சுயநலத்திலும் பரோபகாரம்தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, இந்த பயங்கரமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் உன் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் எதிர் பார்த்த பலன் ஏன் கிடைக்க வில்லை என்று யோசித்துப் பார்த்தாயா? உன்னுடைய முயற்சிகளைப் பாராட்டினாலும் உன்னுடைய கண் மூடித்தனமான முயற்சிகளைக் கண்டு உன் மீது பரிதாபம் தான் உண்டாகிறது. சிலசமயம் நீ இவ்வளவு பாடுபடுவது பரோபகார சிந்தையினாலா அல்லது உனது சுயநலத்திற்காகவா என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. சில சமயங்களில் சுயநலத்திற்கும் பரோபகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது கூட கடினம். இதை விளக்க உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்"என்றது.

கோண்டுபுரம் என்ற கிராமத்தில் புருஷோத்தமன் என்ற மனிதருக்கு சேகர்,கமல் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். சேகர் மற்றவர்களுக்கு உதவும் தன்மை உள்ளவன். ஆனால் கமல் ஒரு சுயநலவாதி. எப்போது முதலில் தன்னைப் பற்றியே நினைப்பவன். தனது இளைய மகனின் போக்கினை மாற்ற், புருஷோத்தமன் அவனிடம் "கமல்!நீ வாழ்க்கையில் சுகமாக வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டால் காட்டிலுள்ள மலைக்குகையில் வசிக்கும் ஆனந்தர் என்ற ஒரு சன்னியாசியை சந்திப்பாய். இதனால் உனக்கு நன்மை உண்டாகும்" என்றார். இதைச் சொல்லி முடித்ததும், அவர் உயிர் பிரிந்தது.


தன்னை ஒரு சன்னியாசியிடம் அனுப்பிவிட்டு, தனது சொத்து முழுதும் சேகருக்குக் கொடுக்க எண்ணுகிறாரோ என்று கூட அவனுக்கு சந்தேகம் உண்டாயிற்று. ஆனால் பின்னர்தான் தன் தந்தையிடம் நல்ல குணங்களைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை எனத் தெரிந்தது.


சேகர் தன் தம்பியிடம், "நீ என்னுடன் சேர்ந்து இருந்துவிடு. உன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறேன்" என்றான். சரிதான், அண்ணன் தான் தன் கூடவே இருக்கச் சொல்லி விட்டாரே, இனி நமக்கு கவலை இல்லை என்று கமல் அண்ணனின் அரவணைப்பில் நிம்மதியாக உண்டு உறங்கிக் காலம் கழிக்கலானான். 


இதைக் கண்ட கிராமத்து மக்கள் கமலின் பொறுப்பற்ற செயலை இகழ்ந்து பேசலாயினர். இதனால் கமலுக்கு கோபம் உண்டாயிற்று.
கமல் சேகரிடம், "நீ சொன்னதால் தான், நான் உன்னுடன் தங்கி உள்ளேன். ஆனால் மற்றவர்கள் என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசுகின்றனர் பார்த்தாயா?" என்றான். சேகர் "தம்பி! நீ பிறருக்கு உபகாரமாக நடந்து கொண்டால் யாரும் உன்னை அவ்வாறு கேவலமாகப் பேசமாட்டார்கள். மற்றவர்கள் உன்னை விரும்ப வேண்டுமெனில் நீ அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவி செய்" என்றான்.


"ஆமாம் மற்றவர்களுக்கு உதவி செய்து உனக்கும் அப்பாவுக்கும் பெரிதாக என்ன கிடைத்தது? எனக்கு நிறையப் பணம் சம்பாதிக்க ஆசை. அதற்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்" என்றான்.
"பணம் சம்பாதிக்க வேண்டுமெனில், வியாபாரத்தில் இறங்க வேண்டும். இல்லையேல், ஏதாவது ஒரு துறையில் திறமை இருக்க வேண்டும். 


ஆகவே உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அவ்வாறு செய்" என்றான் சேகர்.

யோசித்துப் பார்த்து இறுதியில் தன் தந்தை சொன்ன அந்த சன்னியாசியைப் போய்ப் பார்க்க முடிவு செய்தான் கமல். அவ்வாறு அந்த மலைக்குகையைச் சென்று அடைந்த போது தாடியும் மீசையுமாயிருந்த சன்னியாசியைப் பார்த்தான். அவரை வணங்கி விட்டு "சுவாமி என் தந்தை புருஷோத்தமன், அவர் இறக்கும்தருவாயில் உங்களை சந்திக்குமாறு சொன்னார். எனக்கு விரைவில் பணம் சம்பாதிக்க ஏதாவது வழி சொல்லிக் கொடுங்கள்" என்றான். அந்த சன்னியாசி அவனை உற்று நோக்கிவிட்டு, "என்னால் உனக்கு உத்வி செய்ய முடியும். ஆனால் நீயும் நானும் சில இன்னல்களை அனுபவிக்க வேண்டிவரும். அதை விளக்குகிறேன்" என்றார். தொடர்ந்து அவர் தன்னைப் பற்றிய முழு விவரமும் கமலுக்கு அளித்தர்.


தன் பெயர் ஆனந்தன் என்றும், புருஷோத்தமனும் தானும் நண்பர்கள் என்றும் தெரிவித்தார். பிறருக்கு உதவி செய்வதை தனது லட்சியமாகக்                             கொண்டிருந்தார் புர்ஷோத்தமன். ஆனால் ஆனந்தன் சுயநலவாதியாக இருந்தார். ஒருமுறை அவர்கள் இரு வரும் சேர்ந்து ஓரிடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது பாதையில் ஒரு சன்னியாசி காழே விழுந்து கிடக்கக் கண்டனர். அவரது காலில் பாம்பு கடித்ததற்கு அடையாளமாக சிறு காயம் இருந்தது. புருஷோத்தமன்
அவரது காயத்திற்குப் பச்சிலைச் சாறு பிழிந்து கட்டுப் போட்டு முதலுதவி செய்தவுடன் அந்த  சன்னியாசி எழுந்து அமர்ந்து புர்ஷோத்தமனை நோக்கி "எனக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி. இதற்குப் பிரதியாக என்னிடம் உள்ள ஒரு சக்திவாய்ந்த தாயத்தை உனக்குத் தருகிறேன். அதை வைத்துக் கொண்டால் நீ நினைத்த தெல்லாம் நடக்கும். செல்வம் உன்னைத் தேடி வந்தடையும்" என்றார்.


புர்ஷோத்தமன் அடக்கத்துடன், "சுவாமி, செல்வத்தினால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். நீங்கள் தாயத்தை வேறு யாருக்காவது கொடுங்கள்" என்றார். அதற்கு அந்த சன்னியாசி "தம்பி! இந்த தாயத்து உனக்குத்தான் அளிப்பேன். ஆனால் இது வேண்டாம் என்றால் நீயே யாராவது நல்ல மனிதனுக்கு இதைக் கொடுத்துவிடு. கெட்டவர்களுக்குக் கொடுத்தால் விபரீதம் விளையும்," என்றார். இத்தனை நேரம் நடக்கும் சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தனுக்கு அந்த தாயத்தை தான் அடைய வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. அவர் சன்னியாசியிடம் "விபரீதம் என்றீர்களே, அது என்ன?" என்று கேட்க, சன்னியாசி "முதலில் இதை நீண்ட நாட்கள் தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடது. 


தவிர இதைசுயநலத்திற்காக மட்டுமே பயன் படுத்துபவன், தான் விரும்பிய பொருட்களை எல்லாம் முதலில் பெற்றாலும் நாளடைவில் மனதில் உற்சாகம் இழந்து விரக்தி அடைந்து விடுவான். வாழ்க்கையைத் துறந்து ஒரு சன்னியாசி ஆகி விடுவான். ஆனால் மோட்சமும் கிடைக்காது. அதை வேறு யாருக்காவது கொடுத்து விட்டாலும் அது மீண்டும் அவனையே வந்து அடையும். இதைமுதன் முதலில் அவனுக்குத் தந்தவர்களுக்கும் மோட்சம் கிடைக்காது" என்றார்.

அனால் ஆனந்தனின் மனதைப் புரிந்து கொண்ட புர்ஷோத்தமன் "நண்பா, நீ இதை விரும்புகிறாய் எஅனத் தோன்றுகிறது. இந்த தாயத்தை நீயே எடுத்துக் கொள்" என்று கூறி ஆனந்தனுக்கேக் கொடுத்து விட்டார். அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பெற்ற்க் கொண்டார். ஆனந்தன் தான் விரும்பிய பொருட்களெல்லாம் தாயத்தின் உதவியால் பெற்றுக் கொண்டார். ஆனால் அதையெல்லாம் தனக்காகவே சுயநலத்துடன் பயன்படுத்திக் கொண்டார். ஓர் ஆண்டுக்குள் தான் விரும்பியதெல்லாம் பெற்றபின் ஆனந்தன் அந்த தாயத்தை வேறு யாருக்கோ அளித்துவிட்டார். ஆனால் அவருக்கு வாழ்க்கையில் உற்சாகம் சிறுது சிறிதாகக் குன்றியது. அந்த தாயத்து மீண்டும் மீண்டும் அவரிடம் திரும்பி வந்தது. ஆனால் அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு சன்னியாசி ஆகிவிட்டார்.


அவர்து நண்பர் புர்ஷோத்தமன் ஆனந்தன் நிலை கண்டு வருந்தினார். "இந்த தாயத்தை உனக்கு அளித்து உன் வாழ்க்கையை கெடுத்ததே நான்தான்! இதற்குப் பரிகாரமாக, உன்னிட மிருந்து கூடிய சீக்கிரம் தாய்த்தை நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றவர் திடீரென இறந்து விட்டார்.

மேற்கண்ட சம்பவங்களைக் கூறி முடித்த ஆனந்தர், "கமல் எனக்கும் இறந்து போன உன் தந்தைக்கும் மோட்சம் கிடைக்காது. இதை நீ  பெற்றுக் கொண்டு, வேண்டியவற்றைப் பெறுவாய்.ஆனால் என்னைப் போல் சுயநலக்காரனாக இருந்தால், என்னைப் போல துன்பம் அனுபவிப்பாய்" என்று கூறி அந்த தாயத்தினை கமலுக்குக் கொடுத்தார். "என் தந்தையின் நண்பரே மிக்க நன்றி" என்று கூறி தாயத்தினைப் பெற்றுக் கொண்ட கமல், "இதைப் பெற்றுக் கொள்வதன் மூலம், என் தந்தைக்கும் உங்களுக்கும் மோட்சம் கிடைக்குமெனின்ல் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் எதுவுமில்லை. நான் சுயநலக்காரன்தான். அது தெரிந்து தான் என் தந்தை என்னை உங்களிடம் இந்த தாயத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்பினார். நான் இந்த தாயத்தினை வைத்துக் கொள்வதால் எனக்கு நன்மைகளும் ஏற்படலாம் தீமைகளும் ஏற்படலாம். ஆயினும் என்னுடைய சுயநலமும் தங்களுக்காகப் பயன்படும் எனில் அது ஒரு விதத்தில் ப்ரொபகாரமே ஆகிறது வருகிறேன்," என்று கூறி தாயத்துடன் சென்றான்.


தாயத்து கமலிடம் வந்ததிலிருந்து, அவன் விரும்பிய பொருட்கள் எல்லாம் கிடைக்கத் தொடங்கின. ஆனால் ஆனந்தருடைய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து கமலி மனம் சற்று மாறத் தொடங்கியது. தாயத்தின் மகிமையினால் தனக்குக் கிடைத்தப் பொருட்களை மற்றவர்களுக்கும் வழங்கத் தொடங்கினான்.


இவ்வாறாக முழு சுயநலவாதியாக இருந்த கமலின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இவ்வாறு ஓர் ஆண்டு கழிந்தது.
கமல் வசதியுடன் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் சன்னியாசி ஆனந்தன் அவனைத் தேடி வந்தார். அவனிடம் தாயத்தினைக் கேட்டார். கமலும் உடனே அந்த தாயத்தினை அவரிடம் கொடுத்து விட்டான். "கமல் உன் தந்தைக்கு மோட்சம் கிடைத்து விட்டது. எனக்கும் உன்னுடைய பரோபகாரச் செயல்களால் மோட்சம் கிடைத்டுவிடும். இனி உனக்கு இந்த தாயத்து தேவையில்லை. ஏனெனின்ல் நீ இதை அதிக நாள் வைத்திருக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு, அந்த தாயத்தைக் கண்காணாமல் எங்கோதூக்கி எறிந்து விட்டார்.


இக்கதையைக் கூறி முடித்த பின் வேதாளம், "விக்கிரமா? ஒரு விதத்தில் கமலுடைய ச்யநலம் பரோபகாரத்துக்கு உதவியது. அப்படியானால் சுயநலமும் ஒரு விதத்தில் நன்மை தருவதுதானா? எந்த தாயத்து ஆனந்தனை வாழ்க்கையில் விரக்தி அடையச் செய்ததே, அதே தாயத்து கமலுக்கு எந்த தீமையும் விளைவிக்கவில்லை. இது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்ரது.


அதறு விக்கிரமன் "சுயநலம் நல்லதல்ல. ஆனால் சுயநலமாக இருந்தும் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல், பலரும் பயன் அடையும்படி இருந்தால், தவறு இல்லை. கமல் சுயநலவாதிதான் ஆனால் கமலுடைய தந்தையின் இயல்பான பரோபகார குணம் கமலுக்கும் சிறிதளவு இருந்தது. ஆகவே  தாயத்து  அவனுடைய  வாழ்வின் நிம்மதியை குலைக்க வில்லை" என்றான்.


விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவனது மவுனம் கலையவே, பழையபடி அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது. 


 

0 comments:

Post a Comment