அது என் கடமை


 

பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் தட்சசீல நகரில் ஒரு சிற்பியாக இருந்தார். அவரது புகழ் எல்லா நாடுகளிலும் பரவியதால் அவரிடம் பல சீடர்கள் வந்து சிற்பக்கலையைக் கற்கலானார்கள்.
காசி மன்னனும் தட்சசீலச் சிற்பியைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தன் மகனும் சிற்பக்கலையில் பயிற்சி பெற வேண்டும் என எண்ணி அவனை தட்சசீலத்திற்கு அனுப்பினான். பதினாறு வயதே நிரம்பிய அந்த இளைஞன் தனியாகவே காசியிலிருந்து நடந்து தட்சசீலத்தை அடைந்தான். அங்கு போதிசத்வரைக் கண்டு அவரது சீடனாகி அவருக்குப் பணிவிடை புரிந்து வரலானான்.

அவன் சிற்பக்கலையை சிரத்தையுடன் கற்பது கண்டு போதிசத்வரும் மகிழ்ந்தார். இப்படியே சில மாதங்கள் கழிந்தன. இந்த சீடனும் குருவும் தினமும் ஊருக்கு வெளியே பாயும் ஆற்றிற்குப் போய் அதில் குளித்து விட்டுத் திரும்புவது வழக்கம். ஒரு நாள் அவர்கள் குளிக்கும் போது ஒரு கிழவி சிறிது எள்ளை எடுத்து வந்து கழுவி அதனைக் கரையில் உலரப் போட்டிருந்தாள்.
அரசகுமாரன் குளித்ததும் கரை ஏறி கிழவி எங்கோ பார்த்துக் கொண்டுஇருந்த போது ஒரு பிடி எள்ளை அள்ளித் தன் வாயில் போட்டு மென்று தின்று விட்டான். ஆனால் அவன் எள்ளை எடுத்துச் சாப்பிட்டதைக் கிழவி கவனித்து விட்டாள். அப்போது அவள் எதுவும் சொல்லவில்லை.

மறுநாளும் அரசகுமாரன் அது போல எள்ளை எடுத்துச் சாப்பிடுவதைக் கிழவி கண்டாள். அப்போதும் பார்த்தும் பாராதது போல இருந்து விட்டாள். ஆனால் மூன்றாவது நாளும் அரசகுமாரன் எள்ளைத் திருடித் தின்ற போது அவள் கோபம் கொண்டு அவனது குருவிடம் போய் "உங்கள் இந்த சீடன் கடந்த மூன்று நாள்களாக என் எள்ளைத் திருடித் தின்று வருகிறான்.

 எள் போனது பற்றி நான் கவலைப் படவில்லை. ஆனால் இவன் இப்படித் திருடுவதை வழக்கமாக்கிக் கொள்கிறானே என்றுதான் வேதனைப் படுகிறேன். அதனால் அவனுக்குத் தகுந்த  தண்டனை கொடுங்கள்" என்றாள்.
குருவும் தம் இருப்பிடத்தை அடைந்ததும் அரசகுமாரனை இழுத்துப் போய் எல்லாச் சீடர்களின் முன் நிறுத்தினார். பின்னர் அவன் ஆற்றங்கரையில் செய்த திருட்டுத் தனத்தை அவர் எல்லாரிடமும் கூறியதோடு பிரம்பை எடுத்து அவன் முதுகில் மூன்று அடிகளைச் ‘சுளீர்’ ‘சுளீர்’ என்று அடித்து "இனிமேல் இப்படிப்பட்ட தகாத செயலைச் செய்யாதே. இது நினைவில் இருக்கவே உனக்கு இந்த தண்டனை" என்றார்.

அரசகுமாரனுக்குத் தன் ஆசிரியர் மீது அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது. ஆனாலும் அவனால் என்ன செய்ய முடியும்? அப்போது அவன் மனத்தில் ‘இருக்கட்டும். நான் மன்னனானதும் இவருக்குச் சரியான தண்டனை கொடுக்கிறேன்’ எனக் கருவிக் கொண்டிருந்தான்.

சிறிது காலத்திற்குப் பின் அந்த அரசகுமாரனின் பயிற்சியும் முடிந்தது.  போகுமுன் அவன் குருவிடம் "ஐயா, நான் மன்னனானதும் தாங்கள் ஒருமுறை எனது அரண்மனைக்கு விஜயம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன்" என்றான். குருவும் மகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

அரசகுமாரன் காசிக்குச் சென்ற சில மாதங்களுக்குப் பின் அரசனாக ஆனான். சில நாள்களில் தன்னை தண்டித்த குருவின் ஞாபகம் வரவே அவன் தட்சசீலத்திற்கு ஒரு ஆளை அனுப்பி தன் குருவை அழைத்து வரும்படி அனுப்பினான்.

அவனும் சிற்பியான குருவை தட்சசீலத்தில் கண்டு தன் அரசன் விடுத்த அழைப்பை அளித்தான். ஆனால் அதனைப் பெற்றுக் கொண்ட குரு சிறிது காலம் கழித்து வருவதாகச் சொல்லி அனுப்பினார்.

சில மாதங்களுக்குப் பிறகு குரு தம் சீடனைக் காணக் காசிக்குச் சென்றார். அவர் அரச சபைக்குள் நுழைந்ததும் சபையோர் யாவரும் தம் அரசனின் குரு வந்திருக்கிறாரே என மகிழ்ந்து அவருக்கு மரியாதை செய்து உயர்ந்த ஆசனத்தில் உட்கார வைத்தார்கள்.

ஆனால் மன்னனோ தன் குருவை எரித்து விடுபவன் போலப் பார்த்து "என்னப்பா! ஒரு பிடி எள்ளை எடுத்து நான் தின்றேன் என்ற அற்ப காரணத்திற்காக அன்று நீ என்னை தண்டித்தாயே. இப்போது உனக்கு மரண தண்டனை கொடுக்காமல் விட்டு விடுவேனா?" என்று ஆவேசத்துடன் பொரிந்து தள்ளினான்.

அதுகேட்டு சபையில் இருந்தவர்கள் எல்லாரும் திடுக்கிட்டனர். ஆனால் குரு பயந்து விடாமல்  கணீரென்ற குரலில் "நீ இப்போது மன்னன். அப்போது என் சீடன். நான் உனது ஆசிரியராக இருந்தேன். குருகுல வாசத்தின் போது ஒரு சீடன் தவறு செய்தால் அவனைத் தண்டிக்க வேண்டியது அவனது ஆசிரியரின் கடமை. அன்று மட்டும் நான் அப்படிச் செய்யாது உன்னை விட்டுஇருந்தால் இன்று நீ திருடனாகவே ஆகி இருப்பாய். அறிவாளிகள் யாராவது ஒருவர் தவறைச் சுட்டிக் காட்டினால் தம்மைத் திருத்திக் கொள்ளவே முயல்வார்கள். கோபமும் ஆத்திரமும் கொள்ளமாட்டார்கள் " என்றார்.

அதை காசி மன்னனோடு சபையில் இருந்த அனைவரும் கேட்டனர். அரசனுக்கோ ஒரே அவமானமாகப் போய் விட்டது. சபையோரோ "ஆகா! எப்படிப்பட்ட குரு!!" என வியந்து கூறினார்கள்.

மறு நிமிடமே காசி மன்னன் தன் குருவான போதிசத்வரின் கால்களில் விழுந்து "மகாத்மாவே! நீங்கள் தயவு செய்து என்னை மன்னியுங்கள். என்னைத் திருத்தி நல்வழிப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றான். போதிசத்வரும் தம் சீடனின் மனம் மாறியது கண்டு மகிழ்ச்சியடைந்தார். பின்னர் காசி மன்னன் வேண்டிக் கொண்டபடி அவர் தட்சசீலத்தில்இருந்து காசிக்கே வந்து அவனது ஆஸ்தான குருவாக இருந்து அவனுக்கு அவ்வப்போது நல்ல வழியைக் காட்டி வந்தார்.

 

0 comments:

Post a Comment