
அவர் அதற்காக யோசனை செய்து கொண்டிருக்கவில்லை. அந்தக் குன்றையே பெயர்த்து எடுத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்தார். சுசேனனும் அந்தக் குன்றிலிருந்து தனக்கு வேண்டிய மூலிகைகளை எடுத்துக்கொண்டு இலட்சுமணனுக்குக் கொடுப்பதற்கான மருந்தைத் தயாரித்து அதைக் கொடுக்கலானான். மூலிகைகளின் சாறு இலட்சுமணனின் மூக்கில் பட்டதும் அவனது மயக்கம் போவிட்டது. அவன் மெதுவாக எழுந்து உட்காரவே இராமரும் அவனைக் கட்டித்தழுவிக் கொண்டு "தம்பி, மரணத்தின் வாயில் அகப்பட்ட நீ எனக்கு மீண்டும் அதிர்ஷ்டவசத்தினால் கிடைத்து விட்டாய். நீயும் இல்லாமல் சீதை கிடைத்தும் நான் உயிர் வாழ முடியுமா? போரில் வெற்றி கிடைத்தாலும் எனக்கு அதனால் என்ன பயன்?" எனக்கூறினார்.
அதைக்கேட்ட இலட்சுமணன் "அண்ணா, நீங்கள் இப்படியெல்லாம் மனம் தளர்ந்து போ பேசலாமா? இராவணனைக் கொன்று விட்டு அவனது தம்பி விபீஷணனுக்கு நீங்கள் முடிசூட்டுவதாகக் கொடுத்த வாக்கு என்ன ஆவது? இனியும் என்னைப் பற்றிய கவலை வேண்டாமே. இனி இராவணனைக் கொல்வதில் முயல்வோம்" என்றான்.

இதைக்கண்ட இந்திரனின் தேரோட்டியான மாதலி என்பவன் தேவலோகத்திலிருந்து ஓர் அழகிய ரதத்தையும், கவசத்தையும், வில் அம்புகளையும் கொண்டு வந்து இராமரிடம் கொடுத்தவாறே "இவற்றை தேவேந்திரன் உங்களுக்குக் கொடுக்கும்படி சொன்னார்" என்றான். இராமரும் அவற்றை ஏற்று அத்தேரை வலம் வந்து அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
இராமருக்கும் இராவணனுக்கும் இடையே கடும்போர் மூண்டது. ஒருவர் எய்யும் அஸ்திரம் மற்றவரது எதிர்த்தாக்குதலால் பயனற்றுப் போகலாயிற்று. இராவணன் போர் புரிவதில் சளைத்தவனா என்ன? இராமரை திக்குமுக்காட வைத்தான்.
இதன் பிறகு இராமரின் தாக்குதல் கடுமையாகியது. இராவணன் நிலைதடுமாறலானான். அவனது உயிருக்கே ஆபத்து என்னும் நிலையும் ஏற்பட்டது. அப்போது அவனது தேரோட்டி தேரை யுத்த களத்தில் இருந்து வேகமாக ஓட்டிக் கொண்டு வேறு புறம் செல்லலானான்.
இதைக்கண்டு இராவணனுக்கு தன் தேரோட்டியின் மீது கோபம் வந்து விட்டது. அவனைப் பார்த்து "என்னடா இது? என்னை நீ போர் புரியத் தெரியாதவனென்றா எண்ணி விட்டா? உடனேயே ரதத்தைப் போர்க்களத்திற்குக் கொண்டு போ" எனக் கூறினான்.
அப்போது தேரோட்டியும் "மகாராஜா, நான் போர் விதிகளின்படியே தேரைச் சற்று விலக்கி ஓட்டினேயல்லாது வேறு எந்த வகையான தீய எண்ணமும் கொண்டு இவ்விதம் செய்யவில்லை. இனி நீங்கள் என்ன கூறினாலும் அப்படியே செய்கிறேன்" என்றான். அது கேட்டு இராவணனது கோபம் தணிந்தது. அவன் தன் தேரோட்டியிடம் "இந்த இராமனது தாக்குதல் சற்று கடுமையாகத்தான் இருந்தது. ஆயினும் இப்போது தேரை இராமனிருக்கும் இடத்திற்கே ஓட்டிச் செல்" எனக் கூறினான்.

தன் தேரை ஓட்டும் மாதலியிடம் அவர் "நான் இம்முறை இராவணனைக் கொல்லப் போகிறேன். நீ மட்டும் தேரைக் கவனமாக ஓட்டு" எனக் கூறினார். இராமரது தேரை அவன் வேகமாகச் செலுத்தினான். தேர் சென்ற வேகத்தில் தூசிப்படலம் கிளம்பி இராவணனது தேரைச் சூழ்ந்து மறைத்தது. இராவணன் ஆத்திரம் கொண்டு இராமரிருக்கும் திசையை நோக்கி அம்புகளை எய்தான். இராமர் அவற்றையெல்லாம் இந்திரன் கொடுத்தனுப்பிய அம்புகளைக் கொண்டு எதிர்த்து பயனற்றதாகப் போகச் செய்தார்.
இந்த இருவருடைய போரைப் பார்க்க யாவரும் நின்றனர். வானத்திலும் தேவர்கள் கூடி விட்டனர். இராமரும் இராவணனும் கடுமையாகப் போர் புரிந்தது அதுவே போரின் இறுதி நிலை என்பதை யாவருக்கும் எடுத்துக்காட்டுவது போல இருந்தது.

இப்படியாக இராமர் அவனது தலையை வெட்டி வீழ்த்தியபோது எல்லாம் ஒவ்வொரு புதிய தலையாகத் தோன்றலாயிற்று. இப்படியாகப் போர் ஒரு முடிவு இல்லாது போவதைக் கண்ட மாதலி இராமரிடம் "இவனது தலையைத் துண்டிப்பதால் பயன் ஏதும் இல்லை. இவனது உயிரைப் போக்க நீங்கள் பிரம்மாஸ்திரத்தை உபயோகியுங்கள்" என்றான்.
இதைக்கேட்டு இராமர் கொடிய பாம்பு போலத் தோற்றமளிக்கும் ஓர் அம்பை எடுத்தார். அதனை பிரம்மா தேவேந்திரனுக்காக ஒரு முறை தயாரித்துக் கொடுத்திருந்தார். அது கண்ணைப் பறிப்பது போல பிரகாசித்தது. அதனை வில்லின்மீது வைத்து இராமர் மந்திரத்ததை உச்சரித்து இராவணனது மார்ப்பிற்குக் குறி வைத்து எய்தார்.
அது வெகுவேகமாகப் பாய்ந்து இராவணனது மார்பைத் துளைத்துக்கொண்டு முதுகுப்புறமாக அப்பால் போனது. இராவணனது கையிலிருந்த வில்லும் அம்பும் கீழே விழுந்தது. அவனது சடலம் சாய்ந்தது. ஆவி பிரிந்தது. இதைக் கண்ட அரக்கர்கள் ஓட்டமெடுத்தனர். வானரர்களோ வெற்றி முழக்கம் செய்தனர். ஓடும் அரக்கர்களைத் துரத்தினர். இதே சமயம் தேவர்கள் துந்துபி நாதம் முழக்கினர். மலர்களை வானிலிருந்து சொரிந்தனர்.
இராமரும், சுக்கிரீவனும் அங்கதனும் மகிழ்ச்சியுற்றனர். தாம் இலங்கைக்கு வந்த நோக்கம் கை கூடியதற்காக சந்தோஷமடைந்தனர். அனுமார், விபீஷணன் முதலானோர் இராமரையும் இலட்சுமணனையும் சூழ்ந்து நின்று அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இராமர் விபீஷணனுக்கு ஆறுதல் கூறலானார். "விபீஷணா, இராவணன் எல்லாரையும் போலவா இறந்தான்? போர் புரிந்து கடைசிவரை எதிர்த்து நின்று போர்க்களத்திலேயே உயிர் துறந்தான். போரில் வெற்றி தோல்வி என்பது ஏற்படக்கூடியதுதான். இராவணன் வீர சொர்க்கத்தையே அடைந்துவிட்டான். எனவே நீ கவலைப்பட்டுக் கண் கலங்காதே" இதனைக் கேட்ட விபீஷணன் ஆறுதல் அடைந்து இராவணனுக்கான ஈமச்சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செயலானான். இராமரும் அவனை அவ்விதம் செய்யுமாறு கூறினார்.
இராவணன் இறந்த செய்தி கேட்டதும் அவனது மனைவியர் போர்க்களத்திற்கு அழுது கொண்டே வந்தனர். அவனது உடலைக் கண்டதும் கண்ணீர் பெருக்கியவாறே "விபீஷணன் புத்திமதி கூறியது போல இவர் சீதையை இராமரிடம் ஒப்படைத்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதே. மூவுலகங்களையும் வென்ற இவர் முடிவில் ஒரு மானிடரின் கையால் மடிய வேண்டியதாயிற்றே" எனக்கூறி புலம்பினார்.
இராமர் விபீஷணனைத் தம்மருகே அழைத்து "நீ இவர்களையெல்லாம் மாளிகைக்கு அனுப்பி விடு" என்றார். விபீஷணனும் அவ்விதமே செய்தான்.
சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மீது விரிப்பு விரித்து இராவணனது உடலை அதன் மீது கிடத்தினர். பின்னர் விபீஷணனே அதற்கு நெருப்பு மூட்டினான். ஈரத்துணியோடு ஜலதர்ப்பணம் செய்து முறைப்படி செய்ய வேண்டியது எல்லாம் செய்தான். இராவணனது உடல்பிடி சாம்பலாகியது. போரைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் இராமரது திறமையையும் பராக்கிரமத்தையும் பற்றி புகழ்ந்து பேசியவாறே தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
இராமரும் மாதலியைத் தக்கபடி கௌரவித்து அவனைத் தேரோடு தேவலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதன் பிறகு அவர் சுக்கிரீவனோடு பலவாறு பேசித் தன் நன்றியைத் தெரிவித்தவாறே தாம் முகாம் செய்திருந்த இடத்தை அடைந்தார். இலட்சுமணனும் அவர்களோடு சென்றான். அப்போது இராமர் "தம்பீ, இனி நாம் செய்ய வேண்டிய வேலை விபீஷணனை இலங்கையின் அரசனாக ஆக்குவதே. எனவே, அதற்கான ஏற்பாடுகளை கவனி" என்றார்.
இலட்சுமணன் வானரர்களைக் கொண்டு தங்கக் குடங்களில் சமுத்திர நீரைக் கொண்டு வரச் செய்தான். விபீஷணனை அரியாசனத்தில் அமர்த்தி அந்த நீரால் அபிஷேகம் செய்தான். விபீஷணனின் மந்திரிகள் அவனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினர்.
விபீஷணனும் யாவர் மனமும் மகிழும்படி இன்சொல் கூறி ஆட்சியை ஏற்றான். அவனுக்கு அர்க்கர்கள் பல பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்தினர். அவன் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு இராமருக்கும் தன் காணிக்கையாகப் பல பொருள்களை அளித்தான்.

0 comments:
Post a Comment