உங்கள் பூமியில் நான் இல்லையே!

அக்பரும் பீர்பாலும் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பீர்பால் கூறிய கருத்து அக்பர் ஏற்கக்கூடியதாக இல்லாததோடு கோபத்தையும் தூண்டிவிட்டது. உடனே பீர்பாலைக் கடிந்து கொண்டு உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி கண்டிப்பான கட்டளையிட்டு விட்டார்.

மன்னரின் கட்டளையை மீற முடியுமா? பீர்பால் சீனா தேசத்துக்குச் சென்றார். அங்கேயிருந்து சில மணல் மூட்டைகளைக் கொண்டு பழையபடி தம் நாட்டுக்கு திரும்பினார்.

வீட்டின் தளம் முழுவதிலும் சீனா தேசத்து மணலைப் பரப்பினார். தம்முடைய குதிரை வண்டியிலும் அந்த மணலைப் பரப்பி வைத்தார். இதன் காரணம் யாருக்குமே புரியவில்லை.
நாட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் நாட்டிலே நடமாடுவதைப் பார்த்துப் பலர் வியப்படைந்தனர்.

ஒரு நாள் மணல் பரப்பிய தம்முடைய குதிரை வண்டியில் அமர்ந்து பீர்பால் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழியில் அக்பர் அவரைப் பார்த்து விட்டார். அவரை அருகில் அழைத்து,
“நாட்டை விட்டு வெளியேறும்படி நான் உத்தரவு போட்டிருக்கையில், என் உத்தரவை மீறி இப்பொழுது இங்கேயே இருக்கிறீரே; என் கட்டளைக்கு என்ன மதிப்பு” என்று கேட்டார்.

பெருமை மிக்க மன்னர் பெருமானே, உங்களிடமிருந்து வெளியேற்ற உத்தரவு எனக்குக் கிடைத்தவுடன் நான் சீனா தேசம் சென்று அங்கிருந்து மணல் கொண்டு வந்து என்வீடு முழுதும் பரப்பிவிட்டு அதன் மீதே நடமாடுகிறேன்.

மேலும், இப்பொழுது பாருங்கள்! என்னுடைய குதிரை வண்டியிலும்கூட சீனா தேசத்து மணலையே பரப்பி அதிலே அமர்ந்து செல்லுகிறேன். வெளியேற்ற உத்தரவு கிடைத்த நாளிலிருந்து மன்னர் பெருமான் பூமியை விட்டு விலகி அயல்நாட்டு மண்ணிலேதான் கால் வைத்து வாழ்ந்து வருகிறேன்” என்று பதில் அளித்தார் பீர்பால்.

பீர்பாலின் அறிவுத்திறனைப் பாராட்டி, அவருக்கு மன்னிப்பு அளித்து, அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார் மன்னர்.

0 comments:

Post a Comment

Flag Counter