படித்தால் மட்டும் போதுமா?

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
                           நற்றாள்தொழாஅர் எனின்.


விளக்கம் : "கல்வியறிவுள்ள ஒருவன், தன்னைப் படைத்த இறைவனை நன்றியறிதலுடன் வணங்க மறுப்பானேயானால், அவன் கற்றதனால் பயன் ஒன்றுமில்லை.

ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. தர்க்க சாஸ்திரத்தில் வல்லவன். முற்போக்கு சிந்தனைகள் உடைய சீர்த்திருத்தவாதி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார்.

ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, "சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள்" என்றர்.

ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் "நிலத்தில் பாடுபட்டது நீ...நெல் விளைவித்தது நீ...என்னை உணவருந்த அழைத்தது நீ...அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை" என்றான்.

விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, "நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர  மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே! நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்?? என்று கூறினார்.


இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின.

0 comments:

Post a Comment