வழி காட்டியவர்!

 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் மகத நாட்டு கிராமம் ஒன்றில் மாகதன் என்ற க்ஷத்திரியனாகப் பிறந்தார். அந்த கிராமத்தில் ஊரார் கூடிப் பேசப் பொது இடம் இருந்தது. அக்கிராமத்து ஐம்பது குடும்பத் தலைவர்களும் ஒன்று கூடித் தம் பிரச்னைகள் பற்றிப் பேசிக் கொள்வார்கள். நேர் வழியில் செல்லாமல் திருட்டு, கொலை முதலிய குற்றங்களைச் செய்வதோடு தம்மைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க கிராம அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து வந்தார்கள்.

அக்கூட்டத்தில் சேராமல் தனியாகத் தான் உட்கார மாகதன் இடம் ஒதுக்கிய போதெல்லாம் மற்றவர்கள் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர். அதனால் அந்தப் பொது இடத்தில் அல்லாமல் சிறிது தூரம் தள்ளி ஓரிடத்தை சுத்தம் செய்து சிறிய பந்தல் போட்டான். அங்கு நிழல் இருக்கவே எல்லாரும் அங்கு வரலாயினர். மாகதன் சொல்வதைக் கேட்கலாயினர். அவனைத் தம் தலைவனாகவும் ஏற்றனர்.


இவ்விதமாக மாகதன் அவர்களை நல்ல வழியில் திருப்பினான். தம் ஊரைச் சுத்தமாக வைத்து பல வசதிகளை ஊராரின் ஒத்துழைப்புடன் செய்தான். யாவரும் ஒன்று கூடிப் பேச ஒரு பெரிய அரங்கத்தையும் கட்டினான். அங்கு குடிக்க நீரும், படிக்க நூல்களும் வைத்தான். ஐம்பது குடும்பத்தவரும் திருந்தி நல்வாழ்க்கை மேற்கொண்டார். திருடுவது, கொள்ளையடிப்பது, கொலை புரிவது போன்றவற்றை அறவே விட்டு விட்டார்கள். எப்போதும் மண் வெட்டி, கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவற்றை அவர்கள் எடுத்து பாதையில் தடங்கலாக உள்ள மரங்களை வெட்டி நிலத்தைச் சமப்படுத்தி வரலானார்கள்.
 
 மாகதனின் அந்த செய்கைகளால் ஊரார் நல்லவர்களானது கண்டு மனம் புழுங்கியவன் அவ்வூரின் கிராம அதிகாரி முன்பு கொள்ளை கொலைகளைச் செய்து விட்டு அவனுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் இப்போது இல்லையே. அவனது வருமானம் நின்று போயிற்றே. என்ன செய்வான்?

அதனால் அவன் நேராக மன்னனிடம் போய் "அரசே! என் ஊரில் அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. இக்கலக்காரர்களின் தலைவன் மாகதன் என்பவன் ஆவான். அவனது பெரும்பாலான ஆட்கள் எந்நேரமும் கோடரியும் கடப்பாரையும் சம்மட்டியும் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். தாங்கள் தாம் இந்தக் கலகக்காரர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும்" எனப் பொய்ப் புகார் கொடுத்தான். 

அரசனும் அவன் கூறியதை நம்பி உடனே தன் வீரர்களிடம் "இவரோடு இவரது கிராமத்திற்குப் போய் அங்கு கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவை எடுத்துக் கொண்டு திரிபவர்களைப் பிடித்து இழுத்து வாருங்கள்" என்றான். வீரர்களும் அவ்வாறே அக்கிராமத்திற்குப் போய் கோடரி, கடப்பாரை சம்மட்டிகளுடனும் திரிந்த யாவரையும் பிடித்து வந்தனர். அவர்களில் மாகதனும் ஒருவன்.
அரசன் அவர்களை விசாரிக்காமலேயே தன் காவலர்களிடம் "இந்தத் துரோகிகளை யானையின் கால்களுக்கு அடியே போட்டு மிதிக்கச் செய்யுங்கள்" என்று கட்டளையிட்டான்.
 
 வீரர்களும் அவர்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் நிறுத்தினர். பட்டத்து யானையை அவர்கள் கொண்டு வந்ததும் அந்த யானை மாகதனைப் பார்த்ததும் சட்டென நின்றது. பிறகு பின் வாங்கி பயந்தது போல ஓடி விட்டது. வீரர்கள் வேறொரு யானையைக் கொண்டு வந்தும் அதுவும் அவ்வாறே செய்தது. இம்மாதிரி பல யானைகள் செய்யவே அந்த அதிசயத்தை அவர்கள் மன்னனிடம் போய்க் கூறினார்கள்.

"அவர்கள் யானைகள் தம்மிடம் வராதிருக்க ஏதாவது தாயத்து கட்டிக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களைச் சோதனை போட்டு தாயத்துகளை அகற்றி விட்டு யானைகளை அவர்களின் மீது ஏவுங்கள்" என்று மன்னன் கட்டளையிட்டான்.

ஆனால் வீரர்கள் சோதனை போட்டுப் பார்த்ததில் யாரிடமும் ஒரு தாயத்து கூட இருக்கவில்லை. அதைக் கூறவே மன்னன் "சரி. அவர்களை எல்லாம் என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்" என்றான். வீரர்களும் அவர்களை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

மன்னனும் "உங்களுக்கு யானைகளைக் கட்டுப் படுத்தும் மந்திரம் ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான். அதற்கு மாகதன் "அரசே எங்களுக்கு ஒருவித சக்தி வாய்ந்த மந்திரம் தெரியும். ஆனால் அது நீங்கள் நினைக்கும் சக்தியுள்ள மந்திரம் அல்ல அது" என்றார்.

"அதென்ன அதிசய மந்திரம்?" என்று மன்னன் கேட்கவே மாகதனும் "எங்களில் ஒருவர் கூட எந்தவொரு உயிருக்கும் தீங்கு இழைக்க மாட்டோம். பொய் பேச மாட்டோம். போதை தரும் பொருள்களைச் சாப்பிட மாட்டோம். ஜீவராசிகளிடம் அன்பு செலுத்துகிறோம். பிறருக்கு உதவுகிறோம். பாதைகளைச் செப்பனிட்டு குளங்கள் வெட்டி சத்திரங்கள் கட்டுகிறோம். இந்த வழிகளைக் கடைப் பிடிக்கும் மந்திரம் தான் எங்களுக்குத் தெரியும்" என்றார்.

இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியப்பட்டு "இப்படி நல்ல செயல்கள் புரியும் உங்களை அந்த கிராம அதிகாரி ஏன் கலகக்கார துரோகிகள் என்று குற்றம் சாட்டினான்?" என்று கேட்டான். மாகதனும் "நீங்கள் தீர விசாரிக்காமல் அவன் கூறியதை நம்பி விட்டீர்கள்" என்றார்.


"நீங்கள் கோடரியும் கடப்பாரையும் எடுத்துக் கொண்டு திரிந்து மற்றவர்களை பயமுறுத்துவதாக அவன் கூறினான். உங்களிடம் இவை எல்லாம் இருக்கவே நானும் நம்பி விட்டேன்" என்றான் மன்னன்.

மாகதனும் "இவை எல்லாம் நாங்கள் பொதுப்பணி புரிய எடுத்துச் செல்கிறோம். யாரையும் தாக்குவதற்காக அல்ல" என்றார். மன்னன் நன்கு விசாரணை நடத்திய போது மாகதனின் முயற்சியால் அந்த ஊரார் திருந்தியதும் கிராம அதிகாரிக்கு முன்பு கிடைத்து வந்தது போல லஞ்சம் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்தது. பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு பல ஆண்டுகளாக லஞ்சம் வாங்கி வந்ததற்காகவும் மன்னன் அவனது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ததோடு சிறையில் தள்ளினான். அதனை மாகதனிடமே கொடுத்து கிராமத்து நலனுக்காக உபயோகப் படுத்துமாறு கூறி "இனி மேல் நீங்கள் தாம் அந்த கிராமத்துத் தலைவர். நான் இனி எந்த அதிகாரியையும் நியமிக்கப் போவதில்லை" என்றான். அது மட்டுமல்ல தன் பட்டத்து யானையையே அவன் மாகதனுக்குக் கொடுத்து கௌரவித்தான்.

0 comments:

Post a Comment

Flag Counter