பொருந்திய ஜாதகங்கள்


கலிங்கப் பகுதியில் பல சிறு நாடுகள் இருந்தன. அவற்றில் தந்தபுரத்து மன்னன் காளிங்கன். அவனுடைய இரு புதல்வர் அரவிந்தனும் கோவிந்தனும் ஆவர். சிறுவர்களாக இருந்த போது அவர்களது ஜாதகங்களைப் பார்த்த சோதிடர்கள், "மூத்த மகன் அரவிந்தன் மன்னனாவான். ஆனால் அவனுக்குக் குழந்தையே பிறக்காது. இளையவன் சன்னியாசியாவான். ஆனால் அவனுக்குப் பிறக்கும் மகனுக்கு இராஜயோகம் உள்ளது" என்றார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பின் காளிங்கன் இறக்க அவன் மகன் அரவிந்தன் மன்னன் ஆனான். இளையவனான கோவிந்தன் பொது நிர்வாகத்தைக் கவனிக்கலானான். எப்படியும் தனக்குப் பிறக்கப் போகும் மகன்தானே அரவிந்தனுக்குப் பின் மன்னனாகப் போகிறான் என  எண்ணி, கோவிந்தன் தலை கால் தெரியாமல் துள்ளினான். தன் மனம் போன போக்கில் அதிகாரம் செலுத்தினான். இதனால் சகோதரர்களிடையே மனக் கசப்பு அதிகரித்தது. அரவிந்தன் ஒருமுறை மிகவும் கோபம் கொண்டு கோவிந்தனைக் கைது செய்யும்படிக் கட்டளை இட்டான்.

அப்போது அமைச்சராக போதிசத்வர் அரவிந்தனிடம் இருந்தார். அவர் இரகசியமாக கோவிந்தனைத் தன் மாளிகைக்கு வரவழைத்து அரவிந்தன் பிறப்பித்துள்ள கட்டளையைக் கூறி இரவோடு இரவாக தப்பி எங்காவது ஓடிப் போய் விடுமாறு அவனுக்கு யோசனை கூறினார். கோவிந்தனும் "அப்படியே போய் விடுகிறேன். என்றாவது யாராவது எனது இந்த மோதிரத்தையும் என் சால்வையையும் என் வாளையும் எடுத்து வந்து தங்களிடம் காட்டினால் அவனே என் மகன் என அடையாளம் கண்டு கொண்டு அவனுக்கு உதவ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்

 அவரும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளிக்கவே கோவிந்தனும் யாருக்கும் தெரியாமல் காட்டிற்குள் போய் விட்டான். அதே சமயம் மகத நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஒரே புதல்வி இருந்தாள். சோதிடர்கள் "இவள் சன்னியாசி போல வாழ்வாள். ஆனால் இவளுக்குப் பிறக்கும் மகன் அரசன் ஆவான்" எனக் கூறினர்.

இதை அறிந்த சிற்றரசர்கள் எல்லாருமே தாம் அரசகுமாரியை மணக்க விரும்புவதாக மகத மன்னனுக்குச் செய்தி அனுப்பினார்கள். அது ஒரு பெரும் பிரச்னையாக மகத மன்னனுக்கு ஆயிற்று. அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்து வைத்தாலும் மற்றவர்கள் ஒன்றுகூடி அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் அதனால் தன் மகளின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்றும் பயந்தான். அந்தச் சிக்கலிலிருந்து விடுபட அவன் தன் மனைவியோடும் மகளோடும் சன்னியாசி வேடத்தில் நாட்டிலிருந்து தப்பி காட்டிற்கு வந்து கோவிந்தன் இருந்த இடத்திற்கு அருகில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் மகத மன்னன் தன் மனைவியுடன் காய்கனி கிழங்குகள் கொண்டு வரக் கிளம்பிச் சென்றான். அப்போது அவன் மகள் குடிலில் தனியாக இருந்தாள். அப்போது அவள் பல மலர்களைத் தொடுத்து மாலை கட்டினாள். ஆசிரமத்திற்கு அருகே ஒரு நதி ஓடிக் கொண்டுஇருந்தது. அதன் கரையிலிருந்த மாமரத்தின் மீது ஏறி ராஜகுமாரி தான் கட்டிய மாலையைச் சுழற்றி எறிந்தாள்.

அந்த மாலை சற்று தூரத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோவிந்தனின் கழுத்தில் போய் விழுந்தது. அவன் அதனை எடுத்துப் பார்த்து ‘ஆகா! எவ்வளவு அழகான மாலை! இந்தக் காட்டில் இப்படி அழகான மாலை கட்டும் பெண் யார் இருக்கிறாள்? தேடிப் பார்க்கிறேன்’ எனத் தீர்மானித்துக் கொண்டான்.

குளித்து விட்டுக் கரையேறி அவன் தன் குடிலை நோக்கிச் செல்லும் போது எங்கிருந்தோ இனிய கானம் கேட்க, பிறகு அவன் அக்குரல்  வந்த திசையில் சென்று மாமரத்தை அடைந்து அதில் மகதநாட்டு அரசகுமாரி இருப்பதைக் கண்டான்.

அவளைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைந்து அவளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டு முடிவில் "நீ என்னை மணந்து கொள்கிறாயா?" என்று கேட்டான். அவளும் "நீங்களோ ரிஷி. நாங்களோ ஷத்திரியர்கள்" என்றாள்.

அப்போது கோவிந்தன் "நானும் க்ஷத்திரியனே" எனக் கூறித் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவளிடம் சொன்னான். பிறகு இருவரும் ஆசிரமத்திற்குப் போனார்கள். அப்போது மகத மன்னனும் அவன் மனைவியும் திரும்பி வந்திருந்தார்கள்.

கோவிந்தன் அவர்களிடம்  தன்னைப் பற்றி விவரமாகக் கூறித் தான் அவர்களது மகளை மணக்க விரும்புவதாகக் கூறினான். மகத மன்னனும் அவனே தன் மகளுக்கு ஏற்ற வரன் என எண்ணி உடனே சம்மதித்தான். கோவிந்தனுக்கும் மகத இளவரசிக்கும் விரைவிலேயே விவாகமும் நடைபெற்றது.

சிறிது காலத்திற்குப் பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜயன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்து வந்தார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பின் கோவிந்தன் சோதிடர்கள் கூறிய படி கணக்குப் போட்டுப் பார்த்து தன் அண்ணனின் ஆயுட்காலம் முடிவடைந்து போயிற்று எனக் கண்டான். கோவிந்தன் தன் மகன் விஜயனை அழைத்து அவனிடம் தன் மோதிரத்தையும் சால்வையையும் வாளையும் கொடுத்து "நீ இவற்றை எடுத்துப் போய் கிழ மந்திரியாரிடம் காட்டு. அவர் உனக்கு உதவுவார்" எனக் கூறி அனுப்பினான்.

விஜயனும் அந்தபுரத்திற்கு வந்து போதிசத்வரான கிழமந்திரியாரைக் கண்டான். அப்போது அரசனை இழந்த அந்நாடு குழப்பத்தில் இருந்தது. கிழ அமைச்சர் அரச சபையை உடனே கூட்டினார். அவர்களிடம் விஜயன் தான் சிம்மாசனத்திற்கு உரியவன் என்றும் அவன் கோவிந்தனின் மகன் என்றும் விவரமாக எடுத்துக் கூறினார். அதை எல்லாரும் கேட்டு ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். விஜயனை தம் மன்னனாக ஏற்றார்கள்.
விஜயனும் கிழ மந்திரியாரான போதிசத்வரின் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி நடந்து தன் வம்சத்தின் பெயரை நிலை நாட்டினான்.

0 comments:

Post a Comment

Flag Counter