மன்னா! திருந்து!

 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது பாஞ்சால நாட்டின் தலை நகரான காம்பில்ய நகரில் பாஞ்சாலன் மன்னன் இருந்து வந்தான். அவன் போக விலாசத்தில் மூழ்கி ஆட்சியைக் கவனிக்காமல் இருந்தான்.இந்நிலையில் நாட்டில் திருட்டு பயம் அதிகரித்தது. மக்கள் பகலில் அரசாங்க வீரர்களால் துன்புறுத்தப்பட்டனர். இரவிலோ திருடர்களாலும் கொள்ளைக்காரர்களாலும் தாக்கப்பட்டனர். இதனால் மக்கள் காட்டில் மறைந்து வசிக்கலானார்கள்.
இச்சமயம் போதிசத்வர் அந்நகரின் வெளியே புங்கமரத்தின் கீழ் ஊர்க்காவல் தெய்வமாக இருந்தார். மன்னன் அம்மரத்தைப் பூசித்து வந்தான். தன்னை சிரத்தையுடன் வழிபடும் மன்னன் தன் அறிவில்லாத்தனத்தால் நாட்டில் குழப்பநிலை ஏற்படச் செய்து விட்டானே என வருந்தி அவனுக்கு நல்ல உபதேசம் செய்ய அவர் நிச்சயித்துக் கொண்டார்.

ஒருநாள் பாஞ்சால மன்னன் தூங்கும்போது அவனுடைய கனவில் தோன்றி "நீ ஆட்சியை சரிவர கவனிக்கவில்லை. அதனால் உன் நாடு பாழாகிறது. இப்படிப் பட்ட மன்னன் இவ்வுலகில் தனக்கு உள்ளதை எல்லாம் இழப்பதோடு மறு உலகில் நரக வேதனையை அனுபவிப்பான். இது தெரியுமா உனக்கு? இனியாவது ஆட்சியில் நீ கவனம் செலுத்து. நல்ல முறையில் ஆண்டு குழப்பத்தைப் போக்கி நாட்டை முன்னுக்குக் கொண்டு வா" என்று போதிசத்வர் கூறினார். மன்னன் மனம் விழித்துக் கொண்டது. மறுநாளே அவன் தன் நாட்டின் நிலையை நேரில் கண்டு கொள்ள தீர்மானித்தான். 

தன் அமைச்சர்களிடம் ஆட்சியைக் கவனிக்குமாறு கூறித் தன் புரோகிதரை கூட அழைத்துக் கொண்டு மாறுவேடம் பூண்டு நகரை விட்டுச் சென்றான்.
 
 நகருக்கு வெளியே ஒரு வீட்டின் முன் ஒரு கிழவனை கண்டான். அவன் தன் வீட்டைப் பூட்டி முட்களைப் போட்டு விட்டுத் தன் குடும்பத்தவருடன் காட்டிற்குப் போனவன் இரவில் தன் வீடு எப்படி இருக்கிறது எனக் காணத் திரும்பி வந்து வாசல் கதவைத் திறந்து கொண்டிருந்தான். அப்போது அவன் காலில் ஒரு முள் குத்தி விட்டது. அவன் உடனே கீழே விழுந்து " என் காலில் முள் குத்தியது போல இந்த பாஞ்சால மன்னன் மார்பில் அம்பு குத்தட்டும்" என்று கூறலானான்.

அது கேட்டு அரசாங்க புரோகிதர் அக்கிழவனை அணுகி "ஐயா! நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு முள் மீது காலை வைத்துக் குத்திக்  கொண்டால் அதற்காக மன்னனைத் திட்டுவதா?" என்று கேட்டார். கிழவனும் "மன்னன் சரியாக இல்லாததால் அவனது ஊழியர்கள் அக்கிரமங்கள் புரிகிறார்கள். இரவில் திருடர்களின் தொந்தரவையும் சகிக்க முடியாது போனதால்தானே நாங்கள் வீடுகளைப் பூட்டி சுற்றிலும் முட்களைப் போட வேண்டியதாயிற்று. அரசன் ஒழுங்காக ஆட்சி நடத்தினால் நாங்கள் இப்படிச் செய்ய வேண்டி இராதே" என்றான்.

அதைக் கேட்ட பின் மன்னனும் புரோகிதரும் இன்னொரு கிராமத்திற்குச் சென்றார்கள். அங்கு ஒரு பெண்மணியைக் கண்டனர். அவளுக்குக் கல்யாண வயதில் இரு பெண்கள் இருந்தனர். அவர்கள் சென்ற போது ஒரு மரத்துக் காய்களைப் பறிக்க அவள் மரத்தின் மீதேறிக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டாள். அவள் "இந்த அநியாயக்கார மன்னன் ஒழிய மாட்டானா! இவனது ஆட்சியில் என் பெண்களுக்கு கல்யாணம் ஆகும் பாக்கியம் கூடக் கிடைக்கவில்லையே" எனக் கூவினாள்.

அதைக் கேட்ட அரசாங்க புரோகிதர் "அடப் பைத்தியமே! நாட்டிலுள்ள ஒவ்வொரு கன்னிப்பெண்ணிற்கும் மன்னனால் விவாகம் செய்து வைக்க முடியுமா?" என்று கேட்டார். அவளும் "பகலில் அரசாங்க வீரர்களாலும் இரவில் திருடர்களாலும் எங்களுக்குத் தொந்தரவு ஏற்படும் போது எங்கள் பெண்களுக்கு எப்படி விவாகம் நடக்கும்?" என்று கேட்டாள். புரோகிதரும் மன்னனும் மறுமொழி பேசாமல் சென்றனர்.

சற்று தூரத்தில் ஒரு வயலில் ஒரு குடியானவன் உழுது கொண்டுஇருப்பதை அவர்கள் கண்டனர். உழும்போது ஏர் முனையில் எருது பட்டு அது கீழே விழுந்தது. உடனே அவன் "இந்நாட்டு மன்னன் மார்பில் ஈட்டி பாய்ந்து இந்த எருது விழுந்தது போல விழுந்து இறக்கக் கூடாதா?" என்று உரக்கக் கூறினான்.
 புரோகிதர் அவனிடம் போய் "உன் கவனக் குறைவால் எருதிற்கு அடிபட்டு விழுந்தது என்றால் மன்னனைத் திட்டுகிறாயே. இது சரியா?" என்று கேட்டார். அவனும் "ஏன் சரி இல்லை? மன்னனின் ஆட்சி சரியாக இல்லாவிட்டால் மக்களுக்கு வாழ்வு ஏது? பகலில் அரசாங்க வீரர்களின் தொந்தரவு. இரவில் திருடர் பயம். என் மனைவி எனக்காகச் சமைத்து எடுத்து வந்த உணவைக் கூடப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்களே" என்றான்.

மன்னனும் புரோகிதரும் அங்குஇருந்து தலைநகருக்குத் திரும்பலானார்கள். வழியில் ஒரு குட்டையில் உயிருடன் உள்ள தவளைகளைக் காகங்கள் கொத்தித் தின்பதை அவர்கள் பார்த்தார்கள். ஒரு தவளை கோபத்தோடு "இந்தக் காகங்கள் நாங்கள் உயிருடன் இருக்கும் போதே எங்கள் குடும்பத்தவரைக் கொத்தித் தின்பது போல இந்தப் பாஞ்சால மன்னனையும் அவனது குடும்பத்தவரையும் எதிரிகள் குத்திக் குதறிக் கொல்லட்டும்" என்றது.

அதைக் கேட்ட புரோகிதர் "அட முட்டாள் தவளையே! உங்களைக் கொல்லும் காகங்களைத் திட்டாமல் இந்நாட்டு மன்னனை திட்டுகிறாயே. இதுவா நியாயம்?" என்று கேட்டார். அதற்குத் தவளை "நீங்கள் மன்னனின் மனம் குளிர்ந்து இருக்க இப்படிக் கேட்கிறீர்கள். அரசாங்க புரோகிதர் இப்படிக் கேட்பதில் ஆச்சரியமே இல்லை. நாட்டில் காகங்களுக்குக் கூட உணவு கிடைக்காததால்தானே உயிரோடு உள்ள தவளைகளைக் கொத்தித் தின்கின்றன? இந்த நிலை நாட்டிற்கு யாரால் வந்தது? ஆட்சியை சரிவர கவனியாத அரசனால்தானே! இப்படிப் பட்ட மன்னன் இருந்தால் என்ன, இறந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்" என்றது.

அதைக் கேட்ட மன்னன் "என்னைத் தவளைகள் கூடத் திட்டும் அளவிற்கு நாட்டின் ஆட்சி சீர்குலைந்து விட்டதா? என்ன கேவலமான நிலைக்கு நான் வந்து விட்டேன்! இனி அதனைச் சரி செய்கிறேன்" எனக் கூறிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

 அது முதல் அவன் ஆட்சியில் கவனம் செலுத்தி அக்கிரமக்காரர்களை ஒடுக்கி, திருடர்களைப் பிடித்து தண்டித்து மக்கள் பயம்இல்லாமல் சுகமாய் வாழ வழி செய்தான். அதனால் மக்கள் அவனைப் புகழ்ந்து அவன் நீடூழி காலம் வாழ வாழ்த்தினார்கள்.

0 comments:

Post a Comment