
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது அவனிடம் பிங்களன் என்ற புரோகிதர் இருந்தார். அவர் நிறம் வெள்ளை. வழுக்கைத் தலை. பொக்கை வாய். அவரது சீடராக போதிசத்வர் இருந்தார். அவரோ இளைஞர்.
பிங்களனுக்கு ஒரு மைத்துனன் இருந்தான். அவனும் பிங்களனைப் போல வழுக்கைத் தலை பொக்கை வாயுடன் கிழவன் போல இருந்தான். பிங்களனைப் போல வேத சாஸ்திரங்களையும் கற்றவன். இவனும் பிங்களனும் தாம் நிறையக் கற்றதால் தாமே உயர்ந்தவர் என எண்ணி வந்தனர். அதனால் அவர்கள் ஒருவர் மீது மற்றவர் பொறாமைப்பட்டு வந்தார்கள். பிங்களன் தன் மைத்துனனை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என முயன்றார். ஆனால் முயற்சி பலிக்கவில்லை. முடிவில் அவர் தன் மைத்துனனை கொல்ல ஒரு திட்டம் போட்டார். அவர் மன்னனிடம் போய் "அரசே! தாங்களும் இந்த காசி நகரமும் உயர்ந்து விளங்கிய போதிலும் இந்த நகர் கோட்டையின் அமைப்பில் சில குறைகள் உள்ளன. அவற்றை உடனடியாக நீக்கினாலே நம் நகருக்கு நல்லது ஏற்படும்" என்றார்.
காசி மன்னனும் "இதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கவே பிங்களனும் "முதலில் கோட்டைத் தெற்கு வாசலை இடிக்க வேண்டும். பிறகு நல்ல கலவைக் கொண்டு புதிய வாசலை அமைத்து நகர தேவதைகளுக்குப் பலி கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நகரம் புனிதமாகும். சீரும் சிறப்புடன் இது விளங்கிப் புகழ்பெறும்" என்றார். மன்னனும் பிங்களனிடமே அந்த வேலையைச் செய்யுமாறு கூறினான். பிங்களனும் அதனை இடித்துப் புதிய கதவையும் நிலைகாலையும் தயாரித்து விட்டார்.
பிறகு அவர் மன்னனிடம் "அரசே! புதிய கதவும் நிலைகாலும் தயாராகி விட்டது. நிலைகால் வைக்க நாளைய தினம் நல்ல நாள். அதற்கு தேவையான உயிர் பலி கொடுக்க அனுமதி வேண்டும்" என்றார்.

பிங்களன் தன் மைத்துனனை ஒழிக்க அரசனின் அனுமதியும் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியோடு வீட்டிற்குப் போனார். தன் மனைவியிடம் அவர் "நாளையோடு உன் அண்ணனின் ஆயுள் முடியப் போகிறது. அவனை புதிய வாசலுக்கு நானே அழைத்துப் போய் பலியிடப் போகிறேன்" என மார்தட்டிக் கூறினார்.
"என் அண்ணனை பலி இடுவதா? இதற்கு மன்னர் எப்படி ஒப்புதல் அளித்தார்?" என்று அவள் கேட்டாள். பிங்களனும் "நான் இன்ன அடையாளமுள்ளவனை பலியிட வேண்டும் என அரசனிடம் கூறினேன். அவரும்
அப்படிப்பட்டவனைத் தேடிப் பிடித்து பலியிடச் சொல்லி விட்டார்.

பிங்களனின் மனைவி தன் கணவரிடம் எதுவும் பதில் கூறாமல் தன் அண்ணனைத் தனியாக அழைத்துப் போய் ரகசியமாக எல்லாம் சொல்லி அவனை விடிவதற்குள் ஊரை விட்டே ஓடிப்போய் விடும் படிக் கூறினாள். அவனும் தன் போல உருவில் அவ்வூரில் இருந்த மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாகக் காசியை விட்டு வெளியேறி எங்கோ போய் விட்டான்.
மறுநாள் பிங்களன் மன்னனிடம் போய "பலிக்கு ஏற்றவன் இன்ன இடத்தில் இருக்கிறான். அவனை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்" எனக் கூறித் தன் மைத்துனன் உள்ள இடத்தைக் கூறினார். மன்னனும் தன் வீரர்களை அனுப்பினான். வீரர்களும் போய் விசாரித்து விட்டு வந்து மன்னனிடம் "அரசே, அங்கிருந்தவர் நேற்றிரவே நாட்டை விட்டு அயல் நாட்டிற்குக் கிளம்பிப் போய் விட்டார்" என்று தெரிவித்தார்கள்.
அப்போது மன்னன் "அடடா! இப்போது என்ன செய்வது? குறித்த நல்ல முகூர்த்த வேளை நேருங்குகிறதே" என்றான். அப்போது மந்திரிகள் "இதில் என்ன தடை உள்ளது? நம் பிங்களனிடமே அவர் கூறிய லட்சணங்கள் எல்லாம் உள்ளன.
அவரையே பலி கொடுத்து விடலாம். நீங்கள் வேறு புரோகிதரையும் நியமித்துக் கொள்ளலாம். இவரது சீடர் இருக்கிறார். அவர் இந்தப் பதவிக்கு ஏற்றவர்" என்றனர். மன்னனும் உடனே பிங்களனின் சீடரான போதிசத்வரை அழைத்து "இன்று முதல் நீங்கள் தாம் அரசாங்க புரோகிதர். இந்த பிங்களனை அவர் குறித்துக் கொடுத்த இந்த நல்ல முகூர்த்த வேளையில் முறைப்படி பலி கொடுத்து இவரது எலும்புகளை எடுத்துப் புதைத்து அந்த இடத்தில் தெற்கு வாசலை நிர்மாணியுங்கள்" என்றான்.
அந்த சீடரும் தெற்கு வாசலுக்குப் போனார். அரசாங்க வீரர்கள் பிங்களனைப் பிடித்து நீராட்டிப் பலியிட மலர் மாலைகள் போட்டு அலங்கரித்தார்கள். அவரைக் கட்டி ஓரிடத்தில் வைத்து விட்டு தெற்கு வாசலில் அவர்கள் குழி தோண்டலானார்கள்.
சீடரான போதிசத்வர் பிங்களனைக் கொண்டு வரச் சொன்னார். குழியில் பிங்களனை இறக்கி பலியிட வேண்டும். குருவும் சீடரும் குழியில் இறங்கியதும் பிங்களன் போதிசத்வரிடம் "நான் ஒருவனை பலியிட நினைத்தேன். ஆனால் என் தலைவிதி! இப்போது நானே பலியாகிறேன்" என்று கூறிக் கண்ணீர் வடித்தார்.
போதிசத்வரும் "ஐயா, வேண்டுமென்றே பிறருக்குக் கெடுதல் செய்ய நினைப்பவன் தானே அக்கெடுதலை அனுபவிக்கிறான். நீங்கள் கவலைப்படாதீர்கள். இப்போது நல்ல முகூர்த்தம் இல்லை என்றும் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் உள்ளது என்றும் சொல்லி விடுகிறேன். பிறகு ஏதோ ஒரு வழி செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன்" என்றார்.
அதன்படியே போதிசத்வர் முகூர்த்த வேளையில் மாற்றம் செய்தார். பிங்களனை இரவோடு இரவாகத் தப்பி ஓடச் செய்து விட்டு அவர் இறந்து போன ஒரு ஆட்டின் எலும்புகளை எடுத்து வந்து வெட்டிய குழியில் போட்டுப் புதைத்து விடிவதற்கு முன் தெற்கு வாசலை கட்டியும் விட்டார்.

0 comments:
Post a Comment