மரணம் தப்பாது!

 

பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் ஸ்ரீராய் என்ற சிற்றரசனின் முதலமைச்சராக இருந்து வந்தார். அப்போது அவரது பெயர் நாகார்ஜுனர். அவர் தயாள குணமும் இரக்கமும் உடையவர். யார் எதைக் கேட்டாலும் கொடுப்பவர். அவர் மருத்துவம், ரசாயனம் ஆகிய துறைகளிலும் நன்கு கற்றறிந்தவர். அவர் ஒரு புதிய மருந்தைக் கண்டு பிடித்தார். அதனால் அவருக்கும் அந்த மன்னனுக்கும் கிழத்தனம் வராதபடி செய்து விடலாம். இது பரம ரகசியமாக இருந்தது.

ஒருமுறை அவரது மகன் சோம தேவன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். அது கண்டு நாகார்ஜுனர் கண்ணீர் வடித்து ‘இனி உலகில் மரணமே ஏற்படக் கூடாது. மரணத்தைத் தடுக்க ஏதாவது ஒரு வழி செய்தாக வேண்டும்’ எனத் தீர்மானித்துக் கொண்டார்.

தான் தன் மன்னனுக்குக் கண்டு பிடித்துக் கொடுத்ததுபோல ஏழை எளியவர்களுக்கும் குறைந்த செலவில் ஏதாவது மூலிகைகளைக் கொண்டு அமிர்தம் தயாரிக்க முடியுமா என அவர் வழி காணலானார். அதற்காகப் பல பரிசோதனைகளை அவர் நடத்தினார். அநேகமாக அவர் நடத்திய சோதனை ஒன்று வெற்றி அடையும் நிலையை அடைந்து விட்டது. அந்த மருந்தில் ‘அமிர்த கல்பம்’ என்ற ஒரு மூலிகையைச் சேர்த்து விட்டால் போதும். மனிதனை மரணத்திலிருந்து தப்புவிக்கும் அமிர்தம் தயாராகி விடும்.
இந்த விஷயம் தேவலோகத்தில் இந்திரனுக்குத் தெரிந்தது. அவன் தேவ வைத்தியர்களான அசுவினிதேவர்களைக் கூப்பிட்டு "நீங்கள் பூ உலகிற்குப் போய் நாகார்ஜுனனின் முயற்சியைத் தகர்த்து விடுங்கள்" என்று கூறி அனுப்பினான்.
 
 அசுவினி தேவர்கள் பூவுலகிற்கு மாறு வேடத்தில் வந்து நாகார்ஜுனனைக் கண்டார்கள். அவர்கள் "அமைச்சர் திலகமே! எல்லாம் தெரிந்த உங்களுக்கு நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நீங்கள் மானிடர்களுக்கு மரணமே ஏற்படாதிருக்க அமிர்தகல்பம் என்ற மருந்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இது இயற்கைக்கே முரண் ஆனது. மானிடரை இறக்கவிடாமல் செய்தால் அதனால் எவ்வளவு புதுப்புதுப் பிரச்னைகள் தோன்றும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் மகன் இறந்ததால் உங்களுக்குத் துயரம் ஏற்பட்டதுபோல மற்றவர்களுக்கும் ஏற்படக் கூடாது என உணர்ச்சி வசப்பட்டு நினைத்து விட்டீர்கள். அது சரியல்ல" என்றார்கள்.

நாகார்ஜுனருக்கு அவர்கள் கூறியது சரியானதாகப் படவில்லை. அதனால் அது பற்றி யோசிப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி விட்டார். அப்போது ஸ்ரீராயின் மகன் ஜெயசேனனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. முகூர்த்த நாளன்று தர்பாரில் ஒரே மக்கள் கூட்டம் கூடி விட்டது.

அப்போது தேவேந்திரன் இளவரசனான ஜெயசேனனின் முன் ஒரு கிழப்பிராமணனின் உருவில் தோன்றி இரகசியமாக "இந்த நாகார்ஜுனர் அமிர்தகல்பம் என்ற மருந்தை உன் தந்தைக்குக் கொடுத்ததால் அவருக்குக் கிழட்டுத்தனமும் மரணமும் வராதபடி செய்து விட்டார். அதனால் நீ என்றென்றும் இளவரசனாகத் தான் இருக்கப் போகிறாய். அரசனாக ஆகவே முடியாது" என்று கூறினான்.

அது கேட்டு ஜெயசேனன் திடுக்கிட்டு யோசிக்கவே அந்த பிராமணனும் "கவலைப் படாதே. இதற்கு ஒரு வழி சொல்கிறேன் நாகார்ஜுனரிடம் யார் எதைக் கேட்டாலும் இல்லை எனாது அவர் அதனைக் கொடுத்து விடுவார். நீ நாளையே அவரிடம் போய் சற்றும் தயங்காமல் அவரது தலையை வெட்டிக் கொடுக்கும்படிக் கேள். பிறகு கவலையே இல்லை" என்றான்.
ஜெயசேனனும் முன் பின் யோசியாமல் நாடாள வேண்டும் என்ற ஆசையில் நாகார்ஜுனரின் வீட்டை அடைந்தான். அவன் அவரிடம் கூசாமல் அவரது தலை வேண்டும் எனக் கேட்கவே அவரும் "ஆகா தாராளமாக என் தலையை வெட்டி எடுத்துக் கொள்" என்றார். 

அவர் ஏற்கெனவே தான் தயாரித்த அமிர்தகல்பத்தைச் சாப்பிட்டிருந்ததால் அவரது உடல் பலமாக வைரம் போல இருந்தது. ஜெயசேனன் வாளால் அவரது தலையை வெட்ட முயன்ற போதெல்லாம் அவனது வாள்தான் கையிலிருந்து எழும்பிப் போய்க் கீழே விழுந்தது.

இதற்குள் மன்னனுக்கு விஷயம்  தெரிந்து விட்டது. அவன் ஓடோடி வந்து தன் மகனின் அடாத செயலைத் தடுத்து நிறுத்த முயன்றான். அப்போது நாகார்ஜுனர், "மன்னா! இளவரசரை இப்படிக் கேட்கும்படித் தூண்டிவிட்டவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். இதற்கு முன் நான் தொண்ணூற்றொன்பது பிறவிகளில் யார் கேட்டாலும் இல்லை எனாது என் தலையைக் கொடுத்திருக்கிறேன். இது நூறாவது முறை. இம்முறை வாக்குத் தவறினேன் என்ற பெயர் எனக்கு வேண்டாம். என் பெயரைக் காப்பதும் உன் கடமையாகும்" எனக் கூறி மன்னனை அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டார்.
பின்னர் அவர் தன்னிடமிருந்த ஒரு மூலிகையை எடுத்து அதனை ஜெயசேனனின் வாளின் மீது தடவி "இப்போது வெட்டு" என்றார். ஜெயசேனனும் வாளால் அவரது தலையை வெட்டவே அது அவரது உடலிலிருந்து வேறாகித் தனியே வெட்டுண்டு விழுந்தது. அது கண்டு மன்னன் தன் உயிரையும் போக்கிக் கொள்ள முயன்றான்.

அப்போது தரைமீது கிடந்த நாகார்ஜுனரின் தலை "மன்னா! கவலைப் படாதே நான் எவ்வளவு பிறவிகள் எடுத்தாலும் உன்னோடு தான் இருப்பேன்" எனக் கூறி உயிரை விட்டார்.


மன்னனோ வாழ்வில் விரக்தி அடைந்து தன் மகனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டுத் தவம் செய்யக் காட்டிற்குப் போய் விட்டான். இப்படியாக ஜெயசேனனுக்கு நாடு கிடைத்தது. இந்திரனின் முயற்சி பலித்தது.

 

0 comments:

Post a Comment