சாதுர்யமான சிறுமி

பீர்பாலின் மகள் ஐந்து வயதுப் பெண்; மிகவும் சாதுர்யமாகப் பேசுவாள். ஒரு நாள் தானும் அரண்மனைக்கு வருவேன் எனத் தந்தையிடம் அடம் பிடித்தாள்: பீர்பாலும் மறுக்க முடியாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.

அரசரைப் பார்ப்பது அதுவே முதல் முறை. ஆனாலும் சிறுமி மிகவும் மரியாதையோடு, அரசரை வணங்கிவிட்டு நின்று கொண்டிருந்தாள்.
அக்பர் பிரியத்தோடு சிறுமியை அருகில் அழைத்து, “குழந்தாய், உனக்கு ஏதேனும் சொல்லத் தெரியுமா?” என விசாரித்தார்.

“ஓ! எனக்கு நிறையவும் குறையவும் பேசத் தெரியுமே” என்று கூறினாள் சிறுமி.

“குறையவும் நிறையவும் என்றால் என்ன அர்த்தம்?” எனக் கேட்டார் அக்பர்.

“பெரியோர் முன் குறைவாகப் பேச வேண்டும்; சிறுவர் முன் நிறையப் பேச வேண்டும்’ என விளக்கம் கூறினாள் சிறுமி.

‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தந்தையைப் போல மகளும்’ என்று இருவரையும் புகழ்ந்து பாராட்டியதோடு சிறுமிக்குப் பரிசுகள் அளித்தார் அக்பர்.

0 comments:

Post a Comment

Flag Counter