பட்டத்து யானை

 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது காசியிலிருந்து சற்று தூரத்தில் தச்சர்கள் வசிக்கும் ஒரு கிராமம் இருந்தது. அதில் ஐந்நூறு தச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் சிறு படகுகளில் சென்று ஒரு காட்டிற்குப் போய் மரங்களை வெட்டிப் படகுகளில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.
அந்தக் காட்டில் ஓரிடத்தில் ஒரு பெண் யானை வசித்து வந்தது. ஒரு நாள் அதன் காலில் ஒரு மரச் சிலாம்பு குத்தியது. அதனால் அதன் கால் வீங்கி விட்டது. அந்தச் சிலாம்பை அது தன் துதிக்கையால் எடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது காட்டில் தச்சர்கள் மரத்தை வெட்டும் சத்தம் அதன் காதில் விழுந்தது. அது நோண்டியவாறே அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தது.

யானை சிரமத்துடன் வருவதைக் கண்டு தச்சர்கள் அந்த யானைக்கு ஏதோ பிரச்சினை என்று அதனைக் கூர்ந்து பார்த்தார்கள். யானையும் அவர்களின் முன் வந்து படுத்துத் தன் காலை நீட்டியது. தச்சர்களும் தம் உளிகளைக் கொண்டு மெதுவாக யானையின் காலில் குத்திய சிலாம்பை எடுத்து விட்டு காயத்திற்குப் பச்சிலை தடவினார்கள்.

ஓரிரண்டு நாள்களில் யானையின் கால் வீக்கம் குறைந்து சரியாகி விட்டது. அது முதல் அந்த யானை தச்சர்களுக்கு உதவி செய்யலாயிற்று. மரங்களை இழுத்து வந்தும் பாதி அறுத்த கிளைகளை ஒடித்துப் போட்டும் அவர்களது வேலைப் பளுவைக் குறைத்தது. இப்படியாக யானைக்கும் தச்சர்களுக்குமிடையே நட்பு வளரலாயிற்று.

 சிறிது நாள்களுக்குப் பின் அந்தப் பெண் யானைக்கு ஒரு குட்டி யானை பிறந்தது. அது ஐராவது இனத்தைச் சார்ந்தது. அந்தக் குட்டி யானை பால்போல் வெள்ளை நிறத்தில் இருந்தது. பெண் யானை வயதாகி விட்டதால் எங்கும் சென்று இரை தேட முடியவில்லை.
 
 ஆதலால் தன் குட்டியைத் தச்சர்களிடம் ஒப்படைத்து விட்டு அது காட்டிற்குள் எங்கோ போய் விட்டது. அன்றிலிருந்து இந்த வெள்ளை யானை தச்சர்களுக்கு மிகவும் உதவி புரிந்து, அவர்கள் கொடுத்த உணவை உண்டு, அவர்களது குழந்தைகளைத் தன் முதுகின் மீது ஏற்றி விளையாட்டுக் காட்டி நதியில் நீராடித் தன் பொழுதை கழித்து வந்தது. தச்சர்களும் அந்த யானையைத் தன் குழந்தைகளுக்கு நிகராக அன்பு செலுத்தி வந்தனர்.

காட்டில் ஒரு வெள்ளை யானை இருப்பது தெரிந்து பிரம்மதத்தன் அதனைப் பிடிக்கத் தன் ஆட்களுடன் காட்டிற்கு வந்தான். ஆனால் தச்சர்கள், மன்னன் ஏதோ மாளிகை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்காக வந்துள்ளான் என்று நினைத்து மன்னனிடம், "மன்னா, நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் காட்டிற்குள் வந்துள்ளீர்கள்? நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிஇருந்தால் நாங்களே மரங்களை வெட்டி அரண்மனைக்கு அனுப்பி வைத்திருப்போமே?" என்றனர். இதைக் கேட்ட மன்னன்," நான் ஒன்றும் மரங்களை வெட்டுவதற்கு வரவில்லை. வெள்ளை யானையை அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்" என்றான். இதைக் கேட்டதும் தச்சர்கள் மிகவும் வேதனைப் பட்டனர். ஆனால்  யானை அவர்களிடம்இருப்பதை விட மன்னரிடம் இருந்தால் இன்னும் நலமாகவும் புகழோடும் இருக்கும் என்று எண்ணி தங்களது வேதனையை அடக்கிக் கொண்டு யானையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அரசனால் அந்த யானையை அழைத்துச் செல்ல இயலவில்லை. அப்போது ஒரு வீரன் அரசனிடம் "அரசே, இதனைத் தாங்கள் பிடித்துச் சென்றால் இந்தத் தச்சர்களுக்கு மாபெரும் இழப்பே ஏற்படும். அதனால் அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்கச் செய்ய இது விரும்புகிறது" என்றான்.

அரசனும் அதன் ஒவ்வொரு காலருகிலும் தந்தத்தின் அருகிலும் வாலின் பக்கத்திலும் ஒவ்வொரு லட்சம் வராகன்கள் வீதம் வைத்து தச்சர்களிடம் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு  கூறியும் குழந்தைகளுக்கும் மனைவிகளுக்கும் அரசன் பட்டாடைகளும் பரிசும் கொடுத்தான். அதன் பின்னரே அது அரசனோடு தலைநகருக்குச் சென்றது.
 
 அந்த யானையை மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதற்காகத் தனியாக ஒரு கொட்டகை போட்டார்கள். அது பட்டத்து யானை என அறிவிக்கப் பட்டது. அந்த யானை வந்தது முதல் காசி ராஜ்யம் செழுமையுடன் விளங்கியது. அது பெரிய நாடாகி பலம் பொருந்தியதாக இருந்தது. 

அதன் மீது படை எடுக்க மற்ற மன்னர்கள் அஞ்சினார்கள். சில நாள்களுக்குப் பின் அரசி கர்ப்பவதி ஆனாள். அவளது கர்ப்பத்தில் போதிசத்வர் குழந்தையாக இருந்தார். அந்தக் குழந்தை பிறக்க ஒரு வாரம் இருக்கையில் பிரம்மதத்தன் இறந்து விட்டான். இதே சமயம் கோசல மன்னன் காசி மீது படை எடுத்து வந்து விட்டான். என்ன செய்வதென காசியின் அமைச்சர்களுக்குத் தெரியவில்லை.
அவர்கள் கலந்து ஆலோசித்து முடிவில் கோசல மன்னனுக்குத் தூது அனுப்பினார்கள்.

"எங்கள் அரசியார் இன்னும் ஒரு வாரத்துள் குழந்தை பெறப்போகின்றார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தால் இந்த நாட்டை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் ஆண் குழந்தை பிறந்தால் எங்கள் நாடு உங்களோடு போர் புரியும்" இதுதான் அவர்கள் விடுத்த செய்தி.


கோசல மன்னனும் அது கேட்டு ஒரு வாரம் காத்திருந்தான். வார முடிவில் அரசியின் மகனாக போதிசத்வர் பிறந்தார். காசியின் படை கோசல மன்னனின் படையை எதிர்க்கலாயிற்று. போரில் கோசலப் படையின் கை ஓங்குவது கண்டு காசியின் அமைச்சர்கள் அரசியிடம் போய் "அம்மணி! நம் பட்டத்து யானை போர்களத்திற்குச் சென்றாலே நமக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் அரசர் இறந்ததிலிருந்து அந்த யானை உணவும் உறக்கமும் இல்லாது துக்கத்தில் கிடக்கிறது" என்றனர்.

அது கேட்டு அரசி தன் குழந்தைக்கு அரச ஆடைகளை அணிவித்து அதனை எடுத்துக் கொண்டு போய் அந்த வெள்ளை யானையின் காலடியில் வைத்து "கஜராஜனே! உன் எஜமானர் இறந்தாரே எனக் கவலைப்படாதே. இதோ அவரது மகனான உன் எஜமானன். இவரது எதிரி போர்க் களத்தில் வெற்றி முழக்கம் செய்யப் போகிறான். அவனை வென்று உன் எசமானனை காப்பாற்று! அப்படிச் செய்ய விருப்பம் இல்லா விட்டால் இப்போதே இக்குழந்தையை மிதித்துக் கொன்று விடு" எனக் கூறினாள்.

அதுவரை துயரத்தில் மூழ்கிக் கிடந்த யானை தன் துதிக்கையால் அக்குழந்தையைத் தடவியது. பிறகு அதனைத் தூக்கித் தன் முதுகின் மீது வைத்து விட்டுப் பிறகு அரசியிடம் கொடுத்து விட்டுப் போர்க்களத்திற்கு சென்றது.

அந்த யானையின் தாக்குதலை கோசலப் படையால் சமாளிக்க முடியவில்லை. அது பயந்து சிதறிப் போர் முனையிலிந்து ஓடி விட்டது. வெள்ளை யானை நேராகக் கோசல மன்னனின் முன் போய் அவனைத் தன் துதிக்கையால் சுற்றி எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்து குழந்தையாக உள்ள போதிசத்வரின் முன் போட்டது. கோசல மன்னனும் அக்குழந்தையிடமும் அரசியிடமும் மன்னிப்பைப் கோரினான். அமைச்சர்களும் அரசியும் அவனை மன்னித்து அவனது நாட்டிற்குப் போக அனுமதித்தார்கள்.

போதிசத்வர் ஏழு வயதாகும் வரை வெள்ளை யானையே காசியைக் காத்தது. அதன் பின் போதிசத்வர் காசி மன்னனாகி அந்த யானையையே தன் பட்டத்து யானையாக்கி நாட்டை ஆண்டு வந்தார்.

 

0 comments:

Post a Comment

Flag Counter