கொடுத்த வாக்கு


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! இந்த பயங்கர நள்ளிரவில் இப்படி சிரமப் பட்டு விடா முயற்சியாகச் செயல்படுவதைப் பார்த்தால் உன் நல்ல குணத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரோ உன்னை இதைச் செய்து தருமாறு தூண்டி இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். உன்னைப் போல சிக்கிக் கொண்ட ஆனந்தன் என்ப
வனின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று கூறிக் கதையை ஆரம்பித்தது.
வெகு நாட்களுக்கு முன் சத்திய கிரியைச் சத்தியகீர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஒரே மகன் ஜெயசீலன். மன்னன் தன் மகனுக்குக் கல்வி அளிக்க அவனை கோவிந்தாச்சாரியார் என்பவரின் குருகுலத்தில் கொண்டு போய்ச் சேர்த்தான். அந்த குருகுலத்தில் பத்து மாணவர்கள் இருந்தார்கள். 


ஜெயசீலன் அரசகுமாரன் என்ற காரணத்தால் மற்ற மாணவர்கள் அவனுடன் நெருங்கிப் பழகாமல் சற்று விலகியே இருந்தார்கள். அதற்கு ஏற்ப ஜெயசீலன் தான் அரச குமாரன் என்று அகம்பாவம் கொண்டு நடந்து வந்தான். இப்படி இருந்தும் ஆனந்தன் என்பவன் மட்டும் வலியச் சென்று ஜெயசீலனிடம் பேசிப் பழகலானான். ஜெயசீலன் அவனைத் திட்டி தாழ்வாக எண்ணி முட்டாள் தனமாக நடந்து வந்தாலும் ஆனந்தன் அவற்றை எல்லாப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு அவனுடன் அன்பாகப் பழகவே நாளடைவில் ஜெயசீலன் அவனைத் தன் நண்பனாகக் கருதலானான். ஆசிரியர் கூறுவது அநேகமாக ஜெயசீலனுக்குப் புரியாமலே இருக்கும். ஆனந்தன் அவனுக்குப் புரியாதனவற்றை விளக்கிப் புரிய வைக்கலானான். 

ஜெயசீலன் ஆனந்தனின் உதவி பெற்று படிப்பில் முன்னேறி வருவது கண்டு அவனது குரு மகிழ்ந்து போனார். அவர் அவனை உற்சாகப் படுத்த "பேஷ், நீ நன்றாகவே படிக்கிறாய். இன்னமும் கொஞ்சம் சிரத்தையுடன் படித்தால் மாணவர்களில் முதல்வனாக வந்து விடலாம்" என்றார். முதல் முறையாக குரு தன்னைப் புகழ்ந்தது கேட்டு ஜெயசீலன் ஆனந்தனிடம் "நண்பா! உன்னால் தான் படிப்பில் முன்னேறி நம் குருவின் பாராட்டுதல்களையும் பெற்றேன். அதனால் நான் நாட்டின் மன்னனானதும் உன்னை என் முதலமைச்சராக ஆக்கிக் கொள்கிறேன். இது சத்தியம்" என்றான்.                                                                       

ஜெயசீலன் கூறியதைக் கேட்டு ஆனந்தன் மகிழ்ந்து போனான். குருவும் ஜெயசீலன் ஆனந்தனிடம் கூறியதைக் கேட்டு மகிழ்ந்து "ஜெயசீலா! ஒருவன் செய்த நன்றியை மறக்கக் கூடாது. நீ ஆனந்தனுக்குக் கடமை பட்டவன். இன்று நீ செய்த சத்தியத்தை நீ மறந்து விடாதே" என்றார். ஜெயசீலனும் "நான் அதை மறக்க மாட்டேன். நன்கு நினைவில் வைத்துக் கொண்டிருப்பேன்" என்று கூறினான்.
 
குருகுலத்தில் படிப்பு முடிந்ததும் ஜெயசீலன் தலை நகருக்குக் கிளம்பி விட்டான். அவன் ஆனந்தனிடம் தான் போய் வருவதாகக் கூறி விடை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனந்தன் அதைப் பெரிது படுத்த வில்லை. அவன் குருவிடம் தான் மேலும் படிக்க விரும்புவதாகக் கூறவே அவரும் "சரி. நீ விந்திய மலையிலுள்ள ஞானானந்தரின் ஆசிரமத்திற்குப் போய் உன் மேல் படிப்பைத் தொடர்" என்று கூறி ஆசிகள் அளித்து அனுப்பினார்.

ஜெய்சீலன் தலை நகருக்குப் போய்ச் சேர்ந்தான். ஆறு வருடங்கள் கழிந்த பின் அவன் நாட்டின் மன்னன் ஆனான். அவன் தான் சொல்லுகிற படி நடக்கும் துர்ஜெயன் என்பவனைத் தன் முக்கிய ஆலோசகனாக நியமித்தான். ஆட்சி பற்றி அவன் சொல்வதே ஜெயசீலனுக்கு வேதவாக்கு என்ரு ஆகிவிட்டது. துர்ஜெயனின் ஆலோசனைப் படி பல புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றால் மக்கள் அவதியுற்றார்கள். அவற்றால் மக்கள் குழம்பி மன்னன் மீது வெறுப்பை அடைந்தார்கள். இந்த நிலையைப் பயன் படுத்திக் கொண்டு அண்டை நாட்டு மன்னன் சத்தியகிரி மீது படை எடுக்கத் திட்டமிட்டான். இதை அறிந்த ஜெயசீலன் துர்ஜெயனிடம் அதற்கு என்ன செய்வது என்ரு யோசனை கேட்டான்.


துர்ஜெயனும் "இது பற்றிக் கவலையே வேண்டாம். நம் படை பலத்தை அதிகரித்துக் கொண்டு முதலில் நாமே படை எடுத்துப் போய் அவனைத் தோற்கடித்து விடலாம்" என்றான். அப்போது ஜெயசீலன் "படையை விரிவு படுத்தப் பணம் வேண்டுமே! அதற்கு எங்கே போவது? நம் பொக்கிஷத்தில் பணமும் இல்லையே" என்றான். அப்போது துர்ஜெயன் "நம் பொக்கிஷத்தை நிரப்ப ஒரு வழி உள்ளது. யட்சபர்வதம் என்ற மலையிலுள்ள சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு கல்லில் சில விவரங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அந்த கோவிலின் எதிரே ஓடும் நதியின் மத்தியில் ஒரு சுழல் உள்ளது. 


மந்திர தந்திரங்கள் தெரிந்து சாஸ்திரங்களைக் கற்ற துணிச்சலான இளைஞன் அந்த சுழலுக்குள் போய்  அங்குள்ள யட்சமாயாவியை வென்று விட்டால் அவனுக்கு பெரும் புதையலும் எட்டுமாபெரும் சித்திகளும் கிட்டும். ஆனால் அவன் மட்டும் தோற்றுப் போனால் நரகலோகத்திற்குத் தான் போக வேண்டி வரும். அங்கு போய் வரத் தகுதி பெற்றவனையும் நான் தேர்ந்து எடுத்து விட்டேன். அவன் பெயர் ஆனந்தன். 


அவன் குருகுலத்து கல்வியை முடித்துக் கொண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் நம் தலை நகருக்கு வந்திருக்கிறான். அவன் நன்கு படித்த இளைஞன். துணிச்சல் மிக்கவன். தற்போது நம்மூர் பிரபல வியாபாரி நவகோடி நாராயணன் வீட்டில் தான் தங்கி இருக்கிறான். நாம் அவனை வரவழைத்து யட்ச பர்வதத் திற்கு அனுப்பலாம்" என்றான். ஆனந்தன் என்ற பெயரைக் கேட்டது மே ஜெயசீலன் திடுக்கிட்டான்.

ஏனெனில் அதுவரை தன் குருகுலத்து நண்பனைப் பற்றி நினைக்கவே இல்லை. அவனது பெயரைக் கேட்டதும் தான் அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்ததும். தன் குரு அதைக் காக்க வேண்டும் என்று கூறியதும் நினைவிற்கு வந்தது. அதனால் அவனைக் கண்டு பேசுவது எப்படி என்று தயங்கினான். பிறகு அவன் சற்று யோசித்து விட்டு துர்ஜெயனிடம் "சரி, அந்த ஆனந்தனையே வரவழைத்து இதனைச் செய்யச் சொல்வோம். அவன் வெற்றி பெற்று வந்தால் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி விடுவோம்" என்று கூறினான். ஆனந்தன் வந்ததும் ஜெயசீலன் பரிவுடன் அவனது நலம் விசாரித்தான். அதன் பின் யட்சபர்வதத்தைப் பற்றிக் கூறினான். 


அப்போது ஆனந்தன் "நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களே. குருகுலத்தில் உனக்கு நான் எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறேன். உனக்கு ஒரு ஒரு பிரச்சினை என்றால் அதை தீர்க்க நான் உதவாமலா இருந்து விடுவேன்? நான் யட்சபர்வதத்திற்குப் போய் அங்குள்ள செல்வத்தை அடைந்து கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று கூறி விட்டுச் சென்றான்.
 

அவன் யட்ச பர்வதத்திலுள்ள சிவன் கோவிலை அடைந்து அதன் எதிரே உள்ள நதியில் குதித்து அதிலுள்ள சுழல் பகுதியை அடைந்தான். ஆனந்தனோடு சென்ற ஜெயசீலன் அவன் அந்நதியிலிருந்து எப்போது வருவான் என்று எதிர் பார்த்துக் கரையில் காத்துக் கொண்டிருந்தான். நதியிலிருந்து சற்று நேரத்தில் ஆனந்தன் முன்பிருந்ததை விட இரு மடங்கு ஒளியுடன் வந்ததை அவன் கண்டு ஆச்சரியப்பட்டான்.கரைக்கு வந்த அவனிடம் ஜெயசீலன் ஆவலுடன் "புதையல் கிடைத்ததா?" என்று கேட்டான். ஆனந்தனும் புன்னகை புரிந்தவாறே" என்னோடு சற்றும் பயப்படாமல் வா. அதைக் காட்டுகிறேன்" என்று கூறி அவனது கையைப் பற்றிக் கூட்டிக் கொண்டு போய் நதிக்குள் இறங்கினான். இருவரும் சுழலுள்ள இடத்திற்குப் போய் முங்கி அடிமட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு தங்கமும் நவரத்தினங்களும் குவியல் குவியலாக உள்ளதை ஜெயசீலன் கண்டான். ஆனந்தனும் ஜெயசீலனிடம் "இவற்றை எடுத்துக் கொண்டு போய் மக்கள் நலனுக்கான பணிகளைச் செய். ஆனால் இதற்குப் பரிசாக எனக்குப் பணமோ அல்லது நவரத்தினங்களோ வேண்டாம். ஆனால் நான் கேட்பதைக் கொடுக்க வேண்டும்" என்றான்.

 ஜெயசீலனும் "நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்" எனவே ஆனந்தனும் "நீ குருகுலத்தில் படித்தபோது எனக்குக் கொடுத்த வாக்கின்படி என்னை உன் முதல் அமைச்சராக நியமிக்க வேண்டும்" என்றான். அதைக் கேட்ட ஜெயசீலன் சற்றுத் திகைத்துத் தான் போனான். பிறகு கண்களில் நீர் ததும்ப அவன் ஆனந்தனின் கால்களில் விழுந்து வணங்கி "நீ மனிதர்களின் மாணிக்கம். நீதான் இப்போது முதல் என் முதலமைச்சர். இனி நீ சொல்கிறபடி தான் நான் ஆட்சி புரிவேன்" என்று நா தழுதழுக்கக் கூறினான். 

வேதாளம் இந்தக் கதையைக் கூறி "மன்னனே! ஆனந்தன் பெரும் செல்வத்தைக் கண்டு பிடித்து அதற்குப் பரிசாகப் பணத்தைப் பெறாமல் முதல் அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கிக் கொண்டானே. இது பதவி மோகத்தாலா அல்லது சுயநலத்தாலா? இதற்குச் சரியான பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.

விக்கிரமனும் "ஆனந்தன் பதவி மோகத்தாலோ அல்லது சுயநலத்தாலோ ஜெயசீலனிடம் அந்தப் பதவியைக் கேட்டு வாங்கிக் கொள்ள வில்லை. அவனது இயல்பே பிறருக்கு உதவுவதுதான். குருகுலவாசத்தில் ஜெயசீலன் நன்கு படிக்க அவன் உதவினான்.


நாட்டில் ஆட்சி சீர் குலைந்தது கண்டு அது ஜெயசீலன் துர்ஜெயனின் யோசனைகளை ஏற்பதால் அவ்வாறு ஆகி விட்டது என நம்பினான். நிலைமையைச் சீர்திருத்தி மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவன் ஜெயசீலனிடம் முதலமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கிக் கொண்டான். அவன் தனக்கு நாடு வேண்டும், என்றோ நிலபுலன்கள் மாளிகைகள் வேண்டும் என்றோ கேட்கவில்லை. எனவே இது பதவி மோகமும் அல்ல. சுயநலமும் அல்ல மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்ற உயரிய நோக்கு" என்றான்.


விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மெளனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.


 

0 comments:

Post a Comment

Flag Counter