய்தான். நாராயணன் அந்த அறிவிப்பைக் கேட்டதும் யானையோடு வந்தவர்களிடம் தனக்கு அந்த மானைப் பற்றிய விவரம் தெரியும் எனவே அவர்களும் அவனை மன்னனின் முன் கொண்டு போயினர். அவன் அந்த மான் இருக்கும் இடத்தை மன்னனுக்குக் காட்டுவதாகக் கூறினான்.

மறுநாள் மன்னன் சில வீரர்களோடு நாராயணனையும் அழைத்துக் கொண்டு கங்கைக் கரையை அடைந்தான். நாராயணனும் தங்கமான் இருந்த இடத்திற்குச் சற்று தூரம் முன்னே நின்று மான் உள்ள இடத்தைக் காட்டினான். மன்னனின் ஆட்கள் தாரை தப்பட்டைகளை முழக்கினார்கள். தங்கமானும் யாரோ அரசன் தன் பரிவாரங்களோடு வந்துஇருப்பது கண்டு அவனைப் பார்க்க வந்தது. அப்போது மன்னன் அதன் மீது அம்பு எய்யக் குறி வைத்தான். 

அப்போது அந்த மான் "மன்னனே! அம்பை எய்யாதே! அவசரப் படாதே. நான் இங்கே இருப்பது பற்றி யார் உன்னிடம் கூறியது?" என்று கேட்டது. மன்னனும் சற்று தூரத்தில் நின்ற நாராயணனைச் சுட்டிக் காட்டினான்.

அப்போது அந்த மான் "மன்னா! இவ்வுலகில் மனிதனைப் போல நன்றி விசுவாசம் இல்லாத பிராணி வேறெதுவும் இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுவதை இவன் மெய்ப்பித்து விட்டான். இவன் சாக இருக்கும் போது நான்  இவனைக் காப்பாற்றி சில நாள்கள் இங்கு தங்க வைத்து உணவும் அளித்தேன். இவன் இங்கிருந்து போகும் போது என் இருப்பிடம் பற்றி யாருக்கும் தகவல் கொடுப்பதில்லை என்று வாக்குறுதி அளித்தான். இப்போதோ பணத்தாசையால் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டான்" என்றது.
மன்னனும் அது கேட்டுக் கோபம் கொண்டு "இப்படி துரோகம் செய்தவன் உயிர் வாழக் கூடாது. அவனைக் கொல்கிறேன்" என்று கூறி நாராயணனைக் கொல்லக் குறி வைத்தான்.

அப்போது போதிசத்வரான  தங்க மான் "மன்னா! அவனைக் கொல்லாதே. அவன் இறப்பதால் என்ன பயன்! உயிரோடு இருந்தால் திருந்தி நல்வாழ்வு வாழ்வான். எனவே அவனுக்குப் பணத்தைக் கொடுத்து விடு" என்றது.
போதிசத்வரின் தயாள குணத்தையும், மன்னிக்கும் மனப்பான்மையையும் கண்டு காசி மன்னன் அவர் மகா புருஷர் என மதித்து அவரிடம் யோசனைகளைக் கேட்டு ஆட்சியை நடத்தி வந்தான். 


0 comments:

Post a Comment

Flag Counter