யுத்த காண்டம் - 11

 
இராமரிடம் விபீஷணன் "இந்திரஜித் நிகும்பலையில் யாகம் செய்யும்போது யார் அவனை எதிர்த்துப் போரிடுகிறானோ அவனே இந்திரஜித்தைக் கொல்லமுடியும் என்று சாபம் இருக்கிறது" என்றான். உடனே, இலட்சுமணன் இராமரிடம் விடைப்பெற்றுக் கொண்டு சுக்கிரீவன், அனுமார், விபீஷணன் முதலியவர்களோடு வானர வீரர்களையும் அழைத்துக் கொண்டு நிகும்பலைக்குச் சென்றான். அந்த ஹோமம் நடைபெறாது தடுத்து அவனைக் கொல்வதே இலட்சுமணனின் நோக்கம்.

நிகும்பலைக்குப் போகுமுன் பெரிய அரக்கர் படையை எதிர்க்க வேண்டியிருந்தது. அதனை ஒழித்தாலே இந்திரஜித்தோடு போர் புரிய முடியுமென விபீஷணன் இலட்சுமணனிடம் கூறவே அவனும் அரக்கர்களைத் தாக்கும்படி வானரர்களுக்குக் கட்டளையிட்டான். அரக்கர்படை அழியலாயிற்று.


இதைக்கண்ட இந்திரஜித் யாகத்தை முடிக்காமலே போரிட எழுந்து வந்தான். வானரர்கள் அவனது தேரைச் சூழ்ந்து கொண்டு தாக்கலாயினர். அனுமார் மரங்களை வேரோடு பிடுங்கி வந்து அரக்கர்களை அழிக்கலானார். அரக்கர்களும், அனுமாரைத் தாக்கலாயினர். அனுமாரோ சற்றும் சளைக்காது அவர்களையெல்லாம் எமனுக்கு இரையாக்கிக் கொண்டே போனார். இதைக்கண்ட இந்திரஜித் தன் தேரை அனுமார் இருந்த பக்கமாக செலுத்தலானான். அவன் விட்ட பாணம் அனுமாரைத் தாக்கி காயப்படுத்தியது.

 அதைக்கண்ட விபீஷணன் இலட்சுமணனிடம் "நீ போய் இந்திரஜித்தை தாக்கு" என்றான். இலட்சுமணன் விபீஷணனுடன் நிகும்பலை யாகம் நடக்குமிடத்தை அடைந்தான். அங்கிருந்துதான் இந்திரஜித் போருக்குப் புறப்படுமுன் பலியிட்டாக வேண்டும்.

விபீஷணன் இலட்சுமணனிடம் "இப்போது நீ இந்திரஜித்தையும் அவனது தேர்ப்பாகனையும் கொல். அவன் இந்த யாகத்தை முடிக்காமல் இறந்து ஒழிவான்" என்றான். இலட்சுமணனும், விபீஷணன் குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு இந்திரஜித்தைத் தன்னோடு போர்புரிய வரும்படி அழைத்தான்.


இந்திரஜித் இலட்சுமணனைப் பார்த்து எதுவும் பேசாமல் விபீஷணனிடம் "நீ குலத்தையே கெடுக்க வந்தாயே. சிறிது கூட இந்த வம்ச ரத்தமே ஓடவில்லையா? நம் வம்சத்து விரோதியே கதி என்று கிடக்கிறாயே. உன் மூளை மழுங்கிவிட்டதா? உன் யோசனையால் தானே இந்த யாகம் தடைப்பட்டு விட்டது" என்றான்.


அதற்கு விபீஷணன் "என்னை பற்றித்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. நான் அரக்க இயல்பு கொண்டவனல்ல நேர்மையை விரும்புபவன். அதனால்தானே சொந்த அண்ணனையே விரோதித்துக் கொண்டு இவர்களோடு நட்பு கொண்டேன். நட்பு நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்றுமே வாழ்க்கையில் உருப்படமாட்டான். நீ இராவணனுக்காக போர் புரிகிறாய். எனவே, நீயும் அழிய வேண்டியவனே" என்றான்.


அதுகேட்டு இந்திரஜித் மிகவும் கோபம் அடைந்தான். அவன் இலட்சுமணனிடம் "நேற்றிரவு உன்னையும், உன் அண்ணனையும் அடித்து நினைவிழக்கச் செய்தேனே. அதை நீ மறந்துவிட்டு இப்போது என் கையால் இறக்கவா வந்திருக்கிறாய்?" எனக் கேட்டான். இலட்சுமணனோ "ஆகா! அழகுச்சொல் வீரனே! என்னைக் கொல்வதாக ஏன் பயமுறுத்துகிறாய்? செயலில் காட்ட முடியாது வீண் ஜம்பம் அடிக்கிறாய். திருடனைப்போல ஓடி மறைந்து தாக்குகிறாய். இதுவா  வீரனின் லட்சணம்? வா நேருக்கு நேர் போர் புரியலாம்" என்றான்.

 மறுநிமிடமே இலட்சுமணன் மீது இந்திரஜித் பாணங்களைத் தீவிரமாக எய்யலானான். ஆனால், இலட்சுமணன் அவற்றையெல்லாம் தடுத்ததோடு இந்திரஜித்தையே கடுமையாகத் தாக்கலானான். விபீஷணனும் இலட்சுமணனுக்கு உற்சாகமூட்டி சட்டென இந்திரஜித்தைக் கொல்லுமாறு யோசனை கூறினான்.

இந்திரஜித்தால் இலட்சுமணனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. ஆயினும், அவன் கடுமையாகவே போர் புரியலானான். விபீஷணனும் போரில் இறங்கி அரக்கர்களை அழித்தவாறே "வானரர்களே, அரக்கர்களை அழியுங்கள். இராவணனுக்கு இந்த இந்திரஜித் ஒருவனே மாவீரன். மற்றவர்களெல்லாம் அழிந்து போயினர். இவனைக் கொல்வது இலட்சுமணனின் பொறுப்பு. எனவே, இவனுக்கு உதவி புரியும் படையை நாம் அழிப்போம்" என வானரர்களிடம் கூறினான்.


இதே சமயம் இலட்சுமணன் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்றான். அதனால் இந்திரஜித் தானே தேரை ஓட்டிக் கொண்டு போர் புரியலானான். வானர வீரர்களில் சிலர் அவனது தேரை முறித்தனர். இந்திரஜித் தரை மீது நின்று போர் புரியலானான்.


இதே சமயம் அவன் சில அரக்கர்களிடம் "இப்போது நீங்கள் என்னை மறைத்து நின்று போர் புரியுங்கள். நான் இலங்கைக்குப் போய் வேறொரு தேரில் ஏறிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான். அவர்களும் அவ்விதமே செய்ய இந்திரஜித் வானரர்களின் கண்ணில் படாமல் இலங்கைக்குள் போய் ஒரு தேரில் ஏறிக்கொண்டு போர்க்களத்திற்குத் திரும்பி வந்தான்.


அது கண்டு யாவரும் ஆச்சரியப்பட்டனர். இலட்சுமணனோ இந்திரஜித்தை மேலும் கடுமையாகத் தாக்கலானான். மீண்டும் தேர்ப்பாகனைக் கொன்றான். ஆனால், அத்தேரின் குதிரைகளோ தேர்ப்பாகன் இல்லாமலேயே ரதத்தை லாவகமாகச் செலுத்திச் சென்றன. இந்திரஜித் இலட்சுமணனையும், விபீஷணனையும் தாக்கலானான்.

 விபீஷணனோ கோபமுற்று அவனது தேரை முறித்து குதிரைகளைக் கொன்றான். மீண்டும் இந்திரஜித் தரைமீது நின்று போரிட வேண்டியதாயிற்று. அவன் சக்தி ஆயுதமொன்றை எடுத்து விபீஷணனின்மீது எறிந்தான். இலட்சுமணன் தன் பாணத்தால் அதனை பிசுபிசுத்துப் போகச் செய்தான். அது கண்டு இந்திரஜித் இலட்சுமணனுடன் கடும் போர் புரியலானான்.

அவர்கள் விட்ட பாணங்கள் ஒன்றையொன்று தாக்கி நெருப்புப் பொறிகளைக் கக்கின. அடர்ந்த புகை கிளம்பியது. கடைசியில், இலட்சுமணன் விட்ட சக்திவாய்ந்த ஓர் அம்பு இந்திரஜித்தின் தலையைத் துண்டித்துக் கீழே வீழ்த்தியது.
இதைக்கண்டு விபீஷணன் ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சிஆரவாரம் புரிந்தனர். அரக்கர்களோ அஞ்சி ஓடினர். இலட்சுமணன், விபீஷணன், சுக்கிரீவன், அனுமார் முதலானோர் இராமரிடம் போய் இந்திரஜித் இறந்தானென்று கூறினர்.


அது கேட்டு இராமர் இலட்சுமணனைக் கட்டித் தழுவிக்கொண்டு "இனி இராவணனுக்கு யார் இருக்கிறார்கள்? அவனது முடிவு காலம் வந்து விட்டது" எனக்கூறி தன் மன உணர்ச்சியை வெளியிட்டார். இலட்சுமணனுக்கும், விபீஷணனுக்கும் ஏற்பட்ட காயங்களைக் கழுவி சுசேனன் தக்க சிகிச்சை அளித்தான். இவ்விதமாக வானரர்கள் இந்திரஜித் இறந்ததால் கவலையை ஒழித்துக் களிப்பெய்தனர்.


இந்திரனையே வென்ற இந்திரஜித்தை இலட்சுமணன் கொன்றுவிட்டானென்ற செய்தியைக் கேட்டதுமே இராவணன் மூர்ச்சையடைந்தான். அவன் தன் நினைவைப் பெற்றதும் "ஆகா! இதெல்லாம், சீதையால் வந்த வினைதானே. இப்போதே அவளைக் கொன்று விடுகிறேன்" என எண்ணியவாறே வாளை உருவிக்கொண்டு சீதை இருக்குமிடத்தை நோக்கிச் சென்றான்.


அவனைத் தடுத்து நிறுத்த அவனது மந்திரிகளும், மனைவிமார்களும் முயன்றனர். ஆனால், இராவணன் ‘வீர்’ரென சீதை இருக்குமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். இராவணன் வந்து கொண்டிருக்கும் வேகத்தைக் கண்டு சீதை இனி தான் உயிர் தப்பப்போவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டாள்.

 இதற்குள் சுபார்சுவன் என்ற மந்திரி இராவணனைத் தடுத்து "இதென்ன. ஒரு பெண்ணையா கொல்வது? சீதையை நீங்கள் அடைய முயல்வதுதான் நல்லது. அதை விட்டு விட்டு அவளைக் கொல்ல முயல்வது சரியல்ல. கோபமும், ஆத்திரமும் வந்தால் அதை இராமனிடம் காட்டவேண்டும். இன்று சதுர்த்தசி. நாளையதினம் அமாவாசை. இன்று போருக்குத் தயாராகி நாளை இராமனோடும், இலட்சுமணனோடும் போர் புரியுங்கள்" எனக் கூறினான்.

தன் மந்திரி கூறியதைக் கேட்டு இராவணன் திரும்பிச் சென்றான். தனது சேனாதிபதிகளிடம் "இப்போது நீங்கள் போய் போரிடுங்கள். நாளைய தினம் நான் இராமனையும், இலட்சுமணனையும் கொன்று விடுகிறேன்" என்றான். அரக்கர்படை வானரர்களின் மீது மிகவும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்தது.


இராமர் தனது பாணங்களால் அரக்கர் படையை அழிக்கலானார். இலங்கையைச் சுற்றிலும் அரக்கர்களின் உடல்களே விழுந்து கிடந்தன. அரக்கிகள் போரில் தம் கணவர்கள் இறந்துபோனதற்காக ஓவெனக் கதறி அழுதனர். இலங்கையே ஒரு பெரிய மயானம் போலக் காட்சி அளித்தது. தன் சேனாதிபதிகளை அனுப்பிவிட்டு இராவணன் சற்று காலதாமதம் செய்யவில்லை. உடனேயே போர்க்களத்திற்கு புறப்பட்டான்.

 இராவணன் தேரில் ஏறிக்கொண்டு இராமருடனும், இலட்சுமணனுடனும் போர் புரிய வந்தான். அவனோடு மகாபார்சுவன், மகோதரன், விரூபாட்சன் முதலியவர்களும் வந்தனர். எல்லாருமாக இராமர் இருக்கும் வடக்கு வாசலை நோக்கிச் சென்றனர்.

அரக்கர்கள் போருக்குத் தயாராகி வருவது கண்ட வானரர்களும் போருக்குப் புறப்பட்டனர். இராவணன் தன் அம்புகளால் வானரர்களை அழித்தவாறே இராமரை நோக்கிச் சென்றான். அதைக்கண்ட சுக்கிரீவன் வானரப்படையோடு அரக்கர்களைத் தாக்கலானான். அப்போது விரூபாட்சன் ஒரு யானைமீதேறிக்கொண்டு சுக்கிரீவனை எதிர்க்கலானான். சுக்கிரீவனோ அவனோடு போரிட்டு முதலில் அவனது யானையைக் கொன்றான். பிறகு, அவனையே கொன்று விட்டான்.


இதைக்கண்டு இராவணன் தனது தாக்குதலைக் கடுமையாக்கினான். அரக்கர்கள் அழிய அழிய அவன் கோபம் அதிகரித்தது. இம்முறை மகோதரன் சுக்கிரீவனோடு போர் புரியலானான். சுக்கிரீவனோடு அவனும்  வெகுநேரம் கடுமையாக போர் புரிந்துவிட்டு இறந்து போனான். வானரர்கள் மகிழ்ச்சியாரவாரம் புரிந்தனர்.


இதற்குள் மகாபார்சுவன் அங்கதனின் படைமீது தாக்குதலை ஆரம்பித்தான். அங்கதன் அவனது தாக்குதலை முறியடித்து அவனோடு போர் புரிந்து அவனைக் கொன்றான். தன்னோடு வந்த மூன்று மந்திரிகளும் இறந்தது கண்டு இராவணன் கோபம் கொண்டான். அவன் இராமரைக் கடுமையாகத் தாக்கலானான். இராமரும் கொடிய அஸ்திரங்களைப் பிரயோகித்தார். இப்படியாக கடுமையான போர் நிகழ்ந்தது.


இராமர் இராவணனைத் தாக்கி சற்று நேரமானபின், இலட்சுமணன் தாக்குதலை ஆரம்பித்து இராமரைச் சற்று ஓய்வு கொள்ளச் செய்தான். அவன் இராவணது வில்லை முறித்து தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். விபீஷணன் இராவணனது தேர்க்குதிரைகளைக் கொன்றான். கீழே நின்ற இராவணன் விபீஷணன்மீது சக்தி ஒன்றை பிரயோகித்தான்.

இலட்சுமணன் அதனைத் தடுத்து பயனற்றுப் போகச் செய்தான். இதைக் கண்ட இராவணன் ஆத்திரமடைந்து இன்னொரு சக்தியை விபீஷணனின்மீது விட முயன்றான். ஆனால், இலட்சுமணன் பாணங்களை எய்து இராவணனைத் துன்புறுத்துவே அச்சக்தியை இராவணன் இலட்சுமணன் மீதே விட்டான்.

அது இலட்சுமணனின் மார்பைத் தாக்கவே இலட்சுமணன் கீழே விழுந்து விட்டான். இதைக் கண்டு இராமர் தனது பாணங்களால் இராவணனைத் தாக்கவே அவற்றைத் தாங்க முடியாது இராவணன் ஓடி விட்டான். இலட்சுமணன் விழுந்ததைத் கண்டு இராமர் கலங்கிவிட்டார். என்ன செய்வதென அவர் திகைத்து நிற்கையில் விபீஷணன் "நீங்கள் கவலைப்பட வேண்டாம். அனுமார் இருக்கிறாரே அவர் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து விடுவார்" என்றான்.

அனுமாரும், இலட்சுமணன் விழுந்ததைக் கண்டார். அவருக்கு உடனேயே தான் முன்பு கொண்டு வந்த மூலிகையின் நினைவு வந்தது. மீண்டும் அதனைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்துக் கொண்டார். முன்பு ஒருமுறை அவர் இமயமலைக்குச் சென்றது போலவே இப்போதும் விரைவில் சென்றாக வேண்டும்.


0 comments:

Post a Comment

Flag Counter