உயிர்காத்த நண்பன்

        உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
                               இடுக்கண் களைவதாம் நட்பு


விளக்கம்: உடுத்திய ஆடை தளர்ந்தால் உடனே நமது கை எவ்வாறு விரைந்து செயல்பட்டு ஆடையை சரிசெய்கிறதோ, அதுபோல ஆபத்து நேரத்தில் மெய்வருத்தம் பாராமல் உடனே உதவி செய்வது தான் நட்புக்கு அழகு.

விஜயனும், சிவாவும் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்து பயின்று வந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இரவுக் காட்சி சினிமாவுக்கு சென்று விட்டு இருவரும் பைக்கில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  சிவா வண்டியை ஓட்ட, விஜயன் பின்னால் அமர்ந்திருந்தான். நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டிய சிவா, திடீரென நிலை தவறி சாலையில் தவறி விழுந்தான். தரையில் தலை பலமாக மோதியதால் ரத்தம் அதிகமாக வெளியேறி சிவா நினைவிழந்தான். பலத்த காயங்களுடன் தப்பிய விஜயன், தன் நண்பன் உயிருக்குப் போராடுவதைக் கண்டு மனம் பதைத்தான்.

உடனே தன் சட்டையைக் கழற்றி சிவாவின் தலையில் வைத்து அழுத்தியவாறே, உதவிக்கு யாராவது வருவார்களா என பதட்டத்துடன் சாலையில் அங்குமிங்கும் ஓடினான் ஆனால் நள்ளிரவு என்பதால் சாலை வெறிச்சோடி இருந்தது.  அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு பைக்கை நிறுத்தி, நிலைமையை அழுகையுடன் எடுத்துக்கூறி உதவுமாறு விஜயன் கெஞ்சினான்.

விஜயனுக்கும் பலத்த காயங்கள் இருப்பதைப் பார்த்த அந்த நபர், "நண்பரே, உங்களுக்கும் அதிகமாக காயம் ஏற்பட்டுள்ளது. உடனே உங்கள் இருவருக்கும் சிகிச்சை தேவை. உங்கள் நண்பரை நடுவில் அமர வைத்து, பின்புறம் நீங்கள் அமர்ந்து கொண்டு அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள். வண்டியில் மூன்று பேர் செல்லக்கூடாது என்றாலும், ஆபத்துக்கு பாவமில்லை," என்று கூறி, இருவரையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தார்.


மருத்துவமனையில் சிவாவுக்கு திவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தனது விடுதி நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த விஜயன், சிவாவுக்கு தேவையான அளவு ரத்தம் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்தான். மறுநாள் சிவாவுக்கு நினைவு திரும்பியது.

தனக்கு ஏற்பட்ட காயங்களைப் பொருட்படுத்தாது, ஒரு மாத காலம் தொடர்ந்து சிவாவுடன் நிழல் போல இருந்து அவனை கவனித்துக் கொண்டான் முற்றிலும் குணமடைந்த சிவா தன் நண்பன் விஜயனைப் பார்த்து, "உனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உயிரைக் காப்பாற்ற கடுமையாக போராடினாய். உன்னால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன். நீயல்லவா உண்மையான நண்பன்," எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தான்

0 comments:

Post a Comment