ஆசைப்படாதே


 

காசியை ஆண்ட பிரம்மதத்தனுக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். இறக்கு முன் அவன் தன் நாட்டைத் தன் மூத்த மகனிடம் ஒப்படைத்து இளைய மகனை நாட்டின் சேனாதிபதியாக நியமித்தான். மன்னன் இறந்த பின் மூத்த மகனின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது அவன் "எனக்கு நாடாளும் ஆசை இல்லை. நாட்டை என் தம்பியே ஆளட்டும்" எனக் கூறி விட்டுப் போய் விட்டான்.

அவன் தலைநகரிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஒரு சிற்றரசனின் நாட்டிற்குப் போய் ஒரு பணக்காரனிடம் வேலையாளாக அமர்ந்து உழைத்துக் காலம் கழிக்கலானான். ஒரு முறை காசியிலிருந்து நிலங்களைப் பற்றி அறிய வந்த அதிகாரிகள் அந்தப் பணக்காரனின் ஊருக்கு வந்தார்கள். அங்கு தம் மன்னரின் மூத்த மகன் இருப்பது கண்டு மரியாதை செலுத்தி வணங்கி நின்றார்கள்.

அதைக் கண்ட பணக்காரன் அந்த அரச குமாரனிடம் "காசி மன்னரான உங்கள் தம்பிக்குக் கடிதம் எழுதி எனக்கு விதிக்கப் படும் வரியை குறைக்கும்படிச் சொல்லுங்கள்" என வேண்டினான். மூத்த ராஜகுமாரனும் அவ்வாறே தன் தம்பிக்குக் கடிதம் எழுதி அந்தப் பணக்காரன் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிப் பணத்தில் கணிசமான தொகையைக் குறைக்க வேண்டும் என குறிப்பிட்டான். காசி மன்னனும் வரியைக் குறைத்தான். இது கண்டு அந்த கிராமத்திலுள்ள வேறு சிலரும் தமக்கும் காசி மன்னனிடம் சலுகை பெற்றுத் தருமாறு மூத்த ராஜகுமாரனிடம் வேண்டவே அவர்களது வேண்டுதல்களையும் ஏற்குமாறு அவன் தன் தம்பிக்குக் கடிதம் எழுதினான். அவர்களுக்கும் அவர்கள் வேண்டியது கிடைத்தது.

 அதன் பின் அக்கிராமத்தவர் வரிப் பணத்தை அரசாங்க அதிகாரிகளிடம் கொடுக்காமல் மூத்த ராஜகுமாரனிடமே செலுத்தலாயினர். முதலில் அவர்கள் செலுத்திய பணத்தை ஏற்க மறுத்த அவன் பின்னர் அவற்றை ஏற்றான். அவன் மனம் மெதுவாக மாறலாயிற்று. மேலும் அவர்கள் தனக்கு செலுத்தும் வரி பணத்தைப் பார்த்ததும் அவன் மனத்தில் நாடாளும் ஆசை துளிர்க்க ஆரம்பித்தது. ஆனால் தானாக விட்டு வந்த நாட்டை மீண்டும் எப்படி அடைவது?
அதனால் அவன் ஒவ்வொரு சிற்றரசன் நாட்டையும் தன் வசப்படுத்திக் கொண்டு அதனைத் தன் தம்பிக்கும் அறிவித்துக் கொண்டே வந்தான். காசி மன்னனும் தன் அண்ணன் என்ற காரணத்தால் மூத்த ராஜகுமாரனின் செயலைக் கண்டிக்காமல் இருந்தான். முடிவில் மூத்த ராஜகுமாரனுக்கு காசியையும் பிடித்து விட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

அவன் உடனே நான்கு பெரிய மனிதர்களைத் தன் தம்பியிடம் அனுப்பி "நாட்டை ஒப்படைக்கப் போகிறாயா அல்லது போருக்குத் தயாராகப் போகிறாயா?" என்று தூது விடுத்தான். தம்பியோ "அண்ணா! உன்னோடு போரிட நான் தயாராக இல்லை. போர் எதற்கு? இந்த நாடு உன்னுடையதே. நீதானே எனக்குக் கொடுத்தாய்? இப்போது நீயே திரும்பப் பெற்றுக் கொள்" எனப் பதில் சொல்லி அனுப்பினான்.

சில நாள்களில் மூத்த ராஜகுமாரன் காசி மன்னனானான். அவனது தம்பி சேனாதிபதியாக இருந்தான். அப்போதும் நாடு பிடிக்கும் ஆசை அண்ணனை விடவில்லை. ஒவ்வொரு நாடாக வென்று தன் சாம்ராஜ்யத்தில் அவன் சேர்த்துக் கொண்டே போனான்.

தேவேந்திரனுக்கு இந்த விஷயம் தெரியவே அவன் மூத்த ராஜ குமாரனுக்கு புத்தி புகட்ட விரும்பி ஒரு வாலிபனின் உருவில் அதனது தர்பாருக்கு வந்தான். அவனிடம் தான் இரகசியமாக ஒரு விஷயம் கூற விரும்புவதாகச் சொல்லவே ராஜகுமாரனும் அந்த வாலிபனைத் தன் அந்தப்புரத்துள் அழைத்துச் சென்றான்.
அந்த வாலிபன் மூத்த ராஜ குமாரனிடம் "எனக்குத் தெரிந்து மூன்று நகரங்கள் உள்ளன. அவை பலம் பொருந்தியவை. அவற்றை வென்றால் நீங்கள் மாபெரும் சக்கரவர்த்தி என்று பெயர் பெறலாம்.

 நீங்கள் சிரமப்பட வேண்டாம். அவற்றை நானே வென்று உமக்குக் கொடுக்கிறேன்" என்றான். ‘ஆகா’ என அவன் மகிழ்ந்து போனபோது வாலிபனாக வந்த தேவேந்திரன் திடீரென மறைந்து விட்டான்.
மூத்த ராஜகுமாரன் அந்த வாலிபனை நாடெங்கும் தேடிக் கண்டு பிடித்ததுத் தன் முன் கொண்டு வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவன் கிடைக்கவே இல்லை. இந்தக் கவலையில் அவன் நோயுற்றுப் படுக்கையில் கிடந்தான். மூன்று நகரங்களை வென்று அடைய முடியவில்லையே என்ற ஏக்கமே அவன் மனத்தில் இருந்தது.

இச்சமயத்தில் எல்லா சாஸ்திரங்களையும் கற்று விட்டு போதிசத்வர் தட்சசீலத்திலிருந்து காசிக்கு வந்தார். அவர் மன்னன் நோயுற்றுக் கிடப்பது அறிந்து அதை தான் போக்குவதாகத் தகவல் கூறி அனுப்பினார்.
மூத்த ராஜகுமாரனும் அவரை வரவழைத்தான். அப்போது அவர் "உன் நோய் என்ன?" என்று கேட்டார் அவனும் தான் மூன்று நகரங்கள் பற்றி அறிந்ததையும் அதைப் பிடிக்க முடியாது தவிப்பதையும் கூறினான்.

போதிசத்வரும் "இந்த மனோவேதனையை உன்னால் அடக்கிக் கொள்ள முடியுமா?" என்று கேட்டார். அவனும் முடியாது எனவே போதிசத்வரும் "உலகமே இப்படித்தான். கண்ணில் படுவதெல்லாம் கிடைத்து விடாது. முடிவில் மானிட உடல் அழிந்து போய் விடும் அதனால் இந்த மூன்று நகரங்களை மட்டுமல்ல, மேலும் மேலும் நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிடு. ஆசையை அடக்கினாலே சுகப்படலாம். இல்லாவிட்டால் மன வேதனைப்பட்டு இம்மாதிரி நோயுற்று உடல் நலிந்து முடிவில் அழிவுதான் ஏற்படும்" என நல்லுரை கூறினார்.

போதிசத்வரின் உபதேசம் அவன் மனத்தில் பதிந்தது. அவன் மனம் திருந்தி வாழ்நாள் முழுவதும் போதிசத்வரின் யோசனைகளைக் கேட்டு ஆட்சி புரிந்து வந்தான்.

 

0 comments:

Post a Comment

Flag Counter