பேப்பர் தேவதைகள் செய்யலாம் வாங்க

வீடுகளை அலங்கரிக்க மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை அழகுபடுத்த சிறிய தேவதை பொம்மைகளை விலை கொடுத்து வாங்குவோம். நீங்களே எளிதாக பேப்பர் தேவதைகளை உருவாக்கி வீட்டை அலங்கரித்து உங்கள் நண்பர்களை அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்:

  1. பளபளக்கும் வண்ண பேப்பர்
  2. கத்தரிக் கோல்
  3. பென்சில், பஞ்சு, வெள்ளை பேப்பர்
  4. ஸ்டேப்ளர்.
  5. வட்டமான தட்டு அல்லது வளையம்,
  6. நாணயம்,
  7. பசை
   வட்டமான தட்டு அல்லது வளையத்தை வண்ண பேப்பரின் மீது வைத்து அதைச்  சுற்றிலும் பென்சிலால் வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.
வட்டத்தை கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது வட்டத்தை சரிபாதியாக மடித்து கத்தரித்திக் கொள்ளுங்கள்.

அரை வட்ட வண்ணக் காகிதத்தை கூம்பு போல மடித்துக் கொள்ளுங்கள் (மளிகைக் கடைகளில் பொட்டலம் கட்டுவது போல). அதன் முனைகளை ஸ்டேப்ளர் அல்லது பசை போட்டு ஒட்டிக் கொள்ளுங்கள்.
 
இப்போது வெள்ளை பேப்பரை எடுத்து பாதியாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த இடத்தின் விளிம்பில் நாணயத்தை வைத்து ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள். கத்தரியால அந்த வட்டத்தை அப்படியே கத்தரித்துக் கொள்ளுங்கள். இப்போது மடித்த காகிதத்தை விரித்தால், 8 எண்ணைப் போல அடுத்தடுத்த இரண்டு வட்டங்கள் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் இணைந்திருக்கும் வட்டங்களை பிரித்து விடாதீர்கள்.


பேப்பரின் கீழ்ப்புறம் உள்ள வட்டத்தில் சிரிக்கும் பொம்மை முகத்தை வரைந்து கொள்ளுங்கள். மேல் வட்டத்தில் பஞ்சை பசை போட்டு ஒட்டி, முடி போன்ற அமைப்பை ஏற்படுத்துங்கள்.
இப்போது முகத்தை எடுத்து, ஏற்கனவே செய்து வைத்திருந்த கூம்பின் முனைப் பகுதியில் பசை போட்டு ஒட்டுங்கள்.

   ஒரு வெள்ளை பேப்பரை சரிபாதியாக மடித்து, படத்தில் உள்ளது போல பென்சிலால்  இறகு வரைந் து கொள்ளுங்கள். பிறகு வரைந்த பகுதியை மட்டும் வெட்டி, எடுத்தால், இரண்டு இறகுகள் கிடைக்கும். இரண்டையும் தனித்தனியாக்கி, கூம்பின் இரண்டு பக்கங்களிலும் பசை கொண்டு சரியாக ஒட்டி விடுங்கள்.
 இப்போது உங்கள் தேவதை ரெடி! நண்பர்களிடம் காண்பித்து அவர்களை அசத்துங்கள்!!

0 comments:

Post a Comment