குறையைப் பார்!


 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் இந்திரப் பிரஸ்தத்தில் குருவம்ச மன்னராகப் பிறந்து தனஞ்ஜெயன் என்ற பெயரில் இருந்து வந்தார். நீதி தவறாமலும், தான தர்மங்களைச் செய்வதிலும் தனஞ்ஜெயனுக்கு நிகராக யாரும் இல்லை என்ற பெயர் ஏற்பட்டு அவரது புகழ் எங்கும் பரவியது.
அதே சமயம் கலிங்க நாட்டின் தலைநகரான தந்தபுரத்தைக் காளிங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒருமுறை அவனது நாட்டில் மழை இல்லாது போய் பஞ்சம் வந்து விட்டது. மக்கள் உணவு இல்லாமல் திண்டாடினார்கள்.

பலர் பட்டினியால் துடி துடித்து இறந்தும் போயினர். இதைக் கண்ட காளிங்கன் தன் மந்திரிகளிடம் இவ்வாறு பஞ்சம் வரக் காரணம் என்ன என்றும் அதை எப்படிப் போக்குவது என்றும் யோசனை கேட்டான். அவர்களும் "தர்மம் நிலை தவறிக் கெடும் போது இம்மாதிரிப் பஞ்சம் ஏற்படும். நீங்களே பாருங்கள்! இந்திரப்பிரஸ்த மன்னர் தனஞ்ஜெயன் நீதி தவறாமல் தர்மநியாயமாக ஆட்சி புரிவதால் அங்கு மாதம் மும்மாரி மழை பெய்கிறது" என்றார்கள்.

அப்போது காளிங்கன் "அப்படியானால் நீங்கள் இப்போதே இந்திரப்பிரஸ்தம் போய் மன்னரைக் கண்டு அவர் கடைப் பிடிக்கும் முறைகளைக் கேட்டுத் தெரிந்து தங்கத் தகடுகளில் எழுதிக் கொண்டு வாருங்கள். நாமும் அவற்றைக் கடைப் பிடிக்கலாம்" என்றான். மந்திரிகளும் அவ்வாறே செய்வதாகக் கூறிச் சென்றார்கள்.

அவர்கள் அங்கு தனஞ்செய மன்னனைக் கண்டு "அரசே, நாங்கள் கலிங்கத்திலிருந்து வருகிறோம். எங்கள் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தவியாய் தவிக்கிறார்கள். தாங்கள் நீதி நேறி தவறாமல் ஆட்சி புரிவதால் தங்களது நாட்டு மக்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

 தாங்கள் கடைப் பிடிக்கும் முறைகளை நாங்கள் கொண்டு வந்திருக்கும் தங்கத் தகடுகளில் எழுதிக் கொடுத்தால் அவற்றை எம்மன்னர் கடைப் பிடித்து மக்களை சுகப்படுத்தி வாழ வைப்பார்" எனக் கூறித் தாம் கொண்டு வந்த தங்கத் தகடுகளை தனஞ்செயனின் முன் வைத்து நின்றான்.
தனஞ்செயன் அந்த மந்திரிகளுக்கு வணக்கம் செலுத்தி "அமைச்சர்களே! இந்தத் தங்கத் தகடுகளில் தர்ம நேறிகளை எழுதிக் கொடுக்கும் தகுதி எனக்கு இல்லை. ஏனெனில் நானே ஒருமுறை நீதி நேறி தவறி விட்டேன்.

எங்கள் நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கார்த்திகை விழா நடப்பது உண்டு. அப்போது மன்னர் ஒரு குளக்கரையில் யாகம் நடத்தி நான்கு திசைகளிலும் நான்கு அம்புகளை எய்ய வேண்டும். ஒருமுறை நான் எய்த அம்புகளில் மூன்று திரும்பக் கிடைத்தன. நான்காவது அம்பு குளத்தினுள் சென்று விட்டது. அந்த அம்பால் சில மீன்களும் சில தவளைகளும் இறந்தே இருக்க வேண்டும். இப்படியாக நான் தவறு செய்து விட்டேன். என்னை விட நீதி தவறாமல் உள்ள வேறு யாராவது இருக்கலாம். நீங்களே விசாரித்துப் பாருங்கள்" என்றான்.

அது கேட்டு கலிங்க நாட்டு மந்திரிகள் ஆச்சரியம் அடைந்தார்கள். உடனே அமைச்சர்கள் தனஞ்செய மன்னனின் சகோதரனான நந்தனிடம் சென்று நீதி முறைகளை எழுதித் தருமாறு வேண்டினார்கள்.

அவனோ "நான் தினமும் மாலை வேளைகளில் அந்தப்புரத்திற்குச் செல்வது வழக்கம். சில நாள்களில் இரவு வேளைகளில் அங்கேயே தங்கியும் விடுவேன். அப்போது தேரோட்டி எனக்காக நான் வரும் வரை காத்துக் கொண்டு இருப்பான். சாட்டையை நான் எடுத்துக் கொண்டு போகும் போது தேரோட்டி தேரை விட்டு விட்டு வீட்டிற்குப் போய் விடுவான். ஒரு நாள் சாட்டையை நான் தேரிலேயே விட்டு விட்டு அந்தப்புரத்திற்குப் போய் விட்டேன். அன்று நல்ல மழைப் பிடித்துக் கொண்டது. நான் அந்தப்புரத்தில் நனையாமல் இருந்து விட்டேன். ஆனால் என் தேரோட்டியோ மழையில் நனைந்து துன்பப்பட்டான். எனவே நீதி முறைகளை எழுதும் தகுதி எனக்கு இல்லை" என்றான்.

அப்போது கலிங்க மந்திரிகள் அரசாங்க புரோகிதரிடம் சென்று கேட்டனர். அவரோ "நான் ஒரு முறை நேறி தவறி விட்டேன். ஒரு நாள் அரண்மனைக்குச் செல்கையில் ஒரு தங்கத் தேரை அங்கு கண்டேன். அதைப் பார்த்ததும், ‘இந்த மாதிரித் தேரை மன்னர் எனக்குத் தானமாகக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என எண்ணினேன். நான் அரண்மனைக்குள் சென்ற போது மன்னர் என் முகம் வாடி இருப்பது கண்டு "நீங்கள் அந்தத் தேரை ஓட்டிச் செல்லுங்கள். அது உங்களுடையதே"  என்றார். அப்போது தான் ‘நான் ஏன் பேராசை கொண்டேன்’ என எண்ணி வருந்தினேன். தேரையும் நான் வேண்டாம் எனக் கூறி விட்டேன். இப்படி நான் ஆசைப்பட்டு நேறி தவறியவன்" என்றார்.

கலிங்க நாட்டு மந்திரிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. முடிவாக அந்நாட்டு அமைச்சரிடம் சென்றனர். அவரும் "நானும் ஒரு முறை நியாயம் தவறி விட்டேன். ஒரு நாள் ஒரு விவசாயியின் வயலை அளந்து பார்க்கப் போனேன். அங்கு ஓரிடத்தில் கோலை நட வேண்டி இருந்தது. அங்கு ஒரு சிறிய வளை இருந்ததால் அதில் கோலை ஊன்றினேன். அப்போது அதிலிருந்து வெளியே வந்த நண்டு சுருண்டு விழுந்து இறந்தது. இப்படி ஒரு பிராணியைக் கொன்ற நான் எப்படி நீதி நேறிகளை எழுதிக் கொடுக்க முடியும்?" என்றார்.

கலிங்க நாட்டு மந்திரிகளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது வரை தாம் கேட்டவற்றை எல்லாம் தங்கத்தகடுகளில் எழுதினார்கள். பின் அதனை எடுத்துக் கொண்டு கலிங்கத்திற்குப் போய் தம் மன்னனிடம் அவற்றைப் படித்துக் காட்டினார்கள். நீதி நேறிகளை நன்கு தெரிந்து கொண்டு அதன் படி நடப்பதும் தம் குற்றங்களுக்கு வருந்தி திருந்துவதுமே சிறந்த வழி எனக் கண்டு அவன் தன் ஆட்சியின் குறைபாடுகளைக் தானே கண்டு அவற்றைக் களைந்தான். அதன் பின் காளிங்க மன்னனின் நாட்டில் தர்மம் தழைக்க மழை பெய்தது. மக்கள் சுகமாக வாழலாயினர்.

0 comments:

Post a Comment

Flag Counter