அரசாங்க வேலை


 பல ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீ நகரில் நித்யானந்த் என்ற பணக்கார வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தை ஏராளமான செல்வமும் நிலங்களும் விட்டுச் சென்றிருந்தார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன் மனைவி மக்களுடன் நித்யானந்த்  சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தான். வேறு வேலை எதுவும் செய்ய வேண்டிய தேவையே அவனுக்கு இல்லாமல் இருந்தது.

நித்யானந்தின் பக்கத்து வீட்டில் சோம்நாத் என்பவன் வசித்து வந்தான்.  அரசாங்கத்தில் வருவாய் துறையில் வேலை செய்து கொண்டு இருந்த  அவனுக்கு மற்றபடி விசேஷத்திறமைகள் எதுவும் இல்லை. ஆனாலும் சுற்று வட்டாரத்தில் அவனது அரசுப் பணியை ஒட்டி, அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்து வந்தது. இதைப் பற்றியெல்லாம் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருந்த நித்யானந்த் ஒரு நாள் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் வந்தது.

ஒருநாள் நித்யானந்தின் பிள்ளைக்கும் சோம்நாத்தின் பிள்ளைக்கும் விளையாட்டில் ஏதோ தகராறு ஏற்பட, அது பெரியதாக வளர்ந்து,  பிள்ளைகளின் தாயார்கள் இருவரும் சண்டையிட முற்பட்டனர்.
சோம்நாத்தின் மனைவி காந்தா உரத்த குரலில் நித்யானந்தின் மனைவி ராதாவை நோக்கி "என்னிடமா சண்டை போடுகிறாய்? உன்னையும் உங்கள் குடும்பத்தையும் என்ன செய்கிறேன் பார்! என் கணவர் அரசாங்க வேலையில் இருப்பவர். உன் புருஷனைப் போல் வெட்டிப் பொழுது போக்கும் உதாவாக்கரை இல்லை" என்று கத்தி விட்டுச் சென்றாள்.


 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் மனைவி காந்தாவின் தூண்டுதலால் சோம்நாத் நித்யானந்துக்கு பல விதங்களில் இடையூறுகள் செய்யத் தொடங்கினான். அவன் வரிப்பணம் ஒழுங்காக செலுத்தவில்லை என்று போலியாகக் குற்றம் சாட்டி அவனை அலுவலகங்களில் அங்கும் இங்கும் அலையச் செய்தான்.

இப்படி பலவாறு இன்னல்களுக்காளான நித்யானந்தை நோக்கி அவன் மனைவி, "நீங்கள் ஏதும் வேலை செய்யாமல் சும்மாயிருப்பதால்தான் நம்மை இப்படி அவமானப் படுத்துகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தில் ஏதாவது வேலைத் தேடிக் கொள்ளுங்கள்" என நச்சரிக்கத் தொடங்கினான்.

நித்யானந்தும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆளுநரைப் பலமுறை சந்தித்து தனக்கு ஏதாவது வேலை தரும்படி கெஞ்சத் தொடங்கினான். ஆனால் ஆளுநர் வேலை எதுவும் காலியில்லை என்று சொல்லிவிட்டார். நித்யானந்த் விடுவதாக இல்லை. "ஐயா, எனக்கு சம்பளம் முக்கியமில்லை. வேலை தான் முக்கியம். சம்பளம் இல்லாவிட்டாலும் சரி. ஏதாவது எனக்கு வேலை கொடுங்கள்" என்று காலில் விழுந்து கெஞ்ச ஆளுநரும் இரக்கப்பட்டு அவனுக்கு வேலை தரத் தீர்மானித்தார்.
ஆனால் அனுபவமில்லாதவனுக்கு என்ன வேலை தருவது? வெகுவாக யோசித்தபின் ஆளுநர் "சரி. நமது ஊரில் பாயும் ஆற்றில் எவ்வளவு அலைகள் உண்டாகின்றன என்று எண்ணுவாய். அதுவே நான் உனக்கு அளிக்கும் வேலை" என்றார்.

அரசாங்க வேலை உத்தரவைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்ட நித்யானந்த் தனக்கென ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு, ஆற்றில் படகுகள் ஒரே சமயத்தில் புறப்பட்டு, வந்து சேருமிடத்தில் இருந்து கொண்டு, கையில் நோட்டுப் புத்தகத்துடன் அலைகளை எண்ணத் தொடங்கினான். முதலில் நித்யானந்த் செய்யும் வேலையைப் பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தாலும், அவன் ஏதோ முக்கியமான நோக்கத்திற்காக இந்த அரசுப் பணியை செய்கிறான் என்று நம்பத் தொடங்கினர். இப்போது நித்யானந்தை பார்ப்பவர்கள் அரசாங்க ஊழியன் என்பதற்காக  அவனுக்கு மதிப்பும் மரியாதையும் மக்கள் அளிக்கத் தொடங்கினர்.

 நித்யானந்துக்கும் அவனுடைய குடும்பத்தினருக்கும் மக்கள் மத்தியில் மதிப்பு உண்டாயிற்று. நித்யானந்த் மெதுவாக தன் அதிகாரத்தைப் படகு ஓட்டுபவர்களிடம் காட்டத் தொடங்கினான்.

ஆற்றில் ஓடும் படகுகளை அதிகாரப் பூர்வமாக நிறுத்தி, தன் அலை எண்ணும் வேலையை செய்து முடித்த பிறகு செல்ல அனுமதித்தான். சில நேரங்களில் படகுகளை மணிக்கணக்கில் இவ்வாறு நிறுத்தியதும் உண்டு. தங்கள் வேலை தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டுமானால், நித்யானந்தை முறையாக கவனித்தால் நடக்கும் என எண்ணி, படகுக்காரர்கள் அவனுக்கு கையூட்டும் வழங்கத் தொடங்கினர்.
இவ்வாறு நாட்கள் செல்லும்போது, நித்யானந்த் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. சோம்நாத் ஒருநாள் தன் குடும்பத்தினருடன் தடபுடலாக ஆற்றங்கரைக்கு வந்து, படகில் ஏறி பக்கத்து ஊருக்கு ஒரு முக்கியமான திருமணத்திற்கு செல்லத் தொடங்கினான். சோம்நாத் படகு தன் அருகில் வந்தவுடன், நித்யானந்த் அவனது படகை நிறுத்தி விட்டான்.

தனது அரசுப் பணியைச் செய்ய வேண்டும் என்றும், அதுவரையில் படகு நகரக் கூடாது என்றும் கட்டளைப் பிறப்பித்துவிட்டு மிக  மெதுவாக தன் வேலைகளை செய்து வேண்டுமென்றே காலம் கடத்தினான். பல மணி நேரம் சென்றும், நித்யானந்த் படகை செல்லவிடவில்லை. சோம்நாத்துக்கோ முகூர்த்த நேரத்திற்குள் செல்ல வேண்டிய அவசரம் இருந்தது.

 ஆனால் அரசுப் பணி என்ற சாக்கில் மிகவும் தாமதம் செய்யும் நித்யானந்தை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் சோம்நாத்துக்கு வேறு வழியில்லாமல் தனது கௌரவத்தை விட்டு நித்யானந்தைக் கெஞ்ச வேண்டி இருந்தது. நித்யானந்தும் பழி வாங்கிய மகிழ்ச்சியில் சோம்நாத்தின் படகினைச் செல்ல ஒரு வழியாக அனுமதித்தான்.

அதன்பிறகு சோம்நாத் தன் இறுமாப்பினைத் துறந்து, நித்யானந்துடன் நட்புறவு கொண்டான். அவர்கள் இருவரது குடும்பங்களும் தங்கள் பிணக்குகளை மறந்து நல்லிணக்கத்துடன் பழக ஆரம்பித்தன.

0 comments:

Post a Comment